45 : திரை விமர்சனம்
ஷிவா ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள 45 கன்னட திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்
வினய் (ராஜ் பி.ஷெட்டி) தனது அம்மா, காதலி மேகனா என நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் வேலைக்கு அவசரமாக டூ வீலரில் செல்லும் வினய், சிக்னலில் நின்று கிளம்பும்போது போன் பேசிக்கொண்டே சாலையைக் கடக்க, குறுக்கே வந்த நாய் மீது மோதிவிட்டு செல்கிறார்.
அந்த நாய் அங்கேயே இறந்துவிட, அவரும் லாரி மோதி உயிரிழக்கிறார். பின்னர்தான் அது கனவு என்று தெரிய வருகிறது. இந்த முறை போன் பேசாமலேயே சென்றாலும் கனவில் வந்தது போல் நாய் குறுக்கே வந்து அடிபட்டு இறக்கிறது.

இதனால் வினய்யை அந்த நாய்க்கு சொந்தக்காரரான டான் ராயப்பா (உபேந்திரா) கடத்தி, இன்னும் 45 நாட்களில் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி அனுப்புகிறார். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அவரை நேரில் வந்து பயமுறுத்துகிறார் ராயப்பா. தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள பெரிய பெரிய டான்களை அணுகிறார் வினய்.
ஆனால் அவர்கள் எல்லோரையும் ராயப்பா கொன்றுவிட, இனி கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என வினய் கதறி அழுகிறார். அப்போது ஷிவண்ணா (ஷிவா ராஜ்குமார்) அவரது வாழ்வில் வருகிறார். ராயப்பாவிடம் இருந்து அவர் எப்படி வினய்யை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
ஷிவா ராஜ்குமார், உபேந்திரா என இரு மாஸ் ஹீரோக்கள் இருந்தாலும் இந்த கதைக்கு ஹீரோ ராஜ் பி.ஷெட்டிதான். அவருக்கு வரும் பிரச்சனை, அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கூறுவது வாயிலாக ஒரு தனி மனிதனின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார் இயக்குநர்.
அதற்கு அவர் கையில் எடுத்துக் கொண்ட கருட புராணம். அவர் முதல் பாதியில் வைத்த காட்சி அமைப்புகளை பார்க்கும்போதே என்ன கூற வருகிறார் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், ஆழ்ந்து பார்க்காமல் படமாக பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயங்கள் படத்தில் நிறைய உள்ளன. உபேந்திரா தனது தோற்றம், அந்நியன் போல் மாறி மாறி பேசும் டயலாக் டெலிவரி ஆகியவற்றின் மூலம் மிரட்டுகிறார்.

அவரிடம் இருந்து ராஜ் பி.ஷெட்டி எப்படி தப்பிப்பாரோ என்ற பதற்றம் ஒருபுறம் இருந்தாலும், லாஜிக்கல் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு நாய்க்காக மனிதனை கொல்ல இவ்வளவு வெறியுடன் ஒருவன் இருப்பானா என்று நாம் கேள்வி கேட்போம் என்பதற்காகவே, படத்தின் பல இடங்களில் வரும் கதாபாத்திரங்களே அதனை கேட்கும்படி செய்தது நல்ல ரைட்டிங்.
முதல் பாதி என்ன நடக்கிறது என்கிற குழப்பத்திலேயே முடிய, இரண்டாம் பாதியில் ஷிவண்ணாவின் கதாபாத்திரம் நாம் மறந்துவிட்ட விஷயங்களை நியாபகப்படுத்துகிறது. அவரது ஸ்கிரீன் பிரெஸென்ஸ் ஈர்ப்பதால் தொய்வான திரைக்கதையைக் கூட ரசிக்கும்படி கொண்டு செல்கிறது.
குறிப்பாக கிளைமேக்சில் ஷிவா ராஜ்குமார் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். மேலும், அவர் கூறும் கருத்துக்கள் செம. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு தேவையான கதையை பேண்டஸி படமாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா.

கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை என ஆல்ரவுண்டராக இயக்குநர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். எனினும் கிராபிக்ஸ் காட்சிகள் பிசுறு தட்டுகிறது. கதையோடு ஒன்றி பார்ப்பவர்களுக்கு அது உறுத்தலாக தெரியாது. ராஜ் பி.ஷெட்டி அப்பாவி இளைஞர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
சண்டைக்காட்சியையும் சிறப்பாக கையாண்டுள்ளார். அவருடைய சூப்பர் ஹிட் படமொன்றின் ரெபெரென்சை வைத்து இயக்குநர் ரசிகர்களை கவர முயன்றுள்ளார். முதல் பாதிவரை கடவுள் முருகனை காட்டிவிட்டு, இரண்டாம் பாதியில் சிவனை வைத்து கதை நகர்த்தி கொண்டு சென்றது ஏன் என்றுதான் புரியவில்லை.
க்ளாப்ஸ்
ஷிவா ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி
இயக்குநர் சொல்ல வந்த கருத்து
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம்
எல்லோருக்கும் கனெக்ட் ஆகுமா என்பது கேள்விக்குறி
மொத்தத்தில் இந்த 45 சொல்ல வந்த கருத்துக்காக பார்க்க வேண்டிய படம்தான். ஆனாலும் பொறுமை அவசியம்.

30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri