ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் ‘ஜெய் ஜெய் கணேசா’ - ஆக்‌ஷன், திரில்லர், காமெடி கலந்த முழுநீள பொழுதுபோக்குப் படம்!

By Karthick Raja Nov 07, 2026 09:50 AM GMT
Report

‘ஜெய் ஜெய் கணேசா’ 

தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், தற்போது தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியாகத் தயாராகி வருகிறது. தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், ஆக்‌ஷன், திரில்லர், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த முழுநீள பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஜே.ஜே. மூவிஸ் சார்பில் விஜய் மாதவன் தயாரிக்கும் இப்படத்தில் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க, நயன் சாரிகா மற்றும் பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ராஜ் அருண் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆதித்யா ஒளிப்பதிவு செய்ய, சேத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடல்களை சுவிஸ் தமிழ்மகள், பாமகன், ஜோ பைந்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர். விஜய் மாதவன் தயாரிக்கும் இப்படத்தின் தமிழ் உருவாக்கப் பணிகளை ஏ.ஆர்.கே. ராஜராஜா மேற்கொண்டுள்ளார். உதய் பொம்மி செட்டி இயக்கியுள்ளார்.

துள்ளலான இசைப் பாடல்கள், மனதை வருடும் மென்மையான மெட்டுகள், மயிர்க்கூச்செறிய வைக்கும் சண்டைக் காட்சிகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஆனந்த் தேவரகொண்டாவை முதன்முறையாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் தயாரிப்பாளர் விஜய் மாதவன்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் கணேசா’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கதை சுருக்கம்:

கதாநாயகன் கணேஷ், எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் எனத் தீர்மானிக்கிறான். அந்த நேரத்தில் சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைத் திருடும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது. திட்டமிட்டபடி வைரத்தைத் திருடும் கணேஷ், அதை ஒரு விநாயகர் சிலைக்குள் மறைத்து வைக்கிறான்.

மறுபுறம், அரசியல்வாதியான கிஷோர் ,ருத்ரா என்ற குற்றவாளியின் உதவியுடன், அந்தப் பணத்தை ஒரு பெரிய விநாயகர் சிலைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறான்.

எதிர்பாராதவிதமாக விநாயகர் சிலைகள் கைமாறிப் போக, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைத் தேடி கணேஷும், 100 கோடி ரூபாயைத் தேடி ருத்ராவும் களமிறங்குகிறார்கள். இரு தரப்பினரின் தேடுதல் வேட்டையும் ஒரே கிராமத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை மையமாகக் கொண்டு நகர்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவைச் சம்பவங்கள் மற்றும் அதிரடி மோதல்களே படத்தின் சுவாரஸ்யமான கதை.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US