Bloody Beggar: திரை விமர்சனம்
கவின் நடிப்பில் காமெடி த்ரில்லராக வெளியாகியுள்ள Bloody Beggar திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.
கதைக்களம்
கவின் மாற்றுத்திறனாளி, கண் பார்வையற்றவர் என ஒவ்வொரு நாளும் ஒரு வேஷம் போட்டு பிச்சையெடுக்கிறார்.
ஆனால் ஜேக் என்ற சிறுவன் உழைத்து வாழ வேண்டும் என, பள்ளிக்கு சென்றுகொண்டே இடையில் புத்தகம், பேனா என விற்று கவினுடன் சேர்ந்து வசிக்கிறார்.
ஒருநாள் ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்கும் நாளில் பிச்சைக்காரர்களுள் ஒருவராக கவினும் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மாளிகைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழையும் கவின் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
அதன் பின்னர் உயிருக்கு ஆபத்தான பிரச்சனையில் இருந்து கவின் தப்பித்தாரா இல்லையா என்பதே Bloody Beggar படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
படத்தின் ஆரம்பத்திலேயே பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கும் கவின், அவருடன் இருக்கும் சிறுவனை கலாய்ப்பது, மாளிகைக்குள் சென்றவுடன் எல்லாவற்றையும் வியந்து பார்ப்பது என நடிப்பில் ஈர்க்கிறார்.
ரெடின் கிங்ஸ்லியின் அறிமுகத்தில் இருந்து அவர் பேசும் வசனங்கள் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. பேராசை பிடித்த பணக்கார குடும்பத்தில் கவின் மாட்டிக்கொள்வது, அவர்களிடம் இருந்து அவர் தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.
ஜென் மார்ட்டினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகமான நகர்வுக்கு வலுசேர்க்கிறது. மலையாள நடிகர் சுனில் சுகதா சைலண்ட் வில்லானாக மிரட்டுகிறார். அதேபோல் தெலுங்கு நடிகர் ப்ருத்வி ராஜ் காமெடியில் கலக்குகிறார். ஆனாலும் அர்ஷத்தின் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள்தான் காமெடியின் உச்சம்.
காமெடி திரில்லர் கதையாக இருந்தாலும் ஆங்காங்கே வரும் சென்டிமென்ட் காட்சிகளும் கவர்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார். எனினும் ஒரு சில இடங்களை குறைத்திருக்கலாம்.
படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் கவினுக்கு நடிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர் பாடிலேங்குவேஜை கச்சிதமாக செய்யும் அவர், உடைந்து அழும் சில காட்சிகளில் தான் நல்ல நடிகர் என்பதையும் காட்டியிருக்கிறார்.
க்ளாப்ஸ்
கவனின் நடிப்பு
நகைச்சுவை காட்சிகள்
தொய்வில்லாத திரைக்கதை
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் சற்று கத்திரி போட்டிருக்கலாம்