பைசன் காளமாடன் திரைவிமர்சனம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அப்லாஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த பைசன் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
கபடி என்பதை தனது உயிராய் பார்க்கும் துருவ் விக்ரம் (கிட்டான்), சிறு வயதில் இருந்தே கபடி விளையாட வேண்டும் என இருக்கிறார். பள்ளியில் படித்துவரும் நேரத்தில், பள்ளியின் PT வாத்தியார் துருவ் விக்ரமின் ஆற்றலை பார்த்து அவரை பள்ளி கபடி அணியில் சேர்த்துவிடுகிறார். ஆனால், துருவ் கபடி ஆடுவது அவருடைய தந்தையான பசுபதிக்கு (வேலுசாமி) பிடிக்கவில்லை.
சாதியின் காரணமாக பல வேலிகள் தங்களை சுற்றி இருக்கிறது. மேலும், தங்களின் சொந்தக்காரன் கூட ஊர் அணியில் என் மகனை சேர்த்துக்கொள்ள மாட்டான். இதனால் என் மகனுக்கு கபடி வேண்டாம் என பசுபதி பயப்படுகிறார். ஆனால், இந்த கபடி உங்கள் மகனை மிகப்பெரிய அளவிற்கு கூட்டிச் செல்லும் என PT வாத்தியார் கூறி, துருவ் விக்ரமை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறார்.

ஊருக்குள் சாதி பிரச்சனை இரு தரப்பினர் இடையே உள்ளது. ஒரு பக்கம் அமீர் (பாண்டியராஜ்), மறுபக்கம் லால் (கந்தசாமி) ஆகிய இருவரும், அவர்களை சார்ந்தவர்கள் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வெட்டி கொலை செய்து வருகிறார்கள். ஒரு தரப்பினர் அமீர் தங்களது தலைவராக பார்க்கின்றனர். அதே போல் மற்றொரு தரப்பினர் லாலை தங்களின் தலைவராக பார்க்கிறார்கள்.
இப்படியொரு சாதி பிரச்சனை இருந்தாலும், தன்னை சுற்றி போடப்பட்டுள்ள வேலிகளை ஒவ்வொரு கட்டமாக தகர்த்தெறிந்துவிட்டு கபடியில் சாதித்துக்கொண்டே இருக்கும் துருவ் விக்ரம், ஒரு கட்டத்தில் இந்த சாதி பிரச்சனைக்குள் சிக்க, இதனால் அவரிடம் கை உடைக்கப்படுகிறது. ஒரு பக்கம் சாதி, அதனால் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள், அவமானங்கள், இழப்புகள், என அனைத்தையும் கடந்து பல போராட்டங்களை சந்தித்து துருவ் விக்ரம் வெற்றிபெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் மாரி செல்வராஜ் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை சிறப்பாக திரைக்கதையில் வடிவமைத்து திரையில் வழங்கியுள்ளார். அதற்கு முதலில் அவருக்கு பாராட்டுக்கள். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை நம்மை பதட்டத்துடன் வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி. ஒவ்வொரு காட்சியையும் அவர் வடிவமைத்த விதம் அழகாக இருந்தது.
காரணத்துடன் நகரும் திரைக்கதை நம்மை அடுத்து என்ன அடுத்து என்ன என யோசிக்க வைக்கிறது. விளையாட்டு போட்டியில் கதாநாயகன் வெற்றிபெறுவார் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை சுவாரஸ்யமாகவும், நம்மை பதட்டத்துடன் பார்க்க வைத்தது தான் படத்தின் வெற்றி ஆகும்.

அனுபமா பரமேஸ்வரன் - துருவ் விக்ரம் காதல் காட்சிகள் படத்தில் எதற்கு என்கிற கேள்வி எழுகிறது. ஏனென்றால், அந்த காதல் காட்சிகள் இந்த திரைக்கதைக்கு தேவையா? அது இப்படத்திற்கு மைனஸாக அமைகிறது. ஆனால், பிடித்தவரைதான் இந்த பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும், கட்டாயத் திருமணம் செய்துவைக்க கூடாது என அமீர் சொன்னது சிறப்பாக இருந்தது.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. கதாநாயகன் துருவ் விக்ரம் 'கிட்டான்' என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இது துருவ் விக்ரம்-ஆ என ஆச்சரியப்பட வைத்துவிட்டார். இப்படத்திற்காக அவர் போட்டுள்ள உழைப்புக்கு தனி பாராட்டு. மற்ற நடிகர்களின் நடிப்பு பெரிதளவில் படத்திற்கு பங்களித்தாலும், இவர் மொத்த படத்தையும் தனது நடிப்பால் தோளில் சுமந்து வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார்.

அடுத்ததாக தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்த பசுபதி. இவருடைய நடிப்பை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி, நம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். அதை பைசன் படத்தில் சிறப்பாக செய்துள்ளார். தன் மகனை இந்த சமூகத்திடம் இருந்து பாதுகாக்கும் அப்பாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் தன் மகனின் வெற்றியை பார்த்து கண்கலங்கியது, நம் கண்களிலேயே கண்ணீர் வந்துவிட்டது. லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
PT வாத்தியாராக வந்த நடிகர் மதன்குமார் கவனத்தை ஈர்க்கிறார். அயலி வெப் தொடருக்கு பிறகு, இப்படம் அவருக்கு நல்ல பாராட்டுகளை கண்டிப்பாக பெற்று தரும். அதே போல் இந்திய கபடி அணியின் கேப்டனாக நடித்தவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. அவருக்கு வாழ்த்துக்கள். இவர்களை தவிர்த்து, அனுபமாவின் அண்ணனாக நடித்தவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருந்தார். இப்படி படத்தில் வந்த ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பு சிறப்பாக வழங்கியுள்ளார்.

துருவ் விக்ரம் திரையில் தெரிந்த ஹீரோ என்றால், திரையில் தங்களது முகத்தை காட்டாமல் ஹீரோக்கள் ஆகியுள்ளனர், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் டெக்னீஷியன்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பின்னணி இசை மற்றும் பாடல்களில் பட்டையை கிளப்பிவிட்டார்.
ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒவ்வொரு காட்சியையும் அழகாக காட்டியுள்ளார். குறிப்பாக கபடி விளையாடும் காட்சிகளை இவர் ஒளிப்பதிவில் காட்டிய விதம் நன்றாக இருந்தது. சக்தி திருவின் எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

பிளஸ் பாயிண்ட்
துருவ் விக்ரம், பசுபதி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு.
மாரி செல்வராஜின் திரைக்கதை.
பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங்.
கபடி காட்சிகள்
ஒளிப்பதிவு
வசனம்
மைனஸ் பாயிண்ட்
காதல் காட்சிகள்
மொத்தத்தில் இந்த பைசன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
