ப்ரோமேன்ஸ் திரை விமர்சனம்
மேத்யூ தாமஸ், மஹிமா நம்பியார் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி பண்ணுவது, ஊர் சுற்றுவது என ஜாலியான இளைஞரான பிண்டு (மேத்யூ தாமஸ்) யூடியூப்பில் வேறொரு பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
ஊருக்கு வரும் அவரது அண்ணன் ஷிண்டு (ஷ்யாம் மோகன்) செலவுக்கு பணம் கொடுக்க, பிண்டு தனது நண்பர்களை சேர்த்துக் கொண்டு கர்நாடகாவுக்கு பார்ட்டி செய்ய போகிறார்.
அங்கே கலாட்டா நடக்க அதனை வீடியோ எடுத்து வைக்கும் பிண்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது ஷிண்டுவின் நண்பர் ஷபீரிடம் (அர்ஜுன் அசோகன்) பிண்டுவுக்கு ஒரு போன் வருகிறார். ஷிண்டுவை காணவில்லை, எங்கே போனான் என்று தெரியவில்லை என்று கூற உடனே பிண்டு கிளம்புகிறார்.
பிறகு காணாமல் போன ஷிண்டுவை கண்டுபிடிக்க இருவரும் போலீஸ் ஸ்டேஷன் செல்கின்றனர். அங்கே இருக்கும் எஸ்.ஐயைப் பார்த்து பிண்டுவுக்கு ஷாக் ஆகிறார். ஏனெனில் குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் தடுக்கி விழும்போது, பிண்டு அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் கேலியாக சித்தரித்து பதிவிட்டதால் காமெடி போலீசாகிவிட்டார் அந்த எஸ்.ஐ சுறா.
பிண்டுவை பழிவாங்க இதுதான் சந்தர்ப்பம் என நினைக்கும் அவர், Unofficial ஆக உன் அண்ணனை தேடு என்று கூறி கூரியர் பாபு என்பவருடன் சேர்த்து அனுப்பி வைக்கிறார்.
அதன் பின்னர் குழுவாக விராஜ்பேட் என்ற ஊருக்கு கிளம்பும் பிண்டு தனது அண்ணனை கண்டுபிடித்தாரா? அவருக்கு என்ன ஆனது என்பதே கலகலப்பான மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
காமெடி கலாட்டா பாணியில் திரைக்கதையை கையாண்டிருக்குகிறார் இயக்குநர் அருண் டி.ஜோஷ். மேத்யூ தாமஸ் காமெடியில் ஸ்கோர் செய்தாலும் எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் மெருகேறியிருக்கிறார்.
குறிப்பாக எஸ்.ஐயிடம் சிக்கிய காட்சியில் நாய் போல் நடித்து காட்டி அவமானப்படும் இடத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், மஹிமா நம்பியார், 'பிரேமலு' சங்கீத் பிரதாப் மற்றும் கலாபவன் ஷாஜான் எல்லாரும் ஒருங்கிணைவது என திரைக்கதை செல்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே ஷ்யாம் காணாமல் போனாலும், இடைவேளையில்தான் அவர் எந்த ஊரில் மாயமாகியிருக்கலாம் என யூகித்து அனைவரும் கிளம்புகின்றனர். ஆனாலும், அதுவரை நம்மை சிரிக்க வைக்க எங்கும் அவர்கள் தவறவில்லை. மேத்யூ தாமஸ் கோபம் ஆகும்போது ஸ்மார்ட்வாட்ச்சில் மீட்டர் ஏறுகிறது.
அதனைப் பார்த்து சங்கீத் "அடேய் இங்கே வேணாம் டா" என கூறும் இடமெல்லாம் சிரிப்பு வெடி. ஹேக்கராக வரும் சங்கீத் பல இடங்களில் காமெடியில் அசால்டாக ஸ்கோர் செய்கிறார். நான் பேட்மேன், பிரேமலு பாடலை பாடுவது என அதகளம் செய்திருக்கிறார். மஹிமா நம்பியார் பளிச்சென்று ஒவ்வொரு காட்சியிலும் தோன்றுகிறார்.
இரண்டாம் பாதியில் அவருக்கு நடிப்பதற்கு பல காட்சிகள் இருக்கின்றன; அதிலும் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அர்ஜுன் அசோகன் கல்யாண வீட்டில் செய்யும் கலாட்டா போர்ஷன் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அவர் டான்ஸ், சண்டை, காமெடி என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.
கிளைமேக்ஸ் காட்சி நம்ம சுந்தர்.சி படங்களின் டெம்ப்ளேட்தான் என்றாலும் ரசிக்கும் படி எடுத்திருக்கிறார் இயக்குநர். அதில் KGF, பாகுபலி, புஷ்பா, அவென்ஜர்ஸ் என பல படங்களை ரெபெரென்ஸ் காட்டியிருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். முதல் பாடலான "Gen Z" நல்ல வைப் மெட்டீரியலாக இருக்கும். அகில் ஜார்ஜின் கேமரா ஒர்க் கூர்க்கை கண்களுக்கு விருந்தாக காட்டியுள்ளது. சாமன் சாக்கோவின் எடிட்டிங் கச்சிதம்.
க்ளாப்ஸ்
- காமெடி காட்சிகள்
- பின்னணி இசை
- நேர்த்தியான திரைக்கதை
- நடிப்பு
பல்ப்ஸ்
- முதல் பாதியில் விரைவாக கதையை ஆரம்பித்திருக்கலாம்