Chhaava (சாவா) திரை விமர்சனம்
விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள 'சாவா' இந்தி திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜி 1680யில் அரியணை ஏறுகிறார். அவரது மாற்றாந்தாய் சோயராபாய் தனது மகன் ராஜராமை மன்னராக்க முயற்சிக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, முகலாய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என சம்பாஜி புறப்பட்டு, ஒளரங்கசீப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஒன்றை சூறையாடுகிறார். இது ஒளரங்கசீப்பிற்கு மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது.
சம்பாவை வீழ்த்தி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும்போதுதான் கிரீடத்தை அணிவேன் என அவர் சபதம் எடுக்கிறார். அவரது பெரும் படைகள் மராத்தியர்களை நோக்கி புறப்பட்டு பல ஊர்களை சூறையாடுகிறது.
இதனை அறிந்த சம்பாஜி வெகுண்டெழுந்து ஒளரங்கசீப் சாம்ராஜ்யத்தை சாம்பலாக்குவோம் என முழுக்கமிட்டு கிளம்புகிறார். சம்பாஜியும், ஒளரங்கசீப்பும் எந்த சூழலில் சந்தித்தார்கள்? அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஷிவாஜி சாவந்த் எழுதிய "சாவா" என்ற மராத்தி நாவலை அடிப்படையாகக் கொண்டு லக்ஷ்மண் உடேக்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். சாவா என்றால் சிங்கக் குருளை என்று அர்த்தம். சம்பாஜி மன்னராக நடித்திருக்கும் விக்கி கௌஷல் இப்படத்தை தனது தோளில் தாங்கியுள்ளார்.
ஆக்ரோஷமான வசனங்கள், சண்டைக்காட்சிகள், துரோகத்தைக் கண்டு உடைவது என நடிப்பில் அதகளம் செய்துள்ளார். ஒளரங்கசீப்பாக வரும் அக்ஷய் கண்ணா தனது பார்வையாலேயே நம்மை மிரட்டுகிறார். வசனங்களை விட தனது உடல்மொழியால் ஒளரங்கசீப் மன்னரையே நம் கண்முன் நிறுத்துகிறார்.
சம்பாஜியின் மனைவி யசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஷ்மிகா மந்தனா மிகைப்படுத்தாத நடிப்பை தந்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சியில் சம்பாஜி தனியாளாக போரில் பலரை வீழ்த்துகிறார். உண்மையில் அவர் அப்படித்தான் இருந்தாரா என்று தெரியவில்லை.
ஒளரங்கசீப் படையிடம் அவர் சிக்கிய பின் சங்கிலியில் கட்டிவைத்து ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்கிறார்கள். அந்த காட்சி கண்டிப்பாக மனதை உலுக்கும். படத்தில் பெரும்பாலும் போர் சண்டைக்காட்சிகள்தான். ஆனாலும் அவைதான் படத்திற்கு பலமே. ஸ்டண்ட் இயக்குநர் பர்வேஸ் ஷைக் அந்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பல இடங்களில் கூஸ்பம் மொமெண்ட்டை தருகிறது. பாடல்களிலும் சிறப்பான இசையை தந்திருக்கிறார். அவரது இசை படத்திற்கு இன்னொரு தூண் என்றே கூறலாம். சத்ரபதி சிவாஜியின் வரலாறை தெரிந்த அளவிற்கு அவரது மகன் சம்பாஜியைப் பற்றி பெரிதளவில் எங்கு பேசப்படவில்லை.
அதனால்தான் இப்படத்தை எடுத்திருப்பதாக கூறியிருந்தார் இயக்குநர் லக்ஷ்மண். ஆனால், இப்படத்தை எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக அவர் எடுத்துள்ளார் என்ற கேள்வி எழாமல் இல்லை.
பல காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. அதேபோல் மேக்கிங்கில் பல இடங்களில் கிராஃபிக்ஸ் பிசுறு தட்டுகிறது. அரண்மனையில் நடக்கும் விவாத காட்சிகள் சீரியல் பார்பதுபோன்ற உணர்வை தருகிறது.
க்ளாப்ஸ் விக்கி கௌஷலின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, சண்டைக் காட்சிகள் பல்ப்ஸ் மேக்கிங்கில் சில குறைபாடுகள், நம்ப முடியதாக சில காட்சிகள் மொத்தத்தில் வரலாறு, போர் தொடர்பான படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு "சாவா" நல்ல சாய்ஸாக இருக்கும்.
க்ளாப்ஸ்
- விக்கி கௌஷலின் நடிப்பு
- ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
- சண்டைக் காட்சிகள்
பல்ப்ஸ்
- மேக்கிங்கில் சில குறைபாடுகள்
- நம்ப முடியதாக சில காட்சிகள்