ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47 (தெலுங்கு): திரை விமர்சனம்
வெங்கடேஷ் டகுபதி, ஸ்ரீநிதி ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47 தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
சிட்டிபாபு (வெங்கடேஷ்) தனது மனைவி ஸ்வர்ணா (ஸ்ரீநிதி ஷெட்டி), மகள் சம்பூர்ணா, ஷர்வா அகியோருடன் நடுத்தர குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். சுமார் 4 லட்சம் கடன் உள்ள நிலையில், மகனுக்கு இருக்கும் இதய பிரச்சனைக்கு இரண்டு லட்சம், மகள் படிப்பிற்கு பணம் என சிட்டிபாபு நெருக்கடிக்கு உள்ளாகும் சூழலில் வேலையும் பறிபோகிறது.
இந்த சூழலில் அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ.100 கோடி ஜாக்பாட் பரிசு விழுகிறது. இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் சிட்டிபாபுவின் குடும்பம், பரிசு விழுந்ததை ஹோல்டிங்சை வைத்து விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் சோஷியல் மீடியாவில் சிட்டிபாபு பிரபலமாகிறார்.

300 வில்லாக்கள் கொண்ட கேட்டேட் கம்யூனிட்டியில் 47வது நம்பர் வீட்டையும் சிட்டிபாபு வாங்கிவிடுகிறார். ஆனால், பணம் கிடைக்க ஒரு மாத காலம் ஆகும் என்பதால் ரியல் எஸ்டேட் தரகர் ரகு பாபுவின் பணத்தில் பணக்கார வாழ்க்கையை சிட்டிபாபுவின் குடும்பம் வாழத் தொடங்குகிறது.
அதே சமயம் வட இந்தியாவில் பணக்கார வீடுகளில் வேலைக்கு சேர்ந்து, குடும்பத்தையே கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தெலங்கானாவிற்கு வந்துள்ளதாக போலீஸ் யூகிக்கிறார்கள்.

பிரபலமாக இருக்கும் சிட்டிபாபுவின் குடும்பத்தை குறி வைக்கும் அந்த கும்பல், இருவரை அந்த வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி சரியான சமயத்திற்காக காத்திருக்கிறது. சிட்டிபாபுவின் குடும்பம் அந்த கொடூர கும்பலிடம் இருந்து எப்படி தப்பித்தது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சங்கராந்திகி வஸ்துனம் படத்தின் மெகாஹிட் வெற்றியைத் தொடர்ந்து வெங்கடேஷ் நடித்திருக்கும் படம் இது. அப்படத்தில் இருந்த அதே எனர்ஜியுடன் வெங்கடேஷ் கலக்கியிருக்கிறார்.
முதல் பாதியில் காமெடி என்டர்டைன்மென்ட் ஆக செல்ல வெங்கடேஷ் பெரிதும் உதவியிருக்கிறார். சத்யா, ரகுபாகு ஆகியோருடன் அவர் சேர்ந்து செய்யும் காமெடிகள் செம அலப்பறை. அதிலும் சத்யா கொடுக்கும் குடைச்சல்களை சமாளிக்க வெங்கடேஷ் போராடுவதெல்லாம் சிரிப்புவெடி.

அதே சமயம் ஆக்ஷனில் சற்று அடக்கி வாசித்திருக்கிறார் வெங்கடேஷ். முதல் பாதிவரை ஸ்ரீநிதி ஷெட்டி கதாபாத்திரம் மீதான ஒரு உறுத்தல் கேள்விக்கு இரண்டாம் பாதியில் நமக்கு பதில் கிடைப்பது ஆறுதல். இன்னசன்ட் கதாபாத்திரமாக ஸ்ரீநிதி சிறப்பாக நடித்துள்ளார். யுவினா பார்த்தவி, ராஜா ப்ரஜ்வால் இருவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர்.
உண்மை தெரிய வந்து ராகு பாபு கொடுக்கும் ஷாக் ரியாக்ஷனும், இன்டர்வலில் சத்யா பதறுவதும் திரையரங்கில் சிரிப்பலை. நாரா ரோஹித், ராவ் ரமேஷ், சச்சின் கடேகர், பிரம்மாஜி, உதய்பிர் சந்து ஆகியோர் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சரியாக தந்துள்ளனர். நிவேதா பெத்துராஜ் கிளாமர் டால் ஆக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

டிம்பிள் ஹயாதி ஒரு பாடலுக்கு வந்து கலகலப்பாக்குகிறார். லாஜிக்கிற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல்தான் திரைக்கதை, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முதல் பாதி பரபரவென பறக்கிறது; இரண்டாம் பாதியில் சில குறைகள் இருந்தாலும் காமெடி, ஆக்ஷன் தூக்கி நிறுத்துகின்றன.
சில தமிழ் படங்களின் கலவையாக இப்படம் இருந்தாலும், சுவாரஸ்யமாக செல்லும் திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கிறது. குண்டூர் காரம் படத்தில் சறுக்கியிருந்தாலும், இப்படத்தில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தன்னை சக்ஸஸ்புல் இயக்குநர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். தமனின் இசை ஓகே ரகம். ரவி கே சந்திரனின் கேமரா பளபளப்பு.
க்ளாப்ஸ்
- வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி
- காமெடி
- சுவாரஸ்ய திரைக்கதை
பல்ப்ஸ்
- லாஜிக் மீறல்கள்
- சில படங்களின் கலவையாக தோன்ற வைக்கும் காட்சிகள்
மொத்தத்தில் இந்த ஆதர்ஷ குடும்பம் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்து கொடுத்துள்ளது. லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.
