'அயலி' வெப் சீரிஸ் விமர்சனம்
ஜீ 5 தளத்தில் தற்போது வெளிவந்து இருக்கிறது அயலி வெப் சீரிஸ். பெண்களையும் பெண் குழந்தைகளையும் அடக்கி ஆள நினைக்கும் ஒரு கிராமத்தின் ஆண் சமூகம் அதை ஊர் கட்டுப்பாடு, தெய்வ கட்டுப்பாடு என்கிற பெயரை வைத்து ஏமாற்றிவரும் நிலையில் அதை ஒரு பள்ளி செல்லும் பெண் குழந்தை தமிழ்செல்வி எப்படி தகர்த்து எறிகிறாள் என்பது தான் இந்த சீரிஸின் மையக்கரு.
அயலி
14ம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. ஊரில் இருக்கும் ஒரு இளம் பெண் அவரது காதலருடன் ஓடிவிட்ட நிலையில் அதன்பின் அந்த ஊரில் கெட்டது மட்டுமே நடக்கிறது. பயிர்கள் நாசம் ஆகின்றன, அம்மை நோய் வந்து மக்கள் சாகிறார்கள். அனைத்திற்கும் அயலி தெய்வத்தின் கோபம் தான் காரணம் என சொல்லி மொத்த மக்களும் வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அப்போது ஒரு பெண் அயலி கோவில் அருகில் இருக்கும் ஒரு பிடி மண்ணையும் கொண்டு வருகிறார்.
ஊர் மக்கள் எல்லோரும் பண்ணைபுரம் என்ற ஊரில் குடியேறுகிறார்கள். அங்கு அயலி தெய்வத்தையும் மீண்டும் வைக்கிறார்கள். காலம் செல்ல செல்ல ஊர் வளர்வது போல ஒரு பெரிய கோவிலும் வருகிறது.
அந்த கோவிலுக்கும் வயதுக்கு வராத பெண்கள் மட்டுமே செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் உடனே படிப்பை நிறுத்திவிட்டு சில மாதங்களிலேயே திருமணம் செய்துவிட வேண்டும் என்பது தான் ஊர் கட்டுப்பாடு.
அதனால் நம்ம ஹீரோயின் தமிழ்செல்வி பள்ளி படிக்கும்போது தான் வயதுக்கு வந்துவிடவே கூடாது என வேண்டுகிறார். அவரை விட கொஞ்ச மூத்த பெண் வயதுக்கு வந்த உடனே வீட்டில் படும் கஷ்டத்தையும் அதன் பின் திருமணம் செய்துகொண்டு குடிகார கணவனிடம் படும் கஷ்டத்தையும் கண்டு தமிழ்செல்விக்கு பயம் இன்னும் அதிகம் ஆகிறது.
இந்த ஊரில் 10ம் வகுப்பு வரை எந்த பெண்ணும் வந்ததில்லை என ஏளனம் பேசும் ஒரு வாத்தியார் தான் ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரில் மொத்த ஊரையும் தூண்டி விடுபவர். தமிழ்செல்வியின் முறைப்பையனும் அவரும் சேர்ந்து கொண்டு வில்லத்தனம் செய்கிறார்கள்.
தமிழ்செல்வி எப்போது வயதுக்கு வருவார், திருமணம் செய்துகொள்ளலாம் என வில்லன் காத்திருக்கிறார். ஆனால் படிக்கும் ஆசையில் இருக்கும் தமிழ்செல்வி ஒரு பெரிய திட்டம் போடுகிறார்.
ஒரு கட்டத்தில் அவர் வயதுக்கும் வந்துவிடுகிறார். அதை அப்படியே மறைத்து தனது படிப்பை தொடர முடிவெடுக்கிறார். அதை அவர் எப்படி செய்தார், பிற்போக்காகவே யோசிக்கும் அவரது ஊர் மக்களை திருத்தினாரா இல்லையா என்பது தான் சீரிஸின் மீதி கதை.
பொழுதுபோக்குக்காக மட்டுமே படங்கள், சீரிஸ் வந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒரு நல்ல ஆக்கபூர்வமான கருத்துடன் வந்திருக்கும் இந்த சீரிஸை எடுத்த இயக்குனர் முத்துகுமாரை பாராட்டியே ஆக வேண்டும். இந்த காலத்தில் இப்படி ஒரு கிராமமா என பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தாலும், இப்படியும் இருக்கிறார்கள் என வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறது அயலி.
கடவுள் நம்பிக்கை என்கிற பெயரில் பெண்களை கட்டுப்படுத்துபவர்களை மீறி எல்லா பெண்களும் கோவிலுக்கு சென்றால் என்ன ஆகும்? அந்த கிராமத்து பெண்கள் ஜெயித்ததாக அர்த்தமா?.. அப்படி நடந்தால் அந்த கடவுளையே தூக்கி எறிந்துவிடுவார்கள், அவர்களுக்கு பெண்களை கட்டுப்படுத்துவது தான் முக்கியம், அதற்கு கடவுள் ஒரு கருவி அவ்வளவுதான் என இதன் பின்னால் இருக்கு அரசியலையும் தெளிவாக சொல்கிறது அயலி.
தமிழ்ச்செல்வி ரோலில் நடித்த அபி நக்ஷத்திரா, அவரது அம்மாவாக நடித்த மலையாள நடிகை அனுமோல் இருவருமே எதார்த்த நடிப்பில் நம்மை கவர்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்து கடைசி எபிசோடு கிளைமாக்ஸ் வரை அயலி ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவேவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள் மட்டுமின்றி எல்லோரும் தவற விடக்கூடாத சீரிஸ் ‘அயலி’.