அஜித் கொஞ்ச யோசிங்க...ரசிகர்களின் ஆதங்கத்தை கேளுங்க- தீவிர ரசிகர்களின் விருப்பம்
அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவருக்கு என்று பல லட்சம் இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். என்ன படம் கதை இயக்குனர் யார் என்று தான் ஒருநாளும் அஜித் ரசிகர்கள் பார்த்ததே இல்லை, அஜித் படம் அவ்வளவு தான் முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்.
இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் நீங்கள் அவர்களின் ரசனையையும் கொஞ்சம் காதுக்கொடுத்து கேளுங்கள் என்பதன் ஆதங்கமாக ரசிகர்கள் வெளிப்படுத்திய கருத்து தான் இது. அஜித் உங்களுக்கு முதலில் இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டம் எப்படி வந்தது என்று பாருங்கள், அது உங்களின் அமர்க்களம் என்ற ஒரு அதிரடியான படத்திற்கு தான், அதை தொடர்ந்து வாலி நெகட்டிவ் கதாபாத்திரம், தீனாவில் கேங்ஸ்டர் என உங்களின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் பெரும் மடங்கு உயர்ந்தது.
அதிலும் உங்களின் தோல்வி படமான ரெட் கூட மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது, அஜித் பல தோல்விகளை கண்டாலும் அவரின் ரசிகர்கள் பலம் ஒருநாளும் குறைந்ததே இல்லை. படத்திற்கு படம் வசூல் சாதனையாகவே இருந்து வந்தது, தன் 50வது படத்தில் எந்த ஒரு கவலையும் இன்றி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கதைக்கு தேவை என்பதால் இறங்கி அடித்தீர்கள்.
அப்போது ஒரு பேட்டியில், இவ்வளவு பெரிய பட்ஜெட் 50வது படம் ஏன் இத்தனை நெகட்டிவ் என கேட்ட போது கூட, நான் ஒன்றும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூலாக பதில் அளித்தீர்கள். ஆனால், வீரம் படம் வந்து ஹிட் ஆனதும், அஜித்திடம் பல மாற்றம், பேமிலி ஆடியன்ஸ் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு அதை நோக்கி பயணித்தீர்கள். வீரம், வேதாளம், விஸ்வாசம் பெரிய ஹிட் என்றாலும், இந்த ஹிட் எல்லாம் அந்ததந்த சமயத்தில் ரெக்கார்ட் ப்ரேக் கலேக்ஷனாக தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்களுக்கே வந்தது.
அப்படியிருக்க ஏன் இதை நோக்கி ஓடுகிறீர்கள் என்று பல ரசிகர்களின் ஆதங்கமாகவே உள்ளது, அதோடு ஒரு ஸ்பை திரில்லர் படத்தில் கூட மனைவி செண்டிமெண்ட் வைத்தது, சரி அதை விடுங்கள். தீரன், சதுரங்கவேட்டை என்று எல்லோரின் கவனத்தையும் கவர்ந்த வினோத்துடன் அஜித் கைக்கோர்கின்றார் என்றவுடன் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் ஏதோ தீபாவளி போனஸ் டபுளாக வந்தது போல் துள்ளிக்குதித்தனர்.
முதல் படம் நேர்கொண்ட பார்வை கண்டிப்பாக பாரட்ட வேண்டிய படம், இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான படம், அதில் செண்டிமெண்ட் இருப்பது ஒரு லாஜிக். அடுத்து மீண்டும் வினோத்துடன் புதிய கதை வலிமை என்று டைட்டில் வந்த நாள் முதல் நேற்று வரை ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலை தான்.
தீரனை மிஞ்சும் ஆக்ஷன் படம் என்று ரசிகர்கள் எல்லோரும் அத்தனை கொண்டாட்டத்துடன் இருந்த போது, அதில் அம்மா செண்டிமெண்ட் வைத்து மீண்டும் ஏன் அதே மிஸ்டேக் அஜித் என்று தான் கேட்க தோன்றுகின்றது. இப்பெல்லாம் பேமிலி படம் எடுத்தாலே க்ளிஷே என்று சதுரங்க வேட்டையில் வசனம் வைத்த வினோத்தை, அம்மா அம்மா என்று பாட்டு வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுக்க வைத்தது எல்லோருக்குமே அதிர்ச்சி தான்.
ரசிகர்கள் அனைவரும் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள், பேமிலி படத்தில் செண்டிமெண்ட் இருப்பது தப்பு இல்லை, ஆனால், எல்லா படத்திலும் செண்டிமெண்ட் இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்....வாங்க பழைய பில்லாவாக, விநாயக் மகாதேவாக என்பதே ரசிகர்களின் விருப்பம்.