சூர்யாவின் அடுத்த படம் வெளியாகும்போது தங்களின் கோபத்தை காட்டக்கூடும்' - அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம்..
நடிகர் சூர்யாவிற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இது வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இதே மனநிலையில் இருப்பதாகவும், சூர்யாவிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் இந்த கடிதத்தை எழுத வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் குருமூர்த்தி என்ற வன்னியர் சமூக முன்னாள் தலைவரின் பெயரில் வரும் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரம் வேண்டுமென்றே திட்டமிடபட்டு வைத்திருப்பதாகவும் இந்த பெயரும் நிஜத்தில் அநீதி இழைத்த போலீஸ் அதிகாரியின் பெயரும் வேறு வேறு என்றும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அன்புமணி.
இப்படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.