Caught Stealing திரைவிமர்சனம்
ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள Caught Stealing என்ற திரில்லர், காமெடி படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
கதைக்களம்
1998யில் ஹான்ங் என்ற பேஸ்பால் வீரர், தனது நண்பனின் மரணத்தால் லட்சியத்தை இழக்கிறார். அதன் விரக்தியில் மதுவுக்கு அடிமையாகும் அவர், பார்டென்டராக வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பக்கத்து வீட்டுக்கார நண்பரான ரஸ், தனது அப்பாவைப் பார்க்க லண்டன் செல்வதாக ஹான்ங்கிடம் கூறுகிறார். மேலும் தனது வீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சாவியை கொடுக்கும் ரஸ், தன்னுடைய பூனை பட்-ஐ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஹன்ங்கிடம் ஒப்படைக்கிறார்.
அதன் பின்னர் தனது காதலியுடன் ரொமான்ஸில் ஈடுபடுவது என ரஸ்ஸின் வீட்டை ஹன்ங் பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இரண்டு நபர்கள் ரஸ்ஸை தேடி வந்து ஹன்ங் மோசமாக தாக்கிவிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து அவர் போலீசிடம் புகார்கொடுக்க, வேறொரு கும்பல் ஹன்ங்கை தேடிவந்து தாக்குகிறது. அவர்களிடம் ஹன்ங் எப்படி தப்பித்தார்? தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தாரா என்பதே பரபரப்பான மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களுக்கு பெயர்போன டெர்ரென் அரோனோப்ஸ்கி டார்க் காமெடி திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் கணிக்க முடியாதபடி உள்ளன.
ஹீரோ அடி வாங்கும் காட்சிகளில் எல்லாம் "அந்த பையன் பாவம்பா" என்று ஆடியன்ஸே கூறும் அளவிற்கு பரிதாபமாக உள்ளது. ஸோய் கிராவிட்ஸின் ரொமான்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்தபோதிலும், அவருக்கு ஏற்படும் நிகழ்வு கேட்வுமன் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தலாம்.
ஹென்றி ஹன்ங் தாம்ப்சன் என்ற கதாபாத்திரத்தில் ஆஸ்டின் பட்லர் மிரட்டியிருக்கிறார். இவர் எப்போதான்பா திருப்பி அடிப்பாரு என்று நாமே கேட்கும்போது ஆஸ்டின் எதிராளியை பன்ச் செய்வது கூஸ்பம்ப் மொமெண்ட்.
ரஸ்ஸாக மேட் ஸ்மித்தும், ரஷ்யன் கேங்கில் ஒருவராக நம்ம எக்ஸ்மென் வில்லன் லியேவ் ஸ்ரூபெரும் அட்டகாசம் செய்துள்ளனர். இவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு போலீஸ் ஆபிஸராக வரும் ரெஜினா கிங்கின் நடிப்பு உள்ளது.
ஆஸ்டின் உடன் இன்வெஸ்டிகேட் செய்யும்போது அவர் டயலாக் பேசும் விதம் மிக இயல்பாக இருக்கும். டார்க் காமெடி திரில்லர் என்பதால் பல இடங்களில் இயக்குநர் சினிமா லிபர்டி எடுத்திருக்கிறார்.
ஆனாலும் அது ஒரு குறையாக தோன்றவில்லை. திரைக்கதையின் வேகத்திற்கு காமெடி தடையாக இல்லாதது நல்ல ரைட்டிங். பின்னணி இசை பரபரப்பை கூட்டுகிறது.
க்ளாப்ஸ்
சிம்பிளான கதை
பரபரப்பான திரைக்கதை
நடிகர்களின் பங்களிப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
ஒரு சில லாஜிக் மீறல்கள்