CHALLENGERS: திரை விமர்சனம்
ஹாலிவுட்டின் கனவுக்கன்னி ஸென்டயாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், டென்னிஸ் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகியுள்ள 'சேலஞ்சர்ஸ்' திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்.
கதைக்களம்
2019ஆம் ஆண்டில் சேலஞ்சர்ஸ் எனும் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் படம் தொடங்குகிறது. ஆர்ட் டொனல்ட்ஸன் (மைக் ஃபைஸ்ட்), பேட்ரிக் ஸ்வெய்க் (ஜோஷ் ஓ கானர்) ஆகிய இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதே படத்தின் முழுக்கதை.
டொனால்ட்ஸன், பேட்ரிக் இரண்டு நெருங்கி நண்பர்களும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் எதிர்முனையில் உள்ளனர். அவர்களில் கதாநாயகி டஷி டன்கனின் (ஸென்டயா) ஆதரவு யாருக்கு என்பது ஒருபுறம், கதாநாயகர்களின் பிளேஷ்பேக் என்ன என்பது மறுபுறம் என Non-Linear திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.
முக்கோணக்காதல் கதைப் போல படத்தின் திரைக்கதை விரிய, அதற்குள் இருக்கும் சிக்கல்கள் குறித்து படம் பேசுகிறது. இறுதியில் வெற்றியாளர் யார் என்பதே கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ்.
படம் பற்றிய அலசல்
டென்னிஸ் வீராங்கனையான டஷியை ஒரு போட்டியில் சந்திக்கும் நண்பர்களான பேட்ரிக், டொனால்ட்சன் இருவரும் அவரை இம்ப்ரெஸ் செய்ய முயலும் காட்சியில் அலப்பறை ஆரம்பமாகிறது.
டீனேஜ் குறும்புத்தனத்துடன் மூவரும் அறையில் பேசிக்கொள்ளும் மற்றும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி இறுதியில் காமெடியாக முடிவது திரையரங்கில் சிரிப்பலை.
டென்னிஸ் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை, மனிதர்களின் மனச்சிக்கல்களுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மிரட்டல்.
ஒவ்வொரு போட்டியை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். வீரர்கள் அடிக்கும் பந்து நம்மை தாக்க வருவதுபோல் 3D எஃப்பெக்ட் உடன் 2Dயிலேயே மிரட்டியிருக்கிறார்கள்.
தொய்வில்லாத திரைக்கதையுடன் ஒன்ற வைக்க ட்ரெண்ட், அட்டிகஸ் இசை உதவியுள்ளது. என்னதான் non-linear திரைக்கதையை சிறப்பாக கையாண்டிருந்தாலும், அனைத்து தரப்பு பார்வையாளர்களாலும் படத்துடன் ஒன்ற முடியுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
Call Me by Your Name எனும் ஆஸ்கர் விருது வென்ற படத்தை இயக்கிய Luca Guadagnino தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். படத்தில் வரும் மூன்று கதாபாத்திரங்களும் (ஹீரோ, ஹீரோயின்) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
adult காட்சிகள், வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதுடன் 18+ படம் என்பதால் இது குழந்தைகளுக்கான படம் அல்ல. வயது வந்தோர் வாய்விட்டு சிரித்து, முழு டென்னிஸ் போட்டியை சுவாரஸ்சியமாக கண்டுகளிக்க கட்டாயம் இப்படத்தை பார்க்கலாம்.
க்ளாப்ஸ்
நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு
டென்னிஸை காட்சிப்படுத்திய விதம்
திரைக்கதை மற்றும் இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை