புதிய பாதை முதல் ஒத்த செருப்பு வரை.. நடிகர் பார்த்திபனின் சிறந்த படங்கள்
நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்திருக்கிறார் ஆர். பார்த்திபன். வடிவேலு உடன் சேர்ந்து அவரது குசும்பு பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
சமீப காலமாக அவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் அதிலும் காமெடி கலந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.
இயக்குனராகவும் பல வெற்றி படங்கள் கொடுத்திருக்கிறார் பார்த்திபன். பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக இருந்து அதன்பின் இயக்குனர் ஆனவர் தான் பார்த்திபன். அவரது சிறந்த படங்கள் பற்றி ஒரு ஸ்பெஷல் பார்வை.
புதிய பாதை
1989ல் வெளிவந்த இந்த படம் தான் பார்த்திபன் இயக்கிய முதல் படம். இதில் வி.கே.ராமசாமி, சீதா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் புதிய பாதை படம் ரீமேக் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை அநாதைகளாக சாலையில் விட்டால் அவர்கள் எப்படி ரௌடியாக வளர கூடும் என காட்டி சமூகத்திற்கு ஒரு அட்வைஸ் கூறி இருந்தது இந்த படம்.
நடிகை சீதாவை இந்த படத்தில் பணியாற்றியபோது தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரகள் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக பார்த்திபன் சமீபத்தில் கூறி இருந்தார். அதனால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஹவுஸ்புல்
படத்தின் பெயருக்கு தகுந்தாற்போல மொத்த படமும் ஒரு தியேட்டர் உள்ளே நடப்பது போல இருக்கும். 1999ல் வெளிவந்த இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
தியேட்டர் உள்ளே வெடிகுண்டு இருந்தால் என்ன நடக்கும் என்பது தான் ஒரு வரி கதை. ஸ்கிரிப்ட் எழுதாமலேயே நேரடியாக இந்த படத்தை பார்த்திபன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், சுவலச்சுமி, ரோஜா உள்ளிட்டோர் இதில் நடித்து இருந்தனர்.
ஒத்த செருப்பு சைஸ் 7
2019ல் வெளிவந்த இந்த படம் பார்த்திபனுக்கு மீண்டும் தேசிய விருதை பெற்று தந்தது.
படம் முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரம் தான் வரும். அப்படிப்பட்ட படங்கள் இதற்கு முன் உலகத்தின் பல்வேறு இடங்களில் வந்திருந்தாலும் பார்த்திபன் ஒத்த செருப்பு படத்திற்கான மொத்த பணிகளையும் அவரே மேற்கொண்டார்.
தமிழ் சினிமாவில் விருதுகளுக்காகவே வித்தியாசமான படங்களை தொடர்ந்து எடுத்து வருபவர் பார்த்திபன் என ஒரு விமர்சனம் உண்டு. ரசிகர்களுக்கு பிடித்த விஷயமும் அதே தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவின் நிழல்
பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன இரவின் நிழல் படம் உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவானதாக பார்த்திபன் அறிவித்தார். அது உண்மையா என ஒரு விமர்சகர் கேள்வியும் எழுப்ப பெரிய சர்ச்சையானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
பல ஏக்கரில் செட் அமைத்து ஒரே ஷாட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தது.
113 சர்வதேச விருதுகள் இந்த படத்திற்க்கு கிடைட்திருப்பதாக பார்த்திபன் கூறி இருக்கிறார்.