Black Phone 2: திரை விமர்சனம்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பட இயக்குநரின் படைப்பாக வெளியாகியுள்ள Black Phone 2 ஹாலிவுட் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
1982யில் க்வென்னுக்கு ஒரு கனவு வருகிறது. அதில் 1957யில் ஆல்பைன் ஏரியில் சிறுவன் ஒருவன் கொல்லப்படுவது தெரிய வருகிறது.
மறுபுறம் கிராப்பரை கொலை செய்த பின்னர் வேலை செய்த போனில் இருந்து அழைப்பு வருவதாக நினைக்கும் மன அதிர்ச்சியில் இருக்கிறார் அவரது சகோதரன் ஃபின்னி. மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த அவர்களது அப்பா திருந்தி நல்ல வாழ்க்கைமுறையில் அவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறுவன் கொல்லப்படுவது க்வெனின் கனவில் வருகிறது. அவர்கள் இருக்கும்போது ஒரு எழுத்தை எழுதி வைக்கிறார்கள். இது எல்லாம் ஆல்பைன் ஏரி என்ற இடத்தில் நடப்பதை அறிகிறார் க்வென். பின்னர் அங்கு நடந்த யூத் கேம்ப் குறித்த பேம்ப்லட்டை ஃபின்னியிடம் காட்டுகிறார்.
ஆனால் ஃபின்னியோ அதனை நம்ப மறுக்க, அவர்களது தந்தை இது உங்க அம்மா வேலை செய்த இடம் என்று கூறுகிறார். அப்போது நம்பும் ஃபின்னி, க்வென் மற்றும் அவரது பாய் ப்ரெண்ட்டை அழைத்துக் கொண்டு ஆல்பைன் ஏரிக்கு செல்கிறார்.

அங்கு கொல்லப்பட்ட சிறுவர்களுக்கும் தங்களுக்கும் என்ன சம்பந்தம்? அங்கு இவர்களுக்கு நடக்கும் மர்ம தாக்குதல்களில் இருந்து தப்பித்து உண்மையை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2021ஆம் ஆண்டில் வெளியான பிளாக் போன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இப்படம். இதனால் முதல் பாகத்தை கண்டிப்பாக பார்த்துவிட்டுதான் இப்படத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் அதன் தொடர்ச்சியாகவே பல முடிச்சுகளை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஸ்காட் டெரிக்சன்.
சிறுவனாக இருந்து சைக்கோ கில்லரிடம் இருந்து முதல் பாகத்தில் தப்பிய ஃபின்னி, தற்போது பெரியவனாக வளர்ந்து இருக்கிறார். முதல் பாகத்தில் இறந்துபோனவர்கள் பிளாக் போனில் வந்து பேசி உதவி கேட்பார்கள்.
அதேபோல் இம்முறை வரும் அழைப்புகளுக்கு உதவி செய்ய முடியாது என்று மறுக்கிறார் ஃபின்னி. ஆனால் ஒரு அழைப்பு அவரது எண்ணத்தை மாற்றுகிறது. அந்த காட்சியில் மிகவும் பதட்டமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஃபின்னியாக நடித்துள்ள மேசன் தாமஸ். தங்கைங்காக அவர் போராடும் காட்சிகள் செம.

அவரை விட க்வென் ஆக நடித்துள்ள மடேலெய்ன் மெக்ரோவுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அம்மா நினைத்து உருகி அழுவது, வில்லனை எதிர்த்து சண்டையிடுவது என நடிப்பில் அதிக ஸ்கோர் செய்கிறார். டேமின் பிசிர், ஜெர்மி டேவிஸ், அரியன்னா ரிவாஸ் ஆகியோரும் தங்களது பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
இவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு சைக்கோ கில்லராக ஈத்தன் ஹாக் மிரட்டியுள்ளார். முகமூடியுடன் அவர் தோன்றும் காட்சியெல்லம் மிரட்டல்தான். வலுவான எதிரியை ரிவில் செய்யும் இடம் செம. அதேபோல் அவரை எப்படி ஃபின்னி, க்வென் வீழ்த்தப்போகிறார்கள் என்கிற பரபரப்புடனே திரைக்கதை செல்கிறது.
பல ட்விஸ்ட் அண்ட் டெர்ன்ஸை வைத்து திரையில் இருந்து நகரவிடாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பாக எழுதியிருக்கிறார் இயக்குநர். அத்துடன் மிரட்சியை ஏற்படுத்தும் காட்சிகளையும் சிறப்பாக எடுத்துள்ளார். இரத்தம் தெறிக்கும் கொடூர காட்சிகள் இருப்பதால் கண்டிப்பாக இளகிய மனம்கொண்டவர்கள், சிறுவர்களுக்கான படம் அல்ல.

அட்டிகஸ் டெரிக்சனின் இசை படம் முழுக்க நம்மை பதட்டத்தில் வைத்திருக்க செய்கிறது. அந்தளவிற்கு மிரட்டியிருக்கிறார். பர் எம்.எக்பெர்க்கின் கேமரா ஒர்க் பனிப்பிரதேசத்தில் நம்மை இருக்க வைக்கிறது. முதல் பாகத்தை ஒப்பிடுகையில் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
கனவுகளில் அடிபடும்போது நிஜத்தில் காயம் ஏற்படுவது போன்ற காட்சிகளில் சில படங்களில் பார்த்திருப்போம். என்றாலும் அதனை ஹீரோயின் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை காட்டியவிதம் அருமை.
க்ளாப்ஸ்
கதை மற்றும் திரைக்கதை
திகிலூட்டும் காட்சிகள்
ட்விஸ்ட்ஸ்
பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த பிளாக் போன் 2 மிரட்டலின் உச்சம். கண்டிப்பாக ஹாரர், திரில்லர் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.
