சந்திரமுகி-2 திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் சந்திரமுகி. பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி ஓடிய சந்திரமுகி உலகம் முழுவதும் அப்போதே 90 கோடி வசூலை தாண்டி பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, இத்தனை சிறப்பம்சம் கொண்ட பர்ணிச்சர் மீது கை வைப்பது என்பது என்ன சாதரணமா, அதனால் என்னமோ ரஜினியே பயந்து பின் வாங்க, அவருடைய ரசிகன் லாரன்ஸை வைத்து பி.வாசு எடுத்த ரிஸ்க் பயன் கொடுத்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
பல வருடங்களாக மூடியிருக்கும் சந்திரமுகி அரண்மனையை வடிவேலு பெயரில் பிரபு எழுதிக்கொடுத்துவிட்டார், இந்த நேரத்தில் ராதிகாவின் குலதெய்வம் இதே ஊரில் இருக்க, அவர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடக்கின்றது.
அந்த நேரத்தில் ஒரு குருநாதர் கண்டிப்பாக அந்த குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று சொல்ல ராதிகா தன் குடும்பத்துடன் சந்திரமுகி ஊருக்கு செல்கின்றனர்.
சென்ற இடத்தில் தங்க சந்திரமுகி அரண்மனையையே வாடகைக்கு எடுக்க, பிறகு என்ன சந்திரமுகி முதல் பாகத்தில் என்ன நடந்ததோ, அதையே லாரன்ஸ், கங்கனா தோற்றத்தில் பார்க்க வேண்டியது தான்.
படத்தை பற்றிய அலசல்
சந்திரமுகி இரண்டாம் பாகம் என்பதை எதோ பெயருக்கு என்றில்லாமல் ப்ராப்பர் சீகுவலாக இதை கொண்டு வந்ததற்கு பி.வாசுவை பாராட்டலாம், பேய் கதை என்றாலே லாரன்ஸுக்கு டான்ஸை விட நன்றாக வரும்.
அவரும் இருப்பது கூடுதல் பலம், வடிவேலுவும் தன் பங்கிற்கு சிரிப்புக்காட்ட முயற்சிறார், ஒரு காலத்தில் வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு வரும் என்ற காலம் போய், அவர் பெர்ப்பாமன்ஸ் செய்தும் சிரிக்க முடியாமல் இருப்பதை பார்க்க கஷ்டமாக உள்ளது.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகவே செல்கிறது, அதிலும் சந்திரமுகி யாருக்குள் இருக்கிறார், என்று ஸ்ருஸ்டி, லக்ஷ்மி மேனன், மஹிமா, ராதிகா என சோதிக்கும் இடம் நம்மை திரையுடன் ஒன்ற வைக்கின்றது.
ஆனால், அதன் பின் சந்திரமுகி, வேட்டையன் ப்ளாஷ்பேக் நன்றாகவே இருந்தாலும், எதோ மிஸ் ஆன பீல் தான், அதிலும் கங்கனா மிகவும் அந்நிய முகமாக தெரிகிறார் தமிழ் ஆடியன்ஸிற்கு.
ஏனெனில் ஜோதிகா உருவாக்கிய சகாப்தம் சந்திரமுகி, கங்கனா சிறந்த நடிகை என்றாலும், அந்த அளவிற்கு ஒட்ட வில்லை, வித்யாசகரின் இசை முதல் பாகத்தை தாங்கி நிற்கும், இதில் ஆஸ்கர் நாயகன் மரகதமணி இசையமைத்தும் எந்த பலனும் இல்லை, ரா ரா அவருடைய வெர்ஷன் ரசிக்கும்படி இருந்தது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி குறிப்பாக இடைவேளை.
பல்ப்ஸ்
எந்த காட்சி எடுத்தாலும், இதை தான் சந்திரமுகியிலேயே பார்த்துவிட்டோமே, என்று கிளைமேக்ஸ் வரை கேட்க வைக்கும் காட்சி அமைப்புக்கள்.
மொத்தத்தில் சந்திரமுகி-2 முதல் பாகத்தில் வந்த ஒரே ஒரு வசனம் இதில் மிஸ்ஸிங்....என்ன கொடுமை சார் இது