பிளாக்மெயில்: திரை விமர்சனம்
ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த், பிந்து மாதவி நடிப்பில் வெளியாகியுள்ள பிளாக்மெயில் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்ப்போம்.
கதைக்களம்
மணி (ஜி.வி.பிரகாஷ் குமார்) மெடிக்கல் குடோனில் இருந்து டெம்போவில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வேலையை செய்துகிறார். அவரிடம் முதலாளியான முத்துக்குமார் ஒரு பார்சலை கொடுத்து டெலிவரி செய்ய சொல்கிறார்.
ஆனால் மணியின் டெம்போ பார்சலுடன் கடத்தப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், மணியின் காதலி ரேகாவை (தேஜு அஸ்வினி) கடத்தி வைத்துக் கொண்டு பார்சலை கொண்டுவர வேண்டும் என பிளாக்மெயில் செய்கிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் மணிக்கு லிங்கா உதவி செய்ய முன் வருகிறார். அவரோ அசோக் (ஸ்ரீகாந்த்) என்பவரின் குழந்தையை கடத்தினால், மிரட்டி பணம் பறிப்பதில் பங்கு தருவதாக மணியிடம் கூறுகிறார்.
முதலில் மறுக்கும் மணி பின்னர் ஒப்புக்கொண்டு குழந்தையை கடத்த களமிறங்க, அவருக்கு முன்பே குழந்தை காணாமல் போகிறது. அதன் பின்னர் மணி காதலியை மீட்டாரா? குழந்தை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஜி.வி.பிரகாஷ் குமார் மணி கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ஸ்ரீகாந்த், முத்துக்குமார், லிங்கா, ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நல்ல நடிப்பை தந்திருக்கின்றனர்.
ஒரு குழந்தையை கடத்துவதில் ஏற்படும் குழப்பங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். ஆனால், ட்விஸ்ட்கள் என்ற பேரில் சோதித்திருக்கிறார்.
தேஜு அஸ்வினியை காப்பாற்ற ஜி.வி.பிரகாஷ் போராடுவதாக கதை தொடங்க, ஸ்ரீகாந்த் மற்றும் பிந்து மாதவி இருவரும் குழந்தை காணாமல் போனதால் பரிதவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் படத்தின் ஹீரோ யார் என்ற கேள்வியே முதல் பாதியில் எழுகிறது. இடைவேளையிலேயே கிட்டத்தட்ட கதை முடிந்து விடுகிறது. அதன் பின்னர் படத்தை இரண்டு மணிநேரம் கொண்டுசெல்ல வேண்டுமே என்பதுபோல் குழந்தையை வைத்து ஆளாளுக்கு கடத்தல் திட்டம் போடுகிறார்கள்.
ஸ்ரீகாந்த்திடம் குழந்தை கிடைக்கப்போகும் தருவாயில் 'இப்போது மறுபடியும் காணாமல் போகும்பாரு' என்று ஆடியன்ஸான நாமே கூறும் அளவிற்குதான் வலுவில்லாத திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
படத்தில் ஆறுதலான விஷயம் என்றால் ரெடின் கிங்ஸ்லியின் காமெடி காட்சிகள்தான். முத்துக்குமாரும் அவருடன் சேர்ந்து காமெடி செய்வது சிறப்பு. திரில்லர் படம் என்று சொன்னாலும் இதுபோன்ற பல கதைகளை நாம் பார்த்திருப்போம். காட்சிகளும் பார்த்து பழகியவை என்பதால் முதல்பாதி எப்படியோ நகர்ந்து விட்டாலும், இரண்டாம் பாதி ரொம்பவே சோதிக்கிறது.
க்ளாப்ஸ்
இடைவேளை ட்விஸ்ட்
ரெடின் கிங்ஸ்லி காமெடி
பல்ப்ஸ்
வலுவில்லாத யூகிக்கக்கூடிய திரைக்கதை
அழுத்தம் இல்லாத சென்டிமென்ட் காட்சிகள்