கேப்டன் மில்லர் திரைவிமர்சனம்
அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தனுஷின் மாறுபட்ட தோற்றம் இப்படத்தின் முதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அதே போல் அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணி எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். அதை தொடர்ந்து வெளிவந்த கேப்டன் மில்லர் டிரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை உச்சத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
இப்படி படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். அதை இன்று வெளிவந்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை இது. இதில் ஆங்கிலேயனின் பட்டாளத்தில் [ராணுவம்] சேர வேண்டும் என ஆசைப்படுகிறார் கதாநாயகன் தனுஷ்[ஈசன்]. ஆனால், ஆங்கிலேயனை எதிர்த்து தனுஷின் அண்ணன் சிவராஜ்குமார் போராடி கொண்டிருக்கிறார்.
ஒரு பக்கம் வெள்ளைக்காரர்கள் கொடுமை, மறுபக்கம் ராஜ குடும்பத்தினர்கள் தன்னையும் தன் மக்களையும் தீண்டாமையில் நடத்தும் விதம் என வேதனையில் வாடும் தனுஷ், ஆங்கிலேயனின் பட்டாளத்தில் சேருகிறார். அதன்பின் அங்கு துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்கள் கற்றுக் கொண்டு, ஒரு சிறந்த சிப்பாயாக தேர்ச்சி பெறுகிறார்.
தேர்ச்சி பெற்ற சிப்பாய்களை வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்திய மக்களை கொள்ள தனுஷுக்கு உத்தரவு வருகிறது. முதலில் அதிர்ச்சியில் குறைந்துபோகும் தனுஷ், பின் கண்களை மூடிக்கொண்டு சூட துவங்குகிறார்.
தனது மக்களை கொன்று விட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கும் தனுஷ், இனி இதை செய்ய கூடாது என முடிவு செய்கிறார். இதற்கு காரணமாக இருந்த, தனக்கு உத்தரவு கொடுத்த ஆங்கிலேய தலைமை வீரரை கொன்று, வெள்ளைக்காரர்கள் பகையை சம்பாதிக்கிறார் தனுஷ்.
இதன்பின், அவர் ஆங்கிலேயர்களால் தேடப்படும், மில்லர், கேப்டன் மில்லராக மாறுகிறார். அதன்பின் என்ன நடந்தது கேப்டன் மில்லராக தனுஷ் என்னென்ன இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டார், தனது மக்களுக்காக என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம் கண்டிப்பாக ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அதே போல் தான் இப்படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இடைவேளை சண்டை காட்சி. ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் என முரட்டு சம்பவம் தான் கேப்டன் மில்லர். அதை சரியாக எடுத்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
தீண்டாமை குறித்து பேசிய விஷயமும். எந்த சாமியும் கீழ் சாதி, மேல் சாதி பார்ப்பதில்லை என கூறி தனுஷ் பேசிய வசனமும் சூப்பர். இன்றும் தமிழகத்தில் சாதி பார்த்து பழகுபவர்களுக்கு சரியான செருப்படியாகும் அது இருந்தது. மேலும் கதையை 5 அத்தியாயமாக பிரித்து கூறிய விதம் அழகாக இருந்தது.
அதே போல் தனுஷை மூன்று வேடங்களில் காட்டிய விதமும் ரசிக்க வைத்தது. ஆங்காங்கே சில தொய்வுகள் திரைக்கதையில் இருந்தாலும் கூட அதை ஜி. வி. பிரகாஷின் இசை சரி செய்துவிடுகிறது.
படத்தின் முதல் கதாநாயகன் தனுஷ் என்றால், இரண்டாவது கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் என்று தான் சொல்ல வேண்டும். தனது வெறித்தனமான பின்னணி இசையின் மூலம் தியேட்டர் சீட்டில் அமர்ந்து இருக்கும் ரசிகனை கூட எழுந்து படத்தில் வரும் வில்லனை அடிக்க வைத்துவிடுவார் போல. அந்த அளவிற்கு கேப்டன் மில்லர் படத்திற்காக இசையமைத்துள்ளார்.
மேலும் படத்தின் முக்கிய விஷயம் என்றால் அது கலை இயக்கம் தான். எங்கேயுமே ஒரு குறையும் இல்லாமல் அழகாக கலை இயக்கத்தை செய்துள்ளார் கலை இயக்குனர் ராமலிங்கம். அதற்கு தனி பாராட்டுக்கள்.
தனுஷ் வழக்கம் போல் நடிப்பில் பட்டையை கிளப்பி விட்டார். அதே போல் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் திரையரங்கை தெறிக்க விட்டார்.
அதே போல் நிவேதிதா சதீஷ், பிரியங்கா மோகன், இளங்கோ குமரவேல், மற்றும் வில்லனாக வந்த Edward Sonnenblick நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை. மற்ற அனைத்து நடிகர்களும் திரைக்கதையோடு ஒன்றிப்போகிறார்கள்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. சண்டை காட்சிகளை அருமையாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி. ஹாலிவுட் தரத்தில் இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதே போல் எடிட்டிங் வேற லெவல்.
பிளஸ் பாயிண்ட்
அருண் மாதேஸ்வரன் இயக்கம்
கலை இயக்கம், ஒளிப்பதிவு
சண்டை காட்சிகள்
தனுஷ் நடிப்பு
இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஸ், பிரியங்கா மோகன் நடிப்பு
சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் கேமியோ
மைனஸ் பாயிண்ட்
படம் முழுக்க ஆக்ஷன் காட்சியில் ரத்தம் தெறிக்க தெறிக்க இருப்பதால், இப்படம் எந்த அளவிற்கு குடும்ப ரசிகர்களை கவரும் என்று தெரியவில்லை.