பாஹி 4: திரை விமர்சனம்
டைகர் ஷெராஃப், சஞ்சய் தத், சோனம் பஜ்வா நடிப்பில் வெளியாகியுள்ள "பாஹி 4" இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
கதைக்களம்
ரோனி ரயில் மோதி விபத்திற்குள்ளானதால் கோமா நிலைக்கு செல்கிறார். ஏழு மாதங்கள் கழித்து கண்விழிக்கும் அவர் ஹாலுசினேசன்ஸ் எனும் மனநல பிரச்சனையில் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
அவரோ தனது காதலி இறந்துவிட்டதாக கூறி, தினமும் கல்லறைக்கு சென்று பூ வைக்கிறார். ஆனால் அவரது சகோதரர் ஜீத்து அப்படி ஒரு பெண்ணை இல்லை என்று கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸ் ரோனியை கேஸ் ஒன்றில் விசாரிக்க, தனது காதலி அலிஷாவின் கல்லறைக்கு அழைத்து செல்கிறார். அங்கு வேறொருவரின் கல்லறைதான் இருக்கிறது.
இதனால் ரோனியும் குழப்பமடைய, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள் என்று வாதிடுகிறார்.
அச்சமயத்தில் பிரதிஷ்தா என்ற பெண் ரோனியின் வாழ்வின் வர, அவர் இயல்புநிலைக்கு திரும்ப முயல்கிறார்.
அப்போது பிரதிஷ்தா குறித்து ஒரு உண்மை ரோனிக்கு தெரிய வர அதிர்ச்சியடைகிறார். அதன் பின்னர் உண்மையாகவே அலிஷா என்ற பெண் இருந்தாரா? தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ரோனி கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2013ஆம் ஆண்டில் தமிழில் வெளியான "555" படத்தின் கதையை அதிகாரபூர்வமற்ற ரீமேக்காக ஹர்ஷா என்பவர் இயக்கியுள்ளார்.
அப்படியே அந்த படத்தின் கதையைத்தான் படமாக எடுத்துள்ளார். ஒரு சில காட்சிகள் மற்றும் வில்லனின் பின்புலத்தை மட்டும் சற்று மாற்றியிருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலமே சண்டைக்காட்சிகள்தான். பாஹி சீரிஸில் பட்டையை கிளப்பி வரும் டைகர் ஷெரஃப் இந்த முறையும் அதனை கச்சிதமாக செய்துள்ளார்.
அதே சமயம் எமோஷனல் காட்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கேஜிஎப் 2, லியோ படங்களில் காட்டிய அதே வில்லத்தனத்தை சஞ்சய் தத் காட்டியிருக்கிறார்.
அவரது தம்பியாக வரும் சவுரப் சகித்தேவா சைக்கோத்தனம் கலந்த வில்லத்தனம் காட்ட, உபேந்திரா லிமயி காமெடியில் பட்டையைக் கிளப்புகிறார்.
கவர்ச்சிக்கான கேரக்டராக அறிமுகமாகும் சோனம் பஜ்வா சண்டைக்காட்சியிலும் அசத்தியிருக்கிறார். இந்தியில் முதல் படம் என்றாலும் ஹீரோயின் ஹர்னாஸ் சந்து இரண்டு கேரக்டரிலும் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.
பின்னணி இசை படத்திற்கு மற்றொரு பக்க பலமாக அமைந்துள்ளது. சில கிரீன்மேட் காட்சிகள் அப்பட்டமாக தெரிகின்றன.
555 படத்தை ஒப்பிட்டால் இதில் எமோஷனல் கனெக்ட் குறைவுதான். என்றாலும் முடிந்தவரை சுவாரஸ்யமாக படத்தை கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
க்ளாப்ஸ்
சண்டைக்காட்சிகள்
ஒரு சில ட்விஸ்ட்
பின்னணி இசை
பல்ப்ஸ்
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
555 படத்தை பார்த்தவர்களை இப்படம் பெரிதாக ஈர்க்காது.
மொத்தத்தில் ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு செம ட்ரீட் படமாகவும், பொதுவான ரசிகர்களுக்கு ஆவரேஜ் படமாகவும் அமைந்துள்ளது இந்த பாஹி 4.
ரேட்டிங்: 2.75/5