கவுண்டமணி முதல் யோகி பாபு வரை.. கோலிவுட்டின் காமெடி ஜாம்பவான்கள்!
கவுண்டமணி முதல் யோகி பாபு வரை தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடியன்கள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு.
கவுண்டமணி
60களில் நடிக்க தொடங்கி சின்ன சின்ன ரோலாக நடித்து அதன் பின் தனது நக்கல் நையாண்டியால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி காமெடி ஜாம்பவானாக வளர்ந்தவர் கவுண்டமணி. அவர் நடிக்கும் படங்களில் நிச்சயம் காமெடிக்கு என்று தனி ட்ராக் இருக்கும். காமெடி ட்ராக் எழுதவே அதிகம் மெனக்கெடுவார்கள். அதுவும் கவுண்டமணி - செந்தில் கூட்டணி சேர்ந்துவிட்டால்.. சொல்லவே வேண்டாம்.
கவுண்டமணியின் நக்கல் டயலாக்குகள் தற்போதும் ஃபேமஸ் ஆகவே இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள், youtubeஐ திறந்தால் அதில் கவுண்டமணியின் கவுண்டர்கள் இல்லாமல் இருக்காது.
செந்தில்
செந்தில் என பெயர் சொன்னாலே அவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த படங்கள் தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.
'இதுல எப்படின்னே லைட் எரியும்',
'அவ்வா அவ்வா அவ்வவ்வா..',
'சாரி மை சன்.. விதி விளையாடிடுச்சு',
'நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்'.. இப்படி செந்தில் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த படங்களில் பேசும் வசனங்களும் பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன.
அதுவும் எல்லா படங்களில்கும் செந்திலை தூக்கி போட்டு கவுண்டமணி மிதிக்கும் காட்சிகள் எல்லாமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து இருக்கும். செந்தில் - கவுண்டமணிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இப்படி எந்த ஜோடியும் அமையவில்லை என்பது பெரிய குறை தான்.
வடிவேலு
கவுண்டமணி தனது நக்கலான வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்தார் என்றால், வடிவேலு தனது உடல்மொழி, வசனங்கள் மற்றும் காமெடியான கெட்டப்புகளை கொண்டு அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர்.
அப்படி ரசிகர்களை கவர்ந்த ரோல்களில் சில.. நாய் சேகர், சூனா பானா, கைப்புள்ள, வண்டு முருகன், ஸ்நேக் பாபு, நேசமணி, பாடி சோடா, அலார்ட் ஆறுமுகம், வெடிகுண்டு முருககேசன், டெலக்ஸ் பாண்டியன், சலூன்கடை சண்முகம்.. போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்கிட்டு இருக்கு.. இப்படி தான் எந்த situation எடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல வடிவேலுவின் காமெடியான வசனம் ஒன்று இருக்கும்.
தற்போது இணையத்தில் உலா வரும் மீம்களில் 90 சதவீதத்திற்கும் மேல் வடிவேலுவின் வசனங்களை வைத்து தான். வடிவேலு இல்லை என்றால் மீம் கிரியேட்டர்கள் தான் அல்லாடி இருப்பார்கள்.
வடிவேலு ஒல்லிக்குச்சு உடம்புடன் ஆரம்பத்தில் நடிக்க வந்தவர். அவரது ஆரம்பகால படங்களில் கவுண்டமணி போன்ற பெரிய நடிகர்களுக்கு சைடு ரோலில் தான் அதிகம் நடித்திருப்பார். ஆனால் படிப்படியாக வளர்ந்து தற்போது யாருமே தொட முடியாத இடத்தில் இருக்கிறார் அவர்.
நடிப்பில் இருந்து கடந்த சில வருடங்களாக இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது ரீஎன்ட்ரிக்காக தயாராகி வருகிறார். அவரது நாய்ஸ் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தற்போது ஷூட்டிங்கில் இருக்கிறது.
நாகேஷ்
ஒல்லியான உருவம், சிரிக்கவைக்கும் பேச்சு என தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தவர் நாகேஷ். அவர் முதலில் நடித்தது ஒரு நாடகம் தான். அவர் வயிற்றுவலி நோயாளியாக நாடகத்தில் நடித்தது நல்ல வரவேற்பை பெற்று அவர் எம்ஜிஆர் கையால் விருது வாங்கி இருக்கிறார்.
அதன் பிறகு தான் படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் நாகேஷ். அவரது பல கதாபாத்திரங்கள் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களாகவும் இருந்திருக்கின்றன.
நாகேஷ் உடலில் இருக்கும் நடிப்புக்கான டிஎன்ஏ தான் என் உடலிலும் இருக்கும் என கமல்ஹாசனே நாகேஷ் நடிப்பை பற்றி பேட்டியில் பேசி இருக்கிறார். நாகேஷ் மறைந்தாலும் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களை தற்போதும் கவரும் ஒன்றாக தான் இருந்து வருகிறது.
ஜனகராஜ்
80கள் தொடங்கி 90களின் பிற்பகுதி வரை பிஸியான காமெடியனாக இருந்தவர் ஜனகராஜ். ரஜினி கமல் இளம் ஹீரோவாக வலம் வந்த காலத்தில் அவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பிரபு, முரளி, பாண்டியராஜன் என பல நடிகர்களுடன் காமெடியாக நடித்திருக்கிறார் அவர்.
'என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா..'
'தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சு பா..'
'முழுசா பாத்துட்டியா..'
'நாசமா நீ போனியா தெரு'
இப்படி ஜனகராஜ் வசனம் உச்சரிக்கும் விதமே அந்த காட்சியை காமெடியாக மாற்றிவிடும். தற்போது ஜனகராஜ் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
மனோரமா
'ஆச்சி' மனோரமா என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆச்சி மசாலா மனோரமாவுக்கு சொந்த கம்பெனி தான் என்று கூட நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆச்சி என்ற பெயர் மனோரமாவால் பிரபலம்.
காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அவர். உடல்நலக்குறைவால் 2015ல் மனோரமா காலமானார். அவர் மறைந்தாலும் அவரது படங்கள் தமிழ் சினிமா உள்ளவரை பேசப்படும் ஒன்றாகவே இருக்கும்.
விவேக்
சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட விவேக், தனது நடிப்பில் காமெடியோடு சேர்ந்து சமூக கருத்துகளையும் பேசியவர். ஜாதி, மதம், மூட நம்பிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி அவர் பேசி இருப்பார்.
"அடப்பாவி.. 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டி, ஒரு எலும்மிச்சம் பழத்தால் ஓட போகுதா"
"போகிக்கு கொளுத்துவதை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால் போட்டுக்கொள்வார்களே" - இப்படி விவேக் கருத்துடன் பேசிய வசனங்கள் ஏராளம்.
விவேக் நடிப்பது மட்டுமின்றி சுற்றுசூழலை பாதுகாக்க மரம் நடும் இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதும் செடிகள் நட்டு வந்தார்.
59 வயதில் வடிவேலு கடந்த வருடம் ஏப்ரலில் மாரடைப்பால் காலம் ஆனார். அவரது 1 கோடி மரங்கள் நடும் கனவை தற்போது அவரது ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் அல்டிமேட்டில் முதலிடம் இவரா! தலைகீழ் மாற்றம்
சந்தானம்
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் மற்ற படங்களை ஸ்பூப் செய்து பாப்புலர் ஆனவர் சந்தானம். மற்றவர்களை கிண்டல் செய்யும் வகையில் வசனங்கள் பேசி அதையே தனது பாணியாக கொண்டு வந்தவர் சந்தானம்.
ஒருகட்டத்திற்கு பிறகு காமெடியனாக நடிப்பதை நிறுத்திய அவர் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
கோவை சரளா
காமெடியனாக பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பெண்களும் இதில் சாதிக்க முடியும் என காட்டியதில் மனோரமாவுக்கு அடுத்து கோவை சரளா தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து இருக்கிறார்.
யோகி பாபு
சந்தானம் ஹீரோவாக நடிக்க கிளம்பிவிட்ட பிறகு முன்னணி காமெடியன் இடத்தை கைப்பற்றியவர் யோகி பாபு. அவரது உருவம், முடி, முகமே அவரை காமெடியனாக மாற்றியது.
தற்போது அவர் இல்லாத படங்களை பார்ப்பதே அரிதான ஒன்று தான். அந்த அளவுக்கு அவர் எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கதையின் நாயகனாக யோகி பாபு பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சில தமிழ் சினிமா காமெடியன்கள் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம்