சாம்பியன் (தெலுங்கு): திரை விமர்சனம்
ரோஷன் மேகா, அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள சாம்பியன் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
1948ஆம் ஆண்டில் இந்தியாவின் விடுதலைக்கு பிறகு ஹைதராபாத் சமஸ்தானம் ஒரு வருடமாக நிஸாமின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ரஸாக்கர்களின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் பைரன்பள்ளி கிராமம் உள்ளது.
இந்த சூழலில் செகந்திராபாத்தின் கால்பந்து வீரரான மைக்கேல் வில்லியம்ஸ் (ரோஷன் மேக்கா) இங்கிலாந்து கால்பந்து அணியான மான்செஸ்டரில் விளையாட முயற்சித்து வருகிறார். ஹைதராபாத் உடனான கால்பந்து போட்டியில் அவரது அணி வெற்றி பெறுகிறது.

ஆனால், போட்டியின்போது போலீஸ் அதிகாரியான பாபு தேஷ்முக்குடன்(சந்தோஷ் பிரதாப்) மைக்கேலுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், மான்செஸ்டரின் மானேஜர் மைக்கேலை தமது அணியில் விளையாட அழைக்கிறார். ஆனால், அவரது அப்பா குறித்து அறிந்த பின் பிரிட்ஷ் இராணுவத்திற்கு துரோகம் செய்தவரின் மகன் என்பதால் முறையாக இங்கிலாந்திற்குள் நுழைய முடியாது என்று கூறி விடுகிறார்.
எனினும், எப்படியாவது இங்கிலாந்திற்கு வந்துவிட்டால் அணியில் விளையாட வைப்பதாகவும் வாக்குறுதி கொடுக்கிறார். அதன் பின்னர் துப்பாக்கிகளை போலீசுக்கு தெரியாமல் ஓர் இடத்தில் கொண்டு சேர்த்தால், அடுத்த 15 நாட்களுக்குள் விமானம் மூலமாக இங்கிலாந்திற்கு அழைத்து செல்வதாக பிரிட்டிஷ் நபர் ஒருவர் கூற, மைக்கேல் அந்த சவாலை ஏற்கிறார்.

துப்பாக்கிகளை கொண்டு செல்லும் வழியில் சந்தோஷ் குறுக்கிட, அவரைத் தாக்கிவிட்டு பைரன்பள்ளி கிராமத்திற்குள் சென்றுவிடுகிறார் மைக்கேல். அதன் பின்னர் அவரது மான்செஸ்டர் கனவு நிறைவேறியதா? பைரன்பள்ளி கிராமத்தினர் தங்கள் போராட்டத்தில் வென்றார்களா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ஹைதராபாத் நாட்டுடன் இணைய மறுத்த உண்மை சம்பவங்களை வைத்து அறிமுக இயக்குநர் பிரதீப் அட்வைதம் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே இது ஒரு பிரம்மாண்ட படமாக இருக்கப்போகிறது என்பதை மதியின் கேமராவும், தோட்டா தரணியின் கலை அமைப்பும் காட்டுகிறது.
பரபரப்பாக ஆரம்பிக்கும் முதல் பாதி தொய்வில்லாமல் நகர்ந்து இடைவேளையை அடைகிறது. இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் தொய்வாக இருந்தாலும் நேர்த்தியான காட்சியமைப்பினால் படத்துடன் நம்மால் ஒன்ற முடிகிறது.
சண்டைக்கு தயாராகும் கிராம மக்கள்; தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறும் ஹீரோ எப்படி அவர்களுடன் இணைந்து சண்டையிட்டார் என்ற கதையை சுவாரஸ்யமாக கையாண்டுள்ளார் இயக்குநர். மைக்கேல் வில்லியம்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் (தெலுங்கு) மகனான ரோஷன் மேக்கா அட்டகாசம் செய்துள்ளார்.

கால்பந்து வீரராக அப்படியே பொருந்திப் போகும் ரோஷன், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் அவந்திகாவுடன் நடனத்திலும் மிரட்டுகிறார். உணர்ச்சி பொங்க பேசும் இடங்களில் மட்டும் இன்னும் முதிர்ச்சி தேவை என தோன்ற வைக்கிறது. என்றாலும், இவ்வளவு பெரிய படத்தை தாங்கியிருக்கிறார்.
தெலுங்கில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அனஸ்வரா சிறப்பாக நடித்துள்ளார். கிர்ர கிர்ர பாடல் உட்பட எல்லா ஃப்ரேமிலும் அழகாக தெரிகிறார். பாபு தேஷ்முக்காக வரும் சந்தோஷ் பிரதாப் நெகட்டிங் ரோலில் பயத்தை காட்டுகிறார். ஜோக்கர் போல் பாதி எரிந்த முகத்துடன் கிளைமேக்ஸில் வெறித்தனம் காட்டியுள்ளார். படத்தில் இன்னொரு ஹீரோ என்று பீட்டர் ஹெய்னை கூறலாம்.
அவரது சண்டைக் காட்சி அமைப்புகள் பிரமிப்பூட்டுகின்றன. குறிப்பாக, கிளைமேக்சிற்கு முன்பு வரும் குதிரைகளுடன் கால்பந்து விளையாடும் சண்டைக்காட்சியமைப்பு மிரட்டல். மிக்கி ஜே.மேயரின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது.

கே கே மேனன், முரளி ஷர்மா, நரேஷ், வெண்ணிலா கிஷோர், கோவை சரளா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சர்ப்ரைசாக ஒரு பிரபல நடிகர் ஒரு காட்சியில் மட்டும் வந்து ஸ்கோர் செய்துவிட்டு செல்கிறார். அந்த ரோலுக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்பதுபோல் அந்த காட்சியும், வசனங்களும் உள்ளன.
க்ளாப்ஸ்
ரோஷன் மேக்கா உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு
திரைக்கதை
பிரம்மாண்ட மேக்கிங்
பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த சாம்பியன் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் வென்றுவிட்டான். பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை பார்க்க விரும்புவார்கள் கண்டிப்பாக ரசிக்கலாம் இந்த சாம்பியனை.
