சமூக பொறுப்பாளர் சமுத்திரக்கனி இயக்கிய சிறந்த படங்கள்
சமுத்திரக்கனி
சமூகப் பொறுப்புள்ள திரைக் கலைஞர் என்ற அங்கீகாரத்தை மக்கள் மத்தியில் பெற்றிருப்பவர் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி.
பார்த்தாலே பரவசம், அண்ணி தொலைக்காட்சி தொடர்களில் பாலசந்தரின் உதவி இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி அதன்பின் அரசி, செல்வி போன்ற தொடர்களை இயக்கினார்.
2003ல் உன்னைச் சரணடைந்தேன் என்ற படத்தை முதன்முதலில் இயக்கினார். அடுத்து கேப்டன் விஜயகாந்தை வைத்து படம் இயக்க அந்தப் படம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
படங்கள் இயக்குவதை தாண்டி நிறைய படங்கள் நடித்துள்ளார், தொலைக்காட்சி தொடர்களை கூட இயக்கியுள்ளார். இன்னொரு பக்கம் டப்பிங்கும் பேசியிருக்கிறார். சரி அவர் இயக்கிய படங்களில் மிகவும் சிறந்த படங்களின் விவரத்தை காண்போம்.
நாடோடிகள் (2009)
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய், பரணி 3 பேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றிகண்ட படம் நாடோடிகள்.
நண்பர் ஒருவரின் காதலுக்காக சசி, விஜய், பரணி மிகவும் போராடி பல எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து வைக்கிறார்கள், அதனால் நிறைய இழப்புகளையும் சந்திக்கிறார்கள்.
ஆனால் அவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தால் அவர்கள் பிரிந்து வேறொரு திருமணத்திற்கு தயாராகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தங்களை ஏமாற்றிய காதலர்களை கொலை செய்ய முடிவு செய்து பின் இறுதியில் என்ன செய்கிறார்கள் என்பது கதை.
மிகவும் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு பவர்புல் இசையுடன் வெளியான படம்.
போராளி (2011)
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அல்லாரி நரேஷ், கஞ்சா கருப்பு என பலர் நடிக்க வெளியான படம் போராளி.
இரவு மழையோடு கதை தொடங்குகிறது, தங்களது வாழ்க்கையில் நடந்த சில மர்மங்களை மறைத்து சென்னை வரும் சசிகுமார், அல்லாரி நரேஷ் தங்களது நண்பன் கஞ்சா கருப்பு வீட்டில் தங்குகிறார்கள். பின் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார்கள்.
இரண்டாம் பாதியில் இவர்கள் யார், இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது கதையின் முக்கிய கரு. நாடோடிகள் படத்திற்கு பிறகு பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான படம்.
நிமிர்ந்து நில் (2014)
ஜெயம் ரவி இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். எந்த விஷயம் எடுத்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவரின் வாழ்க்கையில் நடக்கும் போராட்ட கதை.
லஞ்ச ஒழிப்புக்கு எதிராக போராடும் கதை.
அப்பா (2016)
எல்லா அப்பாக்களும் பார்க்க வேண்டிய படம். தங்களது குழந்தைகளை எப்படி வழிநடத்தலாம், அவர்களின் எதிர்காலம் எப்படி அமைக்கலாம் என அழகாக எமோஷ்னலாக காட்டப்பட்ட படம்.
விசாரணை (2016)
வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி என பலர் நடிக்க வெளியான படம். தாங்கள் செய்யாத தவறுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு கொடுமைகளை அனுபவிக்கும் சாதாரண வேலை செய்யும் 4 பேர்.
அவர்கள் நேர்மையான போலீஸ் அதிகாரியால் ரிலீஸ் ஆக அதன்பிறகே அவர்கள் பெரிய கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் சமுத்திரக்கனி.
இப்படம் அவர் இயக்கியது இல்லை என்றாலும் நடிப்புக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம்.