தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த காதல் திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த காதல் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
ஓகே கண்மணி:
மணிரத்னம் இயக்கி 2015- ம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஓகே கண்மணி. இதனை அவரது நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது.
இதில் முதன்மை வேடங்களில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், நித்தியா மேனனும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் பின்னணி இசையமைத்திருப்பார்.
பியார் பிரேமா காதல்:
இலன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல்.
இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் மற்றும் கதாநாயகியாக ரைசா நடித்திருந்தனர். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இறுகப்பற்று:
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
ராஜா ராணி:
அட்லீ இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராஜா ராணி. இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காதல் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
லவ் டுடே :
பிரதீப் ரங்கநாதன் தானே ஹீரோவாக நடித்து இயக்கிய படம் லவ் டுடே. இளம் காதல் ஜோடி தங்களது செல்போனை exchange செய்துகொண்டால் அதன் மூலம் வரும் பிரச்சனைகளை ஜாலியாக படமாக்கி இருந்தார் பிரதீப்.
இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்த நிலையில் நல்ல வசூலை குவித்தது.
ரோஜா:
தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரோஜா.
அரவிந்த் சாமி, மதுபாலா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.
இப்போதும் இந்த படத்திற்கு தனி ரசிகர் வட்டாரமே உள்ளது, அதிலும் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த இப்பட பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
96:
கடந்த 2018ம் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்க வெளியான படம் 96.
இப்படம் 2018 - ம் ஆண்டு வெளிவந்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தில் வந்த ரீயூனியன் காட்சி, பள்ளி பருவ காட்சி, த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான பேச்சுவார்த்தை என பல்வேறு விஷயங்கள் ரசிக்க வைத்தது.