ஆந்திரா கிங் தாலுகா: திரை விமர்சனம்
ராம் பொத்தினேனி, உபேந்திரா நடிப்பில் வெளியாகியுள்ள ஆந்திரா கிங் தாலுகா தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.
கதைக்களம்
2002ஆம் ஆண்டு 'ஆந்திரா கிங்' என்று அழைக்கப்படும் மாஸ் நடிகர் சூர்யகுமாரின் 100வது திரைப்படம் தயாராகிறது.
படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கும்போதே தயாரிப்பாளர் தன்னிடம் பணம் இல்லை என்றும், படத்தை முடிக்க வேண்டுமென்றால் 3 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் கூறுகிறார்.
மேலும், முந்தைய படங்களின் தோல்விகளால் யாரும் கடன் தர முன்வரவில்லை என்றும் கூறி கையை விரிக்கிறார்.
இதனால் தனது 100வது படம் நின்றுவிடுமோ என்று பயப்படும் சூர்யகுமார், தயாரிப்பாளர் அழகம் பெருமாளிடம் உதவி கேட்கிறார்.
போனில் பேசும் அழகம் பெருமாள் தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யும் படத்தில் அவருக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் பணம் தருவதாக கூற சூர்யகுமார் வேதனையடைகிறார்.
முதலில் தயங்கும் அவர் வீடு, கார்கள் அனைத்தையும் விற்கலாம் என்று கூற, அதற்கு அழகம்பெருமாள் சொல்வதையே கேட்கலாம்; ஆசையாக காட்டிய கோட்டையை (வீடு) விற்க வேண்டாமே என்கிறார்.
சரி என சூர்யகுமார் நினைக்க, அவரது வங்கிக்கணக்கில் 3 கோடி ரூபாய் கிரெடிட் ஆகிருப்பதாக தெரிய வருகிறது.
அதனை செலுத்தியது அவரது தீவிர ரசிகரான சாகர் என்பதும், அவர் மின்சார வசதி கூட இல்லாத ஊரில் வசிப்பதும் அறிந்து அவரைத் தேடி செல்கிறார் சூர்யகுமார்.
சாகரை அவர் சந்தித்தாரா? அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
தனது மாஸ் ஹீரோவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு தீவிர ரசிகன் என்னவெல்லாம் செய்வான் என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டு, பக்காவான திரைக்கதை அமைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர் மகேஷ் பாபு பச்சிகொல்லா.
கன்னடத்தில் மாஸ் ஹீரோவான உபேந்திராவை ஆந்திராவில் சூப்பர் ஸ்டார் ஹீரோவாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
தனக்கு இப்படியொரு ரசிகனாக என்று முதலில் ஆச்சரியப்படும் உபேந்திரா, அவன் தனக்காக என்னவெல்லாம் செய்தான் என்பதை கேட்க கேட்க மிரண்டு போகிறார்.
ஒரு காட்சியில் அவனுக்கு நான் இருக்கிறேன் என்று கூறும்போது விசில் பறக்கிறது. இயலாமை, பரிதவிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் இடங்களில் அவர் தேர்ந்த நடிகர் என்பதை காட்டுகிறார்.
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ராமிற்கு இது நிச்சயமாக கம்பேக் படம்தான். சாகர் கதாபாத்திரத்தை தன்னை விட யாரும் சிறப்பாக செய்துவிடமுடியாது என்பதுபோல் நடித்துள்ளார்.
சேட்டை செய்யும் காலேஜ் பையனாக அறிமுகமாகும் ராம், பொறுப்பான நபராக மாறும் காட்சியில் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
தனது ஹீரோ, காதலுக்காக மட்டுமில்லாமல் மொத்த ஊருக்கே நல்லது நடக்க வேண்டும் என்று அவர் போராடும் காட்சிகள் அருமை.
ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் ராம் அட்டகாசம் செய்துள்ளார். குறிப்பாக பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சியை ரசிக்கும்படி செய்துள்ளார்.
ஹீரோயின் பாக்யஶ்ரீ அழகு பதுமையாக வருகிறார். என்றாலும் அவருக்கும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப்பை அமைத்துள்ளார் இயக்குநர்.
ராவ் ரமேஷ், முரளி ஷர்மா ராகுல் ஆகியோர் வழக்கம் போல் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளார்.
தொய்வில்லாத திரைக்கதையில் உறுத்தல் இல்லாமல் பாடல் காட்சிகளை அமைத்த விதம் கண்களுக்கு விருந்து. விவேக்-மெர்வினின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
சித்தார்த்தா, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு மிரட்டல். ஶ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் கச்சிதம். 2002யில் கேட்டவுடன் 3 கோடி ரூபாய் பணத்தை ஒரே பேக்கில் கொண்டு வந்து கொடுப்பது போல் லாஜிக் மீறல்களும் படத்தில் இல்லாமல் இல்லை. ஆனாலும் படம் நம்மை ஈர்க்கிறது.
மொத்தத்தில் இந்த ஆந்திரா கிங் தாலுகா பைசா வசூல். கண்டிப்பாக கமர்ஷியல் பட விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.