Animal திரை விமர்சனம்
தெலுங்கு சினிமாவில் குறிஞ்சிப்பூ போல் எப்போதாவது சில இயக்குனர்கள் தைரியமாக சில படைப்புக்களை கொடுப்பார்கள்.
அந்த வகையில் அர்ஜுன் ரெட்டியை தொடர்ந்து சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள அனிமல் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
ரன்பீர் தன் அப்பா அனில் கபூர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர், எந்த அளவிற்கு என்றால் தன் உயிராக பார்க்கும் மைக்கில் ஜாக்சன் நிகழ்ச்சியை விட்டுவிட்டு தன்னை பார்க்கவே வராத தன் அப்பா பிறந்தநாளுக்கு காத்திருக்கும் அளவிற்கு. ஆனால், அப்பா விரும்புவதோ ரன்பீர் ஒரு மல்டிமில்லினியர் வாரிசாக தன் கம்பெனியை நடத்த வேண்டும் என்பது தான்.
ரன்பீரோ அதை கண்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்ய, ஒருமுறை ராஷ்மிகாவை திருமணம் செய்துக்கொண்டு வீட்டிலும் சண்டை போட்டு அமெரிக்கா பறக்கிறார்.
6 வருடம் கழித்து தன் அப்பாவை சுட்டுவிட்டார்கள் என்ற செய்தியுடன் ரன்பீர் இந்தியா வர, அதன் பின் தன் அண்ணன், தம்பிகளுடன் அப்பாவை கொன்றது யார், என தேடி ஆடும் வேட்டை மற்றும் அப்பா மகனின் அன்பை புரிந்துக்கொண்டாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம், அதிலும் இயல்பிலேயே அவர் ஒரு மல்டி மில்லினியர் குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் இந்த கதாபாத்திரத்தை ஜெஸ்ட் லைக் தட் என செய்துள்ளார்.
அதிலும் தன் அக்காவை கிண்டல் செய்யும் சீனியர்களிடம் துப்பாக்கி எடுத்து செல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது. ராஷ்மிகா இதுவரை நடித்த படங்களில் இது தான் பெஸ்ட் எனலாம், ஏனெனில் இதில் தான் அவர் நடித்திருக்கிறார், அதிலும் தன் கணவன் வேறொரு பெண்ணுடன் இருந்தான் என்பதை அறிந்து அவர் விரக்தியில் சிரித்துகொண்டே பேசும் 5 நிமிடம் சபாஷ்.
ரன்பீர் கபூர் தன் அப்பாவிற்காக திரும்பி வந்து ஒரு கூட்டத்தை சேர்த்து சண்டைக்கு ரெடி ஆகும் காட்சி தூள், அதிலும் அந்த இடைவேளை சண்டைக்காட்சி 300 பேரை அடிக்கும் காட்சி சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் ருத்ர தாண்டவம்.
2 மணி நேர பக்கம் ஓடினாலும் சலிப்பாக்கவில்லை முதல் பாதி. சந்தீப் வங்கா அவருக்கே உண்டான ஸ்டைலில் ஹீரோ எல்லாருக்கும் எதோ சைக்காலஜி க்ளாஸ் எடுப்பது போல் ஒரு தியரியை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல், ஸ்கீரினை விட்டு வெள்ளியே வந்து, 'இந்த பாப் கார்ன் யார் சாப்பிடுவார்கள் தெரியுமா, காதலர்கள் தியேட்டருக்கு வரும் போது அவன் காதலை நிரூபிக்க மணிக்கணக்காக லைனில் நின்று பாப் கான் வாங்கி தன் காதலியிடம் கொடுத்து' என்று நமக்கே அட்வைஸ் செய்தாலும் ஆச்சரியமில்லை.
கான்பிடன்ஸ் இருக்கலாம் அதற்காக சந்தீப் வங்கா ஹீரோக்களுக்கு இருக்கும் கான்பிடன்ஸ் லெவல் என்பது வேற லெவல் தான். படத்தின் முதல் பாதி எமோஷ்னல், அடிதடி, ஆக்ஷன் என சென்றாலும் இரண்டாம் பாதி ஜெனரல் ஆடியன்ஸுக்கு கண்டிப்பாக பல இடங்களில் பொறுமையை சோதிக்கும்.
அதை விட ரன்பீர் உடம்நலம் முடியாமல் வீட்டில் இருக்கும் போது எதோ பையாலஜி க்ளாஸில் இருப்பது போலவே உள்ளது, போதும்ப்பா பேசுனது நீ ரெடி ஆகி சண்டைக்கு போ என்று ஆடியன்ஸே சொல்லும்படி உள்ளது. ஆனால் படம் முழுவதும் பெண் கதாபாத்திரம் என்பது வெறும் ஆண் உடல் தேவைக்கான ஒரு ஆள் என்பது போலவே தான் உள்ளது.
படம் முழுவதும் ஆண்களின் பலத்தை வைத்து மட்டுமே பெண் அடிமையாக இருக்கிறாள் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் படத்திலும் அதை தான் காட்டியுள்ளார் சந்தீப் வங்கா, இதில் ரன்பீரும் விதி விலக்கு அல்ல.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி.
ரன்பீர் கபூரின் அசுர தனமான நடிப்பு.
படத்தின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள்.
கிளைமேக்ஸ்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி பல இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.
இவர்கள் உலகில் அரசாங்கம், காவல்த்துறை எல்லாம் இருக்கவே இருக்காதா..
மொத்தத்தில் அனிமல் கைத்தட்டவும் வைத்துள்ளது, அதே சமயம் 'கடி'த்தும் வைத்துள்ளது.
மதிப்பெண்
2.75/5