மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த மனோரமா ஆச்சியின் வாழ்க்கை வரலாறு
காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்ற நிலையை முதன்முதலாக மாற்றி பெண்களாலும் காமெடியில் கலக்க முடியும் என நிரூபித்தவர் மனோரமா.
இவரை உதாரணமாக வைத்து இன்று தமிழ் மொழியில் கலக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள்.
பிறப்பு
கோபிசந்தா என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1943ம் ஆண்டு மே 26ம் தேதி மன்னார்குடியில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
வறுமை மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக தாயராருடன் காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தார்.
ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
நாடகத் துறை அவரது ஊரில் அந்தமான் காதலி என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்ட சரியாக பாடவில்லை என்பதால் மனோரமாவை அதில் நடிக்க வைத்தார்கள்.
அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள், இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்பயணம்
நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இரண்டு பட வாய்ப்புகள் வந்து அதில் ஒப்பந்தம் ஆக பின் சில காரணங்களால் அந்த படங்கள் நின்றிருக்கிறது.
இதனால் மனமுடைந்த இருந்த மனோரமா, கவிஞர் கண்ணதாசன் 1958ம் ஆண்டு தயாரித்த மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா துரையில் அறிமுகமானார்.
முதல் படத்தில் நடித்த பிறகும் பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்து சாதனைப் படைத்தார்.
முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என 5 பேருடனும் நடித்த பெருமை மனோரமாவிற்கு மட்டுமே உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் நடித்து முத்திரைப் பதித்துள்ளார். அதோடு, காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
திருமண வாழ்க்கை
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார்.
அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
விருதுகள்
தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’. சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
இறப்பு
பல சாதனைகளை புரிந்து நடிகைகளுக்கு ஒரு உதாரணமாக இருந்த நடிகை மனோரமா அவர்கள் 2015ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உயிரிழந்தார்.