நக்கல், நையாண்டி நாயகன் கவுண்டமணி வாழ்க்கை வரலாறு
தமிழ் சினிமாவின் முக்கிய காமெடியன் கவுண்டமணி.
தனியாக காமெடி செய்து கலக்கியதை விட செந்திலுடன் படங்களில் இவர்கள் செய்த காமெடிகள் இப்போதும் ரசிக்கப்படுகிறது.
பிறப்பு
சுப்பிரமணி என்ற இயற்பெயர் கொண்ட கவுண்மணி 1939ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி கருப்பையா என்பவருக்கும் அன்னாம்மாவிற்கும் மகனாக பிறந்தவர். ஆரம்ப வாழ்க்கை ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துவந்தார் கவுண்டமணி.
ஒரு நாடகத்தில் அவர் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது பிரபலமானதால் அன்று முதல் அவரை கவுண்டமணி என அழைக்கத் துவங்கினர்.
கவுண்டமணி பயணம்
26வது வயதில் நாடக உலகில் இருந்து சினிமா உலகில் கால்பதித்த கவுண்டமணி ஆரம்பத்தில் தனியாகவே காமெடி காட்சிகள் நடித்து வந்தார். பின் செந்திலுடன் கூட்டணி அமைத்து படிப்படியாக பல வெற்றிப் படங்களில் இருவரும் சேர்ந்து காமெடி செய்ய ஒரு முக்கிய கூட்டணியாக பார்க்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வந்த ‘வாழைப்பழம் காமெடி’, ‘வைதேகி காத்திருந்தால்’ திரைப்படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ திரைப்படத்தில் ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா’, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவைப் பதிவுகளாக இருந்து வருகிறது.
நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் மேன்மை பொருந்திய குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பிரபலமான டயலாக்குகள்
நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி.’ (சூரியன்)
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.’ (சூரியன்)
‘நான் ரொம்ப பிஸி.’ (சூரியன்)
‘நாட்டுல இந்தத் தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா.’ (மன்னன்)
‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.’ ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புட சாமி.’ (மாமன் மகள்)
‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை.’ (வைதேகி காத்திருந்தால்)
‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’ (வைதேகி காத்திருந்தால்)
போன்ற டயலாக்குகள் மக்களிடம் அதிகம் பிரபலமானவையாகும்.
நாடகத் துறையில் நடிக்க தொடங்கி சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனையாளராக வலம் வருகிறார் கவுண்டமணி. சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் கவுண்டமணிக்கு 2 மகள்கள் உள்ளனர்.