வலிமை டிக்கெட் விலை 1000 ரூபாயா.. புகார் அளித்த ரசிகர்கள்
அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாட தயாராகி கொண்டு இருக்கிறார்கள். படத்தின் ட்ரைலர் இன்று வெளியாவது மட்டுமின்று இன்னும் சில தினங்களில் சென்சார் முடிந்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வலிமை முதல் நாள் டிக்கெட் விலை ஆயிரம் ருபாய்க்கு விற்கிறார்கள் என புகார் எழுந்து இருக்கிறது. 'அஜித்குமார் ரசிகர் கூட்டமைப்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கின்றனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது..
சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையோடு நடிக்கும் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படம் தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 13ம் தேதி வெளிவருகிறது. கோவை மாவட்டத்தில் இந்த படத்தை திரையிட உரிமம் பெற்ற விநியோகஸ்தர் நகரம் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
12ம் தேதி நள்ளிரவு 1 மணி முதலே அரசு அனுமதியின்றி திரைப்படத்தை வெளியிடவும், திரையரங்கு உரிமையாளர்களுடன் இணைந்து அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இது தவிர அஜித் குமார் மேல் அன்பு கொண்ட ரசிகர்களிடமும், பொது மக்களிடம் அரசு நிர்ணயித்த ரூ.120/- டிக்கெட் கட்டணத்தை ரூ.1000/- என்று நிர்ணயித்து இப்போதே வசூலிக்க தொடங்கி விட்டனர்..
இதை மாவட்ட நிர்வாகம் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரித்து உண்மை எனும் பட்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் மீதும் வலிமை பட விநியோக உரிமை பெற்றவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்து இருக்கின்றனர்.