பேபிகேர்ள் திரை விமர்சனம்
நிக்கோல் கிட்மேன், ஆன்டோனியோ பாண்டராஸ் ஆகியோரின் நடிப்பில் இந்தியாவில் வெளியாகியுள்ள "பேபிகேர்ள்" ஹாலிவுட் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
நியூயார்க் நகரில் ரோபோ ஆட்டோமேஷன் கம்பெனியின் சிஇஓ ஆக இருக்கிறார் ரோமி மாத்திஸ் (நிக்கோல் கிட்மேன்). அவரது கணவர் ஜேக்கப் (ஆன்டோனியோ பாண்டராஸ்) தியேட்டர் இயக்குநராக பணியாற்றி வர, இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
அன்பான கணவர், குடும்பம் என ரோமியின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தாலும், அவரது தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இல்லை. அந்த சமயத்தில்தான் தனது கம்பெனிக்கு இன்டெர்ன் ஆக வரும் சாமுவேல் என்ற இளைஞர் மீது ஈர்ப்பு கொள்கிறார் ரோமி.
ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபடுகின்றர். அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
நெதர்லாந்தைச் சேர்ந்த நடிகை, எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்ட ஹலினா ரெய்ஜ்ன் என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெனிஸில் திரையிடப்பட்ட இப்படம் பாராட்டுகளை பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தியாவில் வெளியாகியுள்ளது. நிக்கோல் கிட்மேன் ரோமி கதாபாத்திரத்தில் அட்டகாசம் செய்துள்ளார். இவர் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 57 வயதில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்து வியக்க வைத்துள்ளார்.
சிஇஓ ஆக மிடுக்காக வரும் காட்சிகளிலும் சரி, காதலரிடம் கெஞ்சும் இடங்களிலும் சரி நிக்கோல் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, சாமுவேலாக நடித்திருக்கும் ஹாரிஸுடன் அறையில் உரையாடும் காட்சியில் அவர் மீது இருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்த வேண்டும், அதே சமயம் தன் கெத்தை விடக்கூடாது என அவர் கொடுக்கும் ரியாக்ஸன்ஸ் மிரட்டல்.
மாஸ்க் ஆப் ஜோரோ, லெஜெண்ட் ஆப் ஜோரோ படங்களில் ஹீரோவாக நடித்து நம்மை மிரள வைத்த ஆன்டோனியோ பாண்டராஸ், நிக்கோலின் கணவராக யதார்த்த நடிப்பை காட்டியுள்ளார்.
ஆனால், தன்னை விட மிகவும் இளம்வயது நடிகரான ஹாரிஸிடம் அவர் அடி வாங்கும் காட்சியை பார்க்கும்போது "எவ்வளவு பெரிய ஆள், ஒரு சின்ன பையன் கிட்ட அடி வாங்குறாரே" என 80ஸ், 90ஸ் கிட்ஸ் நிச்சயம் பீல் பண்ணுவார்கள். நிக்கோலின் காதலராக நடித்திருக்கும் ஹாரிஸ் டிக்கென்ஸன் அனுபவம் வாய்ந்த இரு நடிகர்களுக்கும் ஈடுகொடுத்து நடிப்பை தந்துள்ளார்.
சிஇஓ ஆக இருந்தாலும் அவரிடம் ஃப்லெர்ட் செய்து "இந்த ரூமில் சத்தம் வெளியில் கேட்காதுதானே?" என அவர் நிக்கோலிடம் கேட்கும் சீனில் தியேட்டரில் சிரிப்பலை. திருமண உறவில் இருக்கும் ஒரு பெண்ணின் செக்ஸுவல் பேண்டஸி குறித்து இப்படத்தில் பேசியுள்ளார் இயக்குநர் ஹலினா.
'அன்ஃபைத்புல்' படத்தைப் போன்ற கதைதான் என்றாலும் முடிவு எப்படி இருக்குமோ என்ற கேள்வி எழும்போது, ஹலினா கிளைமேக்ஸில் தீர்வை சொல்லி திருப்திகரமாக கொடுத்துள்ளார். ஆடியன்ஸை ஆங்காங்கே டெம்ப்ட் செய்யும் வகையில் பின்னணி இசையை கொடுத்துள்ளார் கிறிஸ்டோபல் டபியே டி வீர். ஜாஸ்பெர் உல்ஃப்பின் கெமரா ஒர்க்கில் அவ்வளவு நேர்த்தி தெரிகிறது.
க்ளாப்ஸ்
நிக்கோல் கிட்மேனின் நடிப்பு
திரைக்கதை
காட்சியமைப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் திருமண உறவில் உள்ள முக்கிய பிரச்சனையை வெளிப்படையாக பேசியுள்ளார் இந்த பேபிகேர்ள். அடல்ட் ஆடியன்ஸ் ரசிக்கலாம் இந்த பேபிகேர்ள்-ஐ.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
