ஈழத் தமிழர்களின் வலியை எடுத்துக்கூறும் ஆறாம் நிலம் திரைப்படம்..
ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படம் ஆறாம் நிலம். ஒரு மணி நேரம் அரை நிமிடம் நீளம் உள்ள ஆறாம் நிலம் படத்தில் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை சொல்லப் படாத ஒரு கதைக் களம் இதில் பேசப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பின் பல ஆண்டுகள் கழித்தும் கூட அகற்றப்படாமால் உள்ளது.
மேலும் அந்நாட்டில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது. இவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திய விதமும் நகர்த்திய விதமும் பாராட்டுக்குரியது.
விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த கண்ணி வெடிகளை அகற்ற 100 நாள் வேலைத் திட்டம் போல ஒரு சமூக சேவை நிறுவனம் ஆண்களையும் பெண்களையும் அந்த நிலத்தில் இறங்கி விடுகிறார்கள். உயிரை கையில் பிடித்துக் கொண்டு கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
கண்ணிவெடி அகற்றும் பணிக்குரிய அந்த நிலம், அதற்குரிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் படமாக்கியது சிறப்பாக உள்ளது. அந்த இடம், அதற்கான பணியாளர் ஒருங்கிணைப்பு, உடை உள்ளிட்ட விஷயங்கள் கச்சிதமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும் எந்த ஒரு மறைமுகமும் இல்லாமல், நேரடியாக கூறியுள்ள ஆறாம் நிலம் திரைப்படம். IBC தமிழ் சேனலில் பாருங்கள்