அப்பா குட்டி: திரைவிமர்சனம்
விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியாகியுள்ள அப்பா குட்டி திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
பெண் குழந்தையுடன் ஊட்டிக்கு வரும் சூர்யா (விஜய் ஆண்டனி), சூட்டிங் லொகேஷன் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டு தன் மகளை படிக்க வைக்கிறார். அவரது மகள் தியா படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் அனிதாவுக்கு (ப்ரீத்தி அஸ்ரானி) சூர்யா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
உன் அம்மா சாமி கிட்ட போயிட்டாங்க என்று மகளிடம் ஒரு போட்டோவைக் காட்டி வளர்க்கும் சூர்யா, ஒருநாள் ஊட்டியில் அப்பெண்ணை நேரில் பார்க்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட, தானே தினமும் தியாவை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவதாக அனிதா கூறுகிறார்.

அதன் தொடர்ச்சியாக சூர்யாவிடம் உங்கள் மகளுக்கு அம்மாவாக நான் இருக்க விரும்புகிறேன் என்று அனிதா தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் சூர்யாவோ அதனை நிராகரிக்கிறார். இந்த சூழலில் தியாவின் அம்மாவை நேரில் பார்த்து அதிர்ச்சியடையும் அனிதா, அதுகுறித்து சூர்யாவிடம் கேள்வி எழுப்புகிறார்.
அப்போதும் உண்மையை கூறாத சூர்யா, மகளிடம் துபாய் செல்ல முடிவெடுக்க தியாவுக்கு அரிதான நோய் இருப்பது தெரிய வருகிறது. சூர்யா தன் மகளை எப்படி காப்பாற்றினார்? அவளின் உண்மையான அம்மா யார் ? போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். அப்பா - மகள் பாசப் பிணைப்பைக் கொண்ட கதையாக படம் சென்றாலும், விஜய் ஆண்டனி எதையோ மறைக்கிறார்; அது என்ன என்ற கேள்வி ஒரு கட்டம் வரை நம்முள் எழுவதால் சுவாரசியமாக முதல் பாதி நகர்கிறது.
ஜன நாயகன் படத்தில் CM விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்த லிதன்யா மிகவும் எதார்த்தமான நடிப்பை தந்துள்ளார். கிளைமாக்சில் தனது நடிப்பினால் பார்வையாளர்களை அழ வைக்கிறார். ப்ரீத்தி அஸ்ரானி தொடர்பான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.சென்டிமென்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

செண்டிமெண்டாக போகும் திரைக்கதையில் ஜென்சன் திவாகர், முருகானந்தம் மற்றும் சாமிநாதன் ஆகியோரது காமெடி ஓரளவு சிரிக்க வைக்கின்றன. பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், ஹரிப்ரியா, அருவி மதன், மூணார் ரமேஷ், லிசி ஆண்டனி, பிரவீனா, ஶ்ரீஜா ரவி என அனைவரும் சிறப்பா நடித்துள்ளனர்.
எல்லோரையும் தாண்டி ஹீரோ விஜய் ஆண்டனி அப்பா குட்டியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூற வேண்டும். பெரிதாக முகத்தில் எக்ஸ்பிரஷ்ன்ஸ் இல்லையென்றாலும், தனக்கான நடிப்பு பாணியில் நன்றாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்தில் எப்படி அம்மாவுக்காக கஷ்டப்பட்டாரோ அதுபோல மகளுக்காக அவர் அலையும் காட்சிகள் செம சென்டிமென்ட் டச்.

தெய்வத்திருமகள் படத்தின் கிளைமேக்சை போல் படத்தின் கடைசி நிமிடங்கள் நிச்சயம் காண்போரை அழ வைக்கும். இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பாடல்களில் பெரிதா சோபிக்கவில்லை என்றாலும், கதைக்கு ஏற்ப பின்னணி இசையை கொடுத்துள்ளார்.
அதே சமயம் எடிட்டராக கண்டிப்பாக இரண்டாம் பாதியில் பல கத்திரிகளை அவர் போட்டிருக்க வேண்டும். என்னதான் சென்டிமென்ட் கனெக்ட் ஆனாலும் இரண்டாம் நீளமாக உணர வைக்கிறது. மேலும் சில காட்சிகள் சீரியலைப் போல் இருக்கும் உணர்வைத்தருகின்றன.
கிளாப்ஸ்
- விஜய் ஆண்டனி, பேபி லிதன்யா
- சென்டிமென்ட் காட்சிகள்
- கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
- இரண்டாம் பாதியின் நீளம்
- சீரியல் போல் உணர வைக்கும் சில காட்சிகள்
மொத்தத்தில் இந்த அப்பா குட்டி ஒரு சில குறைகள் இருந்தாலும், எமோஷன் என்ற ஒற்றை வார்த்தையால் வென்றுவிட்டான். கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
