தமிழ் சினிமாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் திரையில் அழகாக தெரிய முக்கிய விஷயம் ஆடை தான். அப்படி சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் ஆடை வடிவமைப்பை கையாளும் தமிழ் சினிமாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் குறித்து பார்க்கவிருக்கும் சிறப்பு தொகுப்பு தான் இந்த கட்டுரை..
பூர்ணிமா ராமசாமி
பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூர்ணிமா ராமசாமி. இவர் இப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற தேசிய விருதையும் வென்றார். இப்படத்தை தொடர்ந்து இறுதி சுற்று, 36 வயதினிலே, தீரன் அதிகாரம் ஒன்று, காற்றின் மொழி, சூரரை போற்று என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
NJ சத்யா
தமிழ் சினிமா ஆடை வடிவமைப்பாளர்களில் மிகவும் பிரபலமான ஒருவர் NJ சத்யா. இவர் ஆடை வடிவமைப்பாளர் மட்டுமல்லாமல் கனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்திற்காக ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் சத்யா. இதுமட்டுமின்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ராஜா ராணி, ஜிகர்தண்டா போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் ஆடை வடிவமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசுகி பாஸ்கர்
கண்களால் கைது செய் படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் வாசுகி பாஸ்கர். இதன்பின், சென்னை 28, வில்லு, சரோஜா, தமிழ்ப்படம், கோவா போன்ற படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஆனால், இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்த திரைப்படம் அஜித்தின் மங்காத்தா தான். இப்படத்திற்காக இவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது. இதனை தொடர்ந்து பாயும் புலி, சுல்தான், மற்றும் சமீபத்தில் வெளிவந்த மாநாடு என பல சூப்பர்ஹிட் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் வாசுகி பாஸ்கர்.
நளினி ஸ்ரீராம்
தமிழ் சினிமாவில் மூத்த ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் நளினி ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் திரையுலகிற்கு ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதன்பின், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க, கில்லி, வேட்டையாடு விளையாடு, போக்கிரி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு வெளிவந்த ஹெலோ எனும் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.