அரண்மனை 3 திரைவிமர்சனம்
அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 3. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். ஆர்யா, சுந்தர்.சி, விவேக், ராஷி கண்ணா, சம்பத், ஆண்ட்ரியா என திரையுலக பட்டாளமே நடித்து, பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம், ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
அரண்மனை ஜெமின்தார் சம்பத்தின் மகளாக வளரும் ராஷி கண்ணா தனது சிறு வயதிலேயே அரண்மனையில் பேய் இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறார். இதனை தனது தந்தையிடம் கூற, சம்பத் தனது மகளை சிறு வயதிலேயே ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுகிறார். இதன்பின், பல வருடங்கள் கழித்து இளம் பெண்ணாக மீண்டும் தனது சொந்த ஊருக்கு வரும் ராஷி கண்ணாவிடம் தனது காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் காத்துகொண்டு இருக்கிறார் ஆர்யா.
காதல் ட்ராக் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, ஒரு நாள் இரவு மீண்டும் அரண்மனையில் பேய் இருப்பதை தெரிந்துகொள்கிறார் ராஷி கண்ணா. இரு முறை தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் பேயிடம் இருந்து விதி வசம் தப்பித்து விடுகிறார். அரண்மனையில் நடக்கும் அணைத்து அமானுஷங்களையும் உடனடியாக சுந்தர்.சியிடம் ராஷி கண்ணா கூற, அவரும் ஏன் இதெல்லாம் நடக்கிறது என்று தேட துவங்குகிறார்.
தனது முயற்சியில் ஒவ்வொரு படியாக முன்னேறி கொண்டே போகும் சுந்தர்.சிக்கு பேரதிர்ச்சியாக, முக்கியமான ஒருவரின் உடம்பில் பேய் புகுந்துள்ளது என்று தெரியவருகிறது. பேயிடம் இருந்து இந்த குடும்பத்தையும், ராஷி கண்ணா மற்றும் சம்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சுந்தர்.சி எடுக்கும் முயற்சியில் அவர் வெற்றிபெற்றாரா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கமெர்ஷியல் படமாக உருவாகியுள்ள அரண்மனை 3, ஏற்கனவே பார்த்த அரண்மனை 1,2 படங்களின் சாயலில் உள்ளது. திகில் காட்சிகளுக்கு பச்சமில்லை என்றாலும், படத்தில் விறுவிறுப்பு இல்லை. ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ராஷி கண்ணாவின் நடிப்பு எதார்த்தமாகவுள்ளது.
இம்மன்னைவிட்டு பிரிந்தாலும், நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ள நடிகர் விவேக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். யோகி பாபுவிற்கு பெரிதும் ஸ்கோப் இல்லை. காமெடி இருந்தாலும், சிரிப்பு வரவில்லை. நளினி, சாக்ஷி அகர்வால், மனோபாலா, அமித், குழந்தையாக வரும் Veronika Arora, சம்பத், வேல ராமமூர்த்தி ஆகியோரின் நடிப்பு ஓகே.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பை மட்டுமே வெளிப்படுத்துவேன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. இவரது நடிப்பு படத்தை தாங்கி நிற்கிறது. திரைக்கதை கொஞ்சம் ஸ்லோ தான். பாடல்கள் ஒர்கவுட் ஆகவில்லை என்றாலும், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் சத்யா. யு.கே. செந்திலின் ஒளிப்பதிவு பிரமாண்டத்தை கண் முன் நிறுத்துகிறது. VFX சூப்பர்.
க்ளாப்ஸ்
ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணாவின் நடிப்பு
பின்னணி இசை
ஆண்ட்ரியாவின் மிரட்டலான நடிப்பு
பல்ப்ஸ்
திரைக்கதை
காமெடி ஒர்கவுட் ஆகவில்லை
மொத்தத்தில் அரைத்த மாவை அரைத்துள்ளது அரண்மனை 3
2.25 / 5