நேரில் பார்த்தால் மக்கள் பயந்து ஓடுவாங்க.. வில்லத்தனத்திற்கு பெயர்பெற்ற எம்.என் நம்பியாரின் வாழ்க்கை வரலாறு
தமிழ் சினிமாவில் வில்லத்தனம் என்றாலே எல்லோர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது நம்பியராக தான் இருக்கும். அந்த அளவுக்கு வில்லன் ரோல்களின் ரோல் மாடல் எம்.என் நம்பியார். "சரியான நம்பியார் நீ" என தான் நெகடிவ் ரோல்களில் நடிப்பவர்களை விமர்சிக்கிறார்கள்.
மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற அவரது நிஜ பெயர் சுருங்கி தான் எம்.என் நம்பியார் என்றாகியது. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் வெறுத்த பல வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டியவர் தான் இவர். அவரது வாழ்க்கை வரலாற்று பற்றி தற்போது பார்க்கலாம்.
பிறப்பு
கேரளாவின் கண்ணூர் பகுதியில் கடந்த 1919 மார்ச் 7ம் தேதி பிறந்தார் MN நம்பியார். அவர் சின்ன வயதாக இருக்கும் போதே அப்பா கெழு நம்பியார் மரணமடைந்த நிலையில், அதன் பின் ஊட்டியில் இருக்கும் அக்கா மற்றும் மாமா உடன் தங்கி பள்ளி படிப்பை படித்தார்.
அங்கு 5ம் வகுப்பு வரை படித்த அவர் 13 வயதிலேயே நடிப்பு மீது அதிகம் ஆர்வம் வந்ததால் நம்பியார் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாவில் இணைந்தார். அங்கு நடிப்பு மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டதாக நம்பியார் பல முறையை பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
சினிமா பயணம்
டிராமா ட்ரூப்பில் பணியாற்றியதற்கு மாதம் 3 ருபாய் சம்பளம் கிடைத்தது. அதில் ஒரு ருபாய் தனக்கு வைத்துக்கொண்டு, 2 ரூபாயை அம்மாவுக்கு அனுப்பிவிடுவாராம்.
1935ல் வெளிவந்த பக்த ராமதாஸ் தான் MN நம்பியாரின் முதல் படம். தமிழ் மற்றும் ஹிந்தியில் அது வெளிவந்திருந்தது. டி.கே.சம்பங்கி உடன் காமெடியனாக நம்பியார் நடித்து இருந்தார்.
23 வயதாகும் போது நவாப் குழுவில் இருந்து விலகிய நம்பியார் அதன் பிறகு சக்தி நாடக சபாவில் இணைந்து அங்கு வில்லனாக நடிக்க தொடங்கினார். முதல் படம் நடித்து 9 வருடங்கள் கழித்து தான் இரண்டாம் பட வாய்ப்பு கிடைத்தது. ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வித்யாபதி என்ற படத்தில் நாராயண பாகவதர் ரோலில் மொட்டை அடித்துக்கொண்டு நடித்து இருப்பார் நம்பியார்.
1947ல் எம்ஜிஆர் உடன் ராஜகுமாரி என்ற படத்தில் நடித்த நம்பியாருக்கு அதன் பின் ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தது.
வில்லனிசம்
சர்வாதிகாரி என்ற படத்தில் எம்ஜிஆருக்கு வில்லனாக நம்பியார் நடித்தார். அதன் பிறகு தான் எம்ஜிஆருக்கு வில்லன் என்றால் நம்பியார் தான் என ரசிகர்கள் யோசிக்கும் நிலை வந்தது.
எம்ஜிஆர் ஹீரோவாக வளர்ந்த அதே அளவுக்கு வில்லனாக நம்பியாரும் வளர்ந்தார். இருவரும் போடும் வாள் சண்டையை பற்றி சொல்லவா வேண்டும். அந்த அளவுக்கு பேமஸ் அது. மற்ற பல நடிகர்களுக்கும் வில்லனாக அவர் நடித்து உள்ளார்.
பல தலைமுறை நடிகர்களுக்கு வில்லனாக நடித்து எம்.என்.நம்பியார் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தையே படைத்திருக்கிறார்.
அவரை நேரில் பார்த்தால் மக்கள் பயந்து ஓடுவார்களாம், பெண்களும் திட்டி தீர்ப்பார்களாம். அது தான் எனது வில்லத்தனமான நடிப்புக்கு கிடைத்த வெற்றி என நம்பியார் பெருமை கொள்வார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நம்பியார், குணச்சித்திர ரோல்களிலும் ஏராளமாக நடித்து இருக்கிறார். 2006ல் விஜயகாந்த் உடன் அவர் நடித்த சுதேசி தான் அவரது கடைசி படம்.
மரணம்
நம்பியார் 19 நவம்பர் 2008ல் சென்னையில் 88 வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக 4 மாதங்கள் உடல்நலக்குறைவாக இருந்த அவர் காலமானார்.