ரெடி ஸ்டார்ட் 1, 2, 3... சிறந்த நடன கலைஞர்கள் பற்றிய குட்டி பார்வை
நடனம் தமிழ் சினிமாவில் பெரிய அங்கமாக இருக்கிறது. படம், கதை. இசையை தாண்டி நடனத்தின் மூலமாகவும் நிறைய படங்கள் ஹிட்டானது.
அப்படி சமீபத்தில் சாய் பல்லவியின் ரவுடி பேபி பாடல், தெலுங்கில் Saranga Dariya என நடனத்தின் மூலம் சில பாடல்கள் யூடியூப்பில் பெரிய சாதனைகள் செய்துள்ளது.
இப்போது நாம் இங்கே பார்க்க இருப்பது எல்லோரையும் சில பாடல்கள் மூலம் நடனம் ஆட வைத்த சிறந்த நடன இயக்குனர்கள் பற்றி தான்.
பிரபுதேவா
நடனம் என்றாலே பிரபு தேவா, பிரபுதேவா என்றாலே நடனம் தான். இந்திய சினிமா மக்களுக்கு இவர் ஒரு மைக்கேல் ஜாக்சன், இவரது உடம்பில் எழும்புகள் உள்ளதா என்பதே பலருக்கு சந்தேகம் தான்.
தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளின் சிறந்த நடன கலைஞராக இருக்கிறார். இவரது சிறந்த நடனத்திற்காகவே பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடியுள்ள பிரபுதேவா வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
1989ம் ஆண்டு நடிகர் அவதாரம் எடுத்து படங்கள் நடித்துவந்த பிரபுதேவா போக்கிரி, வில்லு படங்கள் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். பிரபுதேவா நடிக்கும் படங்களை விட இப்போது அவர் நடனம் அமைக்கும் பாடல்கள் தான் செம ஹிட் அடிக்கின்றன. எனவே ரசிகர்கள் அவர் நடிப்பதை தாண்டி நடனம் அமைப்பதில் அதிகம் செலுத்தலாம் என தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ராஜு சுந்தரம்
பிரபு தேவாவின் சகோதரர், இவரது நடனம் அமைக்கும் டிசைனும் பிரபுதேவா போலவே இருக்கும். கலகலப்பாக அதே சமயம் மக்கள் ரசித்து பார்க்கும் வகையில் இருக்கும்.
கோலிவுட், டோலிவுட் வரை இவரது புகழ் இருக்கிறது, சமீபத்தில் கன்னடத்தில் முக்கிய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மணிரத்னத்தின் திருடா திருடா படம் மூலம் முதல் வெற்றியை சந்தித்த இவருக்கு அதன்பிறகு எல்லாமே வெற்றி தான்.
நடனம் அமைப்பதை தாண்டி இவரது சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் புலி, 24 போன்ற படங்கள் கடைசியாக இவர் நடனம் அமைத்த படங்கள்.
ராகவா லாரன்ஸ்
பிரபு தேவாவின் மாணவன் என்பது போலவே கூறலாம். இவரது நடன அமைப்பும் பிரபு தேவா ஸ்டைலில் தான் இருக்கும்.
கோலிவுட்டில் சாதித்தாலும் டோலிவுட்டில் கொஞ்சம் பின்தங்கி இருந்த லாரன்ஸ் காஞ்சனா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் அங்கேயும் நன்கு பிரபலம் ஆகிவிட்டார். நடன இயக்குனர்கள் யூனியனில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இதையெல்லாம் தாண்டி ராகவா லாரன்ஸ் மக்களுக்கு உதவுவதன் மூலம் தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
கல்யாண்
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார், கொஞ்சம் வித்தியாசமாகவும் இவரது பாடல்கள் இருக்கும். அஜித்தின் உயிரோடு உயிராக படம் மூலம தனது பயணத்தை ஆரம்பித்த இவருக்கு அதன்பிறகு எல்லாமே ஹிட் தான்.
சமீபத்தில் இவர் அஜித்தின் வேதாளம் பட பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கலா மாஸ்டர்
கலா மாஸ்டர் தேசிய விருது பெற்ற முதல் பெண் நடன இயக்குனர். 4000 பாடல்களுக்கு மேல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழி பாடலுக்கு நடனம் அமைத்து சாதித்துள்ளார். 1989ம் ஆண்டு புது புது அர்த்தங்கள் படம் மூலம் நடன இயக்குனராக கலக்கி வந்தார்.
கிளாசிக்கல், வெஸ்டன், போக் என எதுவாக இருந்தாலும் இவருக்கு அத்துபடி தான். சந்திரமுகி படம் அவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்றே கூறலாம். இப்போது அவர் படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வருகிறார்.
இவர்களை தாண்டி பிருந்தா, ராபர்ட், தினேஷ், கூல் ஜெயந்த், அசோக் ராஜா, ஜோபி, ஸ்ரீதர், சதீஷ் , பாபா பாஸ்கர், ரகுமான் என பலரை கூறிக்கொண்டே போகலாம்.
பிரபல சீரியல் நாயகியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகன் அருண்- எந்த நடிகை தெரியுமா?