என்றும் மனதில் இருந்து அழியா நடிகர் ரகுவரன்.. வாழ்க்கை வரலாறு
ரகுவரன்
தமிழ் சினிமாவின் சிறந்த டாப் 3 வில்லன்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக ரகுவரன் இருப்பார். பாட்ஷா, முதல்வன் போன்ற படங்களை அதற்கு உதாரணமாக கூறலாம்.
அதே போல் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவை ஆண்ட நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரகுவரனின் வாழ்க்கை வரலாறு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
வாழ்க்கை வரலாறு
நடிகர் ரகுவரன் 1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி வேலாயுதம் நாயர் - கஸ்தூரி எனும் தம்பதிக்கு மகனாக பிறந்துள்ளார். கேரளாவில் உள்ள கொல்லங்கோடு தான் இவர் பிறந்த ஊராகும்.
இதன்பின் ரகுவரனின் தந்தை தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூருக்கு தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளனர்.
கோயம்புத்தூரில் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த ரகுவரன் அதன்பின் 1982ம் ஆண்டு வெளிவந்த ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து கைநாட்டு, மைக்கேல் ராஜ், கூட்டுப்புழுக்கள், குற்றவாளி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஹீரோவாக பெரிதளவில் பிரபலமாகாத ரகுவரன் வில்லன் ரோலில் நடிக்க துவங்கிய பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஹீரோ வில்லன் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடிய நபர் ரகுவரன்.
1996ஆம் ஆண்டு நடிகை ரோஹிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திரையுலக உச்சத்தில் இருந்த ரகுவரன் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட ரோஹிணியும் அவரை விட்டு பிரிந்து சென்றார்.
மதுவிற்கு அடிமையானதன் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயல் இழந்து நடிகர் ரகுவரன் கடந்த 2008ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகிற்கு பெரும் இழப்பு ஆகும்.