அன்பறிவு திரைவிமர்சனம்
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் அன்பறிவு. சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகியுள்ளது. கிராமத்து கதைக்களம், ஹிப் ஹாப் ஆதியின் இரட்டை வேடம், என இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்படி, பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள அன்பறிவு, ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளதா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
மக்களின் தலைவராக மதுரையில் உள்ள கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். அவரிடம் விதார்த் உதவியாளராக பணிபுரிகிறார். அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நெப்போலியனிடம் வேலை செய்கிறார்.
அதே சமயத்தில் விதார்த்தின் நண்பர் சாய் குமார் நெப்போலியன் மகளை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு அன்பழகன், அறிவழகன் என இரட்டை குழந்தை பிறக்கிறது. இதன்பின், விதார்த்துக்கு கிடைக்க வேண்டிய அரசியல் பதவி நெப்போலியனின் மருமகனுக்கு கிடைக்கிறது. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் விதார்த் நெப்போலியனின் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார்.
இதனால் நெப்போலியனின் பேரன்கள் இருவரும் குழந்தையாக இருக்கும் போதே அம்மாவிடம் ஒருவர், அப்பாவிடம் ஒருவர் என பிரிந்து வளர்க்கிறார்கள்.இறுதியில் அன்பும், அறிவும் வளர்ந்து மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
அன்பு, அறிவு என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஹிப் ஹாப் ஆதி, சற்று நடிப்பில் தடுமாறுகிறார். இருந்தாலும், அம்மா, அப்பா செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளார். கதாநாயகிகளாக வரும் காஷ்மீரா மற்றும் ரிட்டு ரவி இருவருக்கும் சொல்லும் அளவிற்கு ஸ்கோப் இல்லை.
கிராமத்து கதைக்களத்தில் எப்போதும் போல், தனது முரட்டுத்தனமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் நெப்போலியன். அதே போல், அப்பாவாக வரும் சாய் குமார் மற்றும் அம்மாவாக வரும் ஆஷா சரத் இருவரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. முக்கியமாக வில்லனாக நடித்துள்ள விதாரத்தின் நடிப்பிற்கு தனி பாராட்டுக்கள். நகைச்சுவை அல்லது, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை பெற்றுள்ளார் தீனா.
அன்பும் அறிவும் ஒன்று தான். அனைவரும் சமம் என்று இயக்குனர் அஸ்வின் ராம் கூறியுள்ள விஷயம் சிறப்பான ஒன்று. ஆனால், திரைக்கதையில் சொதப்பியுள்ளார். திரைக்கதையின் ஓட்டத்தில் வேகம் இல்லாத காரணத்தினால் சலிப்பு தட்டுகிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பலம். இசை சூப்பர், பின்னணி இசை சொதப்பல்.
க்ளாப்ஸ்
விதார்த், நெப்போலியன் நடிப்பு
கதைக்கரு
செண்டிமெண்ட் காட்சிகள்
பல்ப்ஸ்
திரைக்கதை சலிப்பு தட்டுகிறது
பின்னணி இசை சொதப்பல்
மொத்தத்தில் எப்போதும் இளைஞர்களை கவரும் ஆதி சறுக்கினாலும், குடும்பங்களை கவர்ந்துள்ளார்.
2.25 / 5