120 பஹதுர்: திரை விமர்சனம்
இந்தியில் வரலாற்று போர் கதையில் வெளியாகியுள்ள 120 பஹதுர் திரைப்படத்தின் விமர்சனம் இங்கு காண்போம்.

கதைக்களம்
1962ஆம் ஆண்டு மோசமான காயங்களுடன் நபர் ஒருவர் இந்திய இராணுவத்திடம் வந்து சேருகிறார். அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க படத்தின் கதை தொடங்குகிறது. இந்தியாவின் எல்லையில் சீனா இராணுவத்தைக் கொண்டு ஊடுருவி ஆக்கிரமித்து வருகிறது.
அதனைத் தடுக்க, மேஜர் ஷைதான் சிங் பாடியின் சார்லி கம்பெனி படை களமிறங்குகிறது. ஷைதான் ரெசாங் லா வழியாகதான் சீனப்படை ஊடுருவும் என்றும், அதனால் அங்கு பல வீரர்களை அனுப்ப வேண்டும் என்றும் உயரதிகாரிகளிடம் தனது கணிப்பை கூறுகிறார்.

ஆனால், அவர்கள் ஷைதானின் கணிப்பை உதாசீனப்படுத்தி வீரர்களின் எண்ணிக்கையைக் கூட்ட மறுக்கின்றனர். பின்னர் மேஜர் ஷைதான் எச்சரித்தது போலவே நடக்க, உடனடியாக அவரது தலைமையிலான படை அனுப்பப்படுகிறது.
அங்குள்ள சிறிய கிராமத்தை சூறையாடிய சீனப்படையை இந்திய வீரர்கள் தாக்கி கொல்கின்றனர். அப்போது சுமார் 3000 வீரர்களைக் கொண்ட சீனப்படை ஊடுருவதை ஷைதான் காண்கிறார். அவர் இந்திய இராணுவத்திடம் பெரும்படையை அனுப்ப கேட்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.

என்றாலும், ஷைதான் 120 பேர் மட்டுமே உள்ள படையைக் கொண்டு சண்டையிட களத்தில் இறங்குகிறார். அதன் பின்னர் அவர்கள் சீன ஊடுருவலை எப்படி தடுத்தார்கள்? அவர்களுக்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
1962யில் நடந்த இந்தோ-சீனா போரின் உண்மைச் சம்பவத்தை தழுவி ரஸ்னீஷ் காய் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்திய இராணுவப்படை பாகிஸ்தானுடன் சண்டையிட்ட பல படங்களை பார்த்திருப்போம்.
ஆனால் சீனப்படையுடன் போரிட்ட சம்பவங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளது இந்த திரைப்படம். பர்ஹான் அக்தருக்காகவே எழுதப்பட்ட கதைபோல, மேஜர் ஷைதான் சிங் கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் பொருந்தி போகிறார்.

எப்போதும் இறுக்கமான நபராக இல்லாமல், தனது படை வீரர்களுடன் கலகலப்பாக பேசி மனதளவில் அவர்களின் இறுக்கத்தையும் குறைக்கும் நபராக இருக்கிறார் பர்ஹான். அவரது படைக்கு ரேடியோ ஆபரேட்டராக வரும் ஸ்பார்ஷ் வாலியா (ராம்சந்தர்) இந்த கதை கூறுவதுபோல் படம் ஆரம்பிக்கிறது.
அவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் இவர் எப்படி படையுடன் ஒன்றி வேலை செய்வார் என்று ஆரம்பிக்கும். ஆனால் இறுதியில் அவர் செய்யும் செயல் கூஸ்பம்ஸ்மொமெண்ட். சாக்லேட்டுக்காக விளையாட்டாக சண்டையிடும் வீரருக்கு தரமாட்டேன் என்று மறுக்கிறார் சக வீரர். ஆனால் அவர் இறக்கும் தருவாயில் அந்த சாக்லெட்டை தருவது செம எமோஷனல் டச்.

போர் சார்ந்த படங்களுக்கே உரித்தான வசனங்கள், காட்சியமைப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. நாம் சண்டையிடுவது மண்ணுக்காக அல்ல; தாய்மண்ணுக்காக என்று கூறும் உணர்ச்சிமிகு வசனத்தை உதாரணமாக கூறலாம்.
சீன இராணுவத்தினர் அறுசுவை உணவுகளை உண்டு போரிடுவர். அவர்களைப் போல் இந்தியப்படையினருக்கு போதைய ஆயுத உதவிகள் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் சாப்பிடுவதற்கு கூட கூழ் போன்ற சூப் உணவைத்தான் பெரும்பாலான நேரங்களில் அருந்தி சண்டையிடுகின்றனர்.

இருந்தாலும் தாய்மண்ணுக்காக போராட வேண்டும் என்ற உணர்வே அவர்களுக்கு உடல்வலுவையும், மனவலிமையையும் கொடுக்கிறது என்பதை இயக்குநர் காட்சிப்படுத்திருப்பார். ஹீரோ பர்ஹான் மட்டுமே சண்டை செய்வார் என்று காட்டாமல், அவரது படையில் உள்ள ஒவ்வொரு வீரருமே ஹீரோவுக்கு நிகராக சண்டையிடுவதுபோல் ஆக்ஷன் காட்சிகளை அமைத்தது மிகச்சிறப்பு.
ராஷி கன்னா ஒரு இராணுவ மேஜரின் மனைவி எப்படி வலிகளை சுமந்து வாழ்வார் என்பதை தனது கதாபாத்திரம் மூலம் பிரதிபலிக்கிறார். 120 பேர் கொண்ட படை எப்படி 3000 பேர் படையை வீழ்த்த முடியும் என்று எழும் கேள்விக்கு தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் பதிலளிக்கிறார் இயக்குநர்.

அமித் திரிவேதி, சலிம் சுலைமானின் பாடல்கள் மற்றும் சதீஷ் ரகுநந்தனின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். டெட்சுயோ நகாடாவின் கேமரா ஒர்க் போரை கண்முன் நிறுத்துகிறது.
க்ளாப்ஸ்
கதைக்களம்
நேர்த்தியான திரைக்கதை
நடிகர்களின் பங்களிப்பு
வசனங்கள்
மேக்கிங்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த 120 பஹதுர் திரைப்படம் இந்திய நாட்டிற்காக உயிரைவிட்ட இராணுவத்திற்கு ஒரு சமர்ப்பணம். கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் காண வேண்டும்.
