பார்டர் 2: திரை விமர்சனம்
பார்டர் 2
சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசஞ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பார்டர் 2 இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

கதைக்களம்
1971யில் பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவில் ஊடுருவ முயற்சிக்கிறது. ஒரு குழு உள்ளே நுழைவதை தடுக்கும் முயற்சியில் தப்பித்து செல்ல, இராணுவ உயரதிகாரியான ஃபடெ சிங் (சன்னி தியோல்) அவர்களை கொன்று நூலிழையில் உயிர்தப்பிக்கிறார்.
தரைப்படையில் மேஜராக இருக்கும் ஹோஷியர் சிங் (வருண் தவான்), இராணுவ பயிற்சி முகாமில் இருந்த நாட்களை ஹோஷியர் நினைத்துப் பார்க்கிறார். நிர்மல் ஜித் சிங் (தில்ஜித் தோசஞ்), மஹேந்திர சிங் (அஹான் ஷெட்டி) ஆகிய இருவரும் திமிராக இருக்கும் ஹோஷியருடன் முரண்படுகின்றனர்.
குறிப்பாக நிர்மலுக்கும், ஹோஷியருக்கும் இடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுகிறது. இதனால் உயரதிகாரியான ஃபடெ சிங்கிடம் அடிக்கடி தண்டனை பெறுகின்றனர். ஒரு கட்டத்தில் ஹோஷியருக்கு பெற்றோர், உறவினர்கள் என யாரும் இல்லை என்பதை அறியும் நிர்மல் அவருடன் நட்பாகிறார்.
பின் மூவரும் நல்ல நண்பர்களாக நிர்மலின் திருமணத்தை கொண்டாட்டமாக நடத்துகின்றனர். அதே சமயம் ஹோஷியருக்கும் திருமணம் ஆகி, அவரது மனைவி கர்ப்பமாகிறார்.
இந்த சமயத்தில் நண்பர்கள் மூவருக்கும் பயிற்சி முடிய ஹோஷியர் தரைப்படையிலும், நிர்மல் வான்படையிலும், மஹேந்திர சிங் கடற்படையிலும் சேர்க்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? மூன்று வழிகளிலும் (தரை, வான், கடல்) தாக்கும் பாகிஸ்தான் இராணுவத்தை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
1997ஆம் ஆண்டில் வெளியான பார்டர் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தை அனுராக் சிங் இயக்கியுள்ளார். முதல் பாதியை எமோஷனல் டிராமாவாகவும், இரண்டாம் பாதியை ஆக்ஷனாகவும் எடுத்துள்ளார்.
1971யில் பாகிஸ்தான் இரு பிரதேசங்களாக (இன்றைய வங்காளதேசம்) இருந்தபோது இந்தியா போரிட்டதை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதியுள்ளனர் சுமித் அரோரா, அனுராக் சிங். சன்னி தியோல் கம்பீரமாக, கண்டிப்பான அதிகாரியாக இயல்பான நடிப்பை தந்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளில் தன்னால் முடிந்த பங்களிப்பையும் கொடுத்துள்ளார். அதே சமயம் மகனை பறிகொடுத்த பின் கலங்குவது, வருண் தவான் மற்றும் தில்ஜித்திற்கு தண்டனை கொடுக்கும்போது கண்டிப்பது, வீரர்களிடம் எழுச்சி உரையாற்றுவது என தேர்ந்த நடிகர் என்பதை காட்டியுள்ளார்.

வருண் தவான் இந்த முறை சரியான அளவில் மிகையில்லாமல் நடித்துள்ளார். மனைவியிடம் அன்பை காட்டும் அதேவேளையில், சண்டை என்று வந்துவிட்டால் களத்தில் இறங்கி அடிக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் சன்னி தியோலுடன் இணைந்து மிரட்டியுள்ளார். சன்னி தியோல், வருண் தவான் ஆகியோருக்கு போட்டியாக தில்ஜித் சிங் நடித்துள்ளார்.
முதல் பாதியில் கலாட்டா செய்யும் நபராகவும், இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக எதிரிகளுடன் சண்டையிடுவதிலும் ஸ்கோர் செய்கிறார். ஆனால் அஹான் ஷெட்டிக்குதான் நடிப்பில் முகபாவனை வரவில்லை. எனினும் சண்டைக்காட்சியில் மிரட்டுகிறார்.
இயக்குநராக அனுராக் சிங் அட்டகாசம் செய்துள்ளார். மூன்று மணிநேரத்திற்கு மேல் செல்லும் படம் எங்கும் தொய்வாக சலிக்கவில்லை.

அந்த அளவிற்கு தேசப்பற்றை இயல்பான காட்சிகளில் காட்டி ரசிக்க வைத்துள்ளார். தாயை இழந்த வீரரிடம் தனக்கு மகள் பிறந்திருக்கிறாள், அவள் உன் தாய்தான் என்று கூறி சக வீரர் ஆறுதல் கூறும் காட்சி என பல எமோஷனல் காட்சிகள் மனதை தொடுகின்றன.
கடற்படை சண்டையிடும் காட்சிகளில் கிராபிக்ஸ் சற்று பிசிறுதட்ட, மற்ற விஷயங்களில் டெக்னிக்கல் ஆக படம் வலுவாக உள்ளது. தேவையான இடங்களில் மட்டுமே பாடல்களை பயன்படுத்தியது சிறப்பு. அணு மாலிக், மிதூன், சச்செத்-பரம்பர, விஷால் மிஸ்ரா மற்றும் குர்மோ ஆகியோர் பாடல்களை தந்துள்ளனர்.
ஜான் ஸ்டீவர்ட் எடூரின் பின்னணி இசை படத்திற்கு பலம். இரத்தம் தெறிக்கும் காட்சிகள், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் கண்டிப்பாக இது குழந்தைகளுக்கான படம் அல்ல.

க்ளாப்ஸ்
கதை திரைக்கதை சண்டைக்காட்சிகள் எமோஷனல் டச் காட்சிகள்
பல்ப்ஸ்
சினிமாத்தனத்தை சற்று குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் இந்த பார்டர் 2-வை தேசப்பற்று சிந்தனை உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும், அனைவரும் பார்க்கக்கூடிய படம்தான்.