பேச்சிலர் திரைவிமர்சனம்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பேச்சிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில், சதிஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இப்படத்தை டில்லி பாபு தயாரித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து இப்படம், எந்த அளவிற்கு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று, பார்ப்போம்.
கதைக்களம்
பேச்சிலராக இருக்கும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் தன்னை சுற்றி எது நடந்தாலும், தன்னால் மற்றவர்களுக்கு எது நடந்தாலும், கொஞ்சம் கூட அதனை பற்றி கவலை படாத மனநிலை உடையவராக இருக்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் பெரிதும் கண்டுகொள்ளாத ஜி.வி. பிரகாஷ், முதல் முறையாக கதாநாயகி சுப்புவை { திவ்யபாரதி } சந்திக்கும் பொழுது, அவருக்குள் தீடீரென மாற்றம் ஏற்படுகிறது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக வரும் ஜி.வி. பிரகாஷ், தனது நெருங்கிய நண்பனின் உதவியோடு, கதாநாயகியுடன் ஒரே வீட்டில் தங்க முயற்சி செய்கிறார். இருவரும் ஒரு ஆபீஸில் வேலை செய்வதனாலும், நபரின் சிபாரிசினாலும், கதாநாயகி அதற்கு ஓகே சொல்ல, இருவரும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள்.
நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், ஜி.வி. பிரகாஷ் மட்டும் இதனை காதல் என்று ஒப்புக்கொள்ளவில்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் நெருக்கமே, அவர்களின் பிரிவுக்கு காரணமாகிறது. பிரிவுக்கு பின் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அதிலிருந்து தொடர்ந்து நடக்கும் அணைத்து விஷயங்களையும், இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள், அதிலிருந்து வெளியே வந்தார்களா..? கடைசியில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றி அலசல்
வழக்கம் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை பேச்சிலர் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ். அறிமுக கதாநாயகி, நடிகை திவ்யபாரதி முதல் படத்திலேயே சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே எதார்த்தனமான நடிப்பை காட்டியுள்ள திவ்யபாரதிக்கு க்ளாப்ஸ்.
பகவதி பெருமாள் எனும் பக்ஸ், முனிஷ்காந்த் மற்றும் அருணின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. மேலும், ஜி.வி. பிரகாஷின் நண்பர்களாக வரும் அனைவரும் காட்சிகளுடன் ஒன்றிப்போகிறார்கள். கதாநாயகனின் அம்மா மற்றும் அக்காவாக வரும் இருவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.
அறிமுக இயக்குனர் சதீஸ் செல்வகுமார் தேர்ந்தெடுத்து கொண்ட கதைக்களம் சூப்பர். அதற்கு ஏற்றாற்போல் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் எதார்த்ததுடன் எடுத்துள்ளார். அதற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும் தனி பாராட்டு. கதை, வசனம், இயக்கம் அனைத்தையும் சரியாக எடுத்து சென்று இயக்குனர் சதீஸ், திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பியுள்ளார்.
அடல்ட் படமாக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியையும், படம் பார்ப்பவரின் முகம் சுளிக்காத வகையில் கையாண்டுள்ளார் இயக்குனர். சான் லோகேஷின் எடிட்டிங் சூப்பர். சித்து குமாரின் பின்னணி இசையின், கவின் சிதம்பரத்தின் சவுண்ட் டிராக் எல்லாம் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. எ.எச். காஷிப், திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் சிவசண்முகன் என மூவர் இசையமைத்துள்ள ஒவ்வொரு பாடல்களும் ஓகே.
க்ளாப்ஸ்
திவ்யபாரதி மற்றும் ஜி.வி பிரகாஷின் நடிப்பு
சதீஸ் செல்வகுமாரின் இயக்கம்
வசனம், கதைக்களம்
பின்னணி இசை, சவுண்ட் டிராக்
பல்ப்ஸ்
திரைக்கதை கொஞ்சம் சொதப்பல்.
மொத்தத்தில் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார் இந்த பேச்சிலர்..
2.75 / 5