ஆரியன் திரை விமர்சனம்
இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் ஆரியன். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
நெறியாளராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் (நயினா), அவருடைய நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கும் நடிகரை பேட்டி எடுத்து வருகிறார். அந்த நேரத்தில் திடீரென நிகழ்ச்சிக்குள் நுழையும் செல்வராகவன் (அழகர் என்கிற நாராயணன்) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரை துப்பாக்கியால் காலில் சுடுகிறார். மொத்த தொலைக்காட்சியும், அந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்பவர்களும் உறைந்து போகிறார்கள்.
பின், தான் ஒரு எழுத்தாளர் என்றும், தன்னுடைய படைப்புக்கு மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறார் செல்வராகவன். இனி வரும் அடுத்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு கொலைகள் செய்யப்போவதாக கூறி, முதலில் தன்னை தானே சுட்டுக் கொள்கிறார்.

இந்த கேஸை விசாரிக்க வருகிறார் கதாநாயகன் விஷ்ணு விஷால் (அறிவுடை நம்பி). செல்வராகவன் சொன்னது போலவே தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அவர் சொன்ன பெயரில் உள்ள ஒரு நபர் கொலை செய்யப்படுகிறார்.
இதெல்லாம் எப்படி நடக்கிறது? இறந்து போன ஒருவரால் எப்படி தொடர் கொலைகளை செய்ய முடியும்? அதை ஏன், எதற்காக அவர் செய்கிறார் என்கிற நோக்கத்தை விஷ்ணு விஷால் கண்டறிந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் பிரவீன் கே எடுத்துக்கொண்ட கதைக்களம், அதை திரைக்கதையில் வித்தியாசமாக சொல்ல நினைத்த விதம் சிறப்பு.
எப்போதுமே சீரியல் கில்லிங் கிரைம் திரில்லர் படம் என்றாலே கொலையாளி யார் என தேடுவதுதான் திரைக்கதையாக இருக்கும். ஆனால், இப்படத்தில் கொலையாளி செல்வராகவன்தான், ஆனால் அவர் இறந்த பின்னும் எப்படி தொடர் கொலைகள் நடக்கிறது என்பதை காட்டிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், அதை இன்னும் பதட்டத்துடன் காட்டியிருக்கலாம். சில இடங்களில் நமக்கே அடுத்த காட்சி இதுதான் என கணிக்க முடிகிறது.

படத்தின் கிளைமாக்ஸில் இயக்குநர் சொல்ல வந்த கருத்துக்கு பாராட்டுக்கள். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அதுவே ஆகும். அதற்காக ஒருவர் கொலை செய்வது என்பது ஏற்புடையது அல்ல.
படத்தில் வரும் காதல் காட்சிகள் மற்றும் விவாகரத்து காட்சிகள் படத்திற்கு தேவையா என்று தோன்றுகிறது, அதை தவிர்த்திருக்கலாம். மேலும், கதாபாத்திரங்களுடன் நம்மால் கனெக்ட் ஆக முடியவில்லை என்பது படத்தின் மிகப்பெரிய குறையாகும்.
கதாநாயகன் விஷ்ணு விஷாலின் நடிப்பு படத்திற்கு பிளஸ் பாயிண்ட். தான் என்ட்ரி கொடுத்த ஷாட்டில் இருந்து கிளைமாக்ஸ் வரை எந்த ஒரு குறையும் அவர் வைக்கவில்லை. அதே போல் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு. மற்ற கதாபாத்திரங்களில் வந்த அனைவரும் தங்களுடைய பங்கை நன்றாக செய்துள்ளனர்.

படத்தின் மற்றொரு கதாநாயகன் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை. பாடல்கள் பெரிதாக படத்தில் இல்லை என்றாலும், தனது பின்னணி இசையால் திரைக்கதைக்கு வலுவூட்டுகிறது. அதற்கு அவருக்கு தனி பாராட்டு.
இதை தவிர படத்திற்கு வலுவூட்டும் விஷயங்கள் என்று பார்த்தல், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுதான். இரண்டுமே படத்தை சிறப்பாக காட்டியுள்ளது. மேலும், ஒலி வடிவமைப்பும் இப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
பிளஸ் பாயிண்ட்
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இயக்குநர் பிரவீன் கே எடுத்துக்கொண்ட கதைக்களம்.
கொலையாளியை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியது.
பின்னணி இசை.
கிளைமாக்ஸில் சொல்ல வந்த கருத்து.
மைனஸ் பாயிண்ட்
கதாபாத்திரங்களுடன் நம்மால் கனெக்ட் ஆக முடியாமல் போனது.
இன்னும் பதட்டத்துடன் திரைக்கதை இருந்திருக்க வேண்டும்.
யூகிக்க முடிந்த சில காட்சிகள்.
மொத்தத்தில், ஆரியன் சர்ப்ரைஸ் செய்யவில்லை என்றாலும், ஏமாற்றவில்லை. கண்டிப்பாக பார்க்கலாம்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    