நீங்க காமெடி ரசிப்பவரா.... அப்போ இந்த படங்களை எல்லாம் பார்த்தீர்களா?
காமெடி இதற்கு ஈடுஇணை எந்த ஒரு கதைக்களமும் கிடையாது. அதிலும் இப்போது உள்ள சூழலில் காமெடி தான் மக்களின் மன அழுத்தத்தை கொஞ்சம் குறைக்கின்றன. 80களில் ஆரம்பித்து 90 இப்போது 20வது காலகட்டம் வரை எத்தனையோ காமெடி படங்கள் வந்துவிட்டன. அதில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இப்போது பார்த்தாலும் சிரிப்பு வர வைக்கும் சிறந்த காமெடி படங்களை பற்றிய ஒரு தொகுப்பை காணலாம்.
காதலிக்க நேரமில்லை (1964)
இப்பட பெயர் படித்ததும் புதிய காதலிக்க நேரமில்லை படமோ சீரியலோ நியாபகம் வரும். ஆனால் இப்படம் 1964ல் முத்துராமன், நாகேஷ், ரவிச்சந்திரன், டிஎஸ். பாலைய்யா, காஞ்சனா, சச்சு என பெரிய நடிகர்கள் பட்டாளம் நடிக்க உருவாகிய காமெடி படம். அசோக் என்ற நாயகன் தான் பணிபுரியும் முதலாளியின் மகளை காதலிக்கிறார்.
அவரது அப்பா விஸ்வநாதனை சம்மதம் தெரிவிக்க தனது நண்பனை அப்பாவாக நடிக்க வைத்து திருமணத்திற்கு நாயகன் சம்மதம் வாங்குவதை மிகவும் காமெடியாக கூறப்பட்டிருக்கும். நல்ல கதையுள்ள அதேசமயம் காமெடியான ஒரு படம்.

உள்ளத்தை அள்ளித்தா (1996)
சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடி தான். அப்படி அவர் இயக்க சஞ்சய் பாரதி எழுதிய கதை தான் உள்ளத்தை அள்ளித்தா. அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியே செல்லும் நாயகன் போன இடத்தில் தனக்கு பிடித்தவளை பார்க்கிறார்.
அவரை திருமணம் செய்ய ஏகப்பட்ட கலாட்டாக்கள் உள்ளே நடக்கின்றன. அதிலும் படத்தில் கட்டையால் எல்லோரும் அடித்துக்கொள்ளும் ஒரு காமெடி காட்சி அசத்தல்.
கார்த்தி-ரம்பா முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தில் அழகிய லைலா பாடல் எப்போதும் அமோகமாக ஓடும்.

மைக்கேல் மதன காமராஜன் (1991)
படமா இது இல்லை கேட்கிறேன் படமா இது, பொக்கிஷம். காமெடிக்கு காமெடி, ரைமிங் வசனங்கள், ஏகப்பட்ட கலைஞர்கள், லூட்டிகள், காதல் என மொத்த படமே அட்டகாசமாக இருக்கும்.
4 கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் ஒருபக்கம் அசத்த கிரேஸி மோகன் வசனங்கள் ஒருபக்கம் படத்தில் பேசும்.
ஸ்ரீநிவாஸ ராவ் இயக்கிய இப்படம் தமிழ் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு படம்.

காதலா காதலா (1998)
தி தி தி திக்கு வாய் வைத்து காமெடியாக ஒடிய ஒரு படம். இரண்டு நாயகர்கள் தங்களது காதலியின் அப்பாக்களை சமாளிக்க பொய் மேல் பொய் கூறி கடைசியில் அவர்கள் ஒன்று சேறுகிறார்களா என்பது கதை. முருகா, திக்கு வாய், இதற்கு கூடவே கிரேஸி மோகனின் வசனம், நடிகர்களை தாண்டி வசனங்கள் நம்மை பேச வைக்கும்.
கமல்ஹாசன் எழுதிய இந்த கதைக்கு கிரேஸி மோகன் வசனங்கள் தான் உயிர் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

பஞ்ச தந்திரம் (2002)
இந்த படம் பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் எந்த தகுதியுமே இல்லை என்றே கூறலாம். ஏன் விமர்சனம் செய்ய வேண்டும், படத்தின் கதையும் கிரேஸி மோகனின் வசனங்களும் நாம் பார்த்து ரசிக்க போதாதா.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்திற்கு பெரிய ஹீரோவே கிரேஸி மோகன் அவர்களின் வசனங்கள் தான். முன்னாடி-பின்னாடி கார் சீன், பிணத்தை அகற்ற ஹோட்டலில் வரும் சீன்கள் என படம் முழுவதும் அட்ராசிட்டி தான்.

தெனாலி (2000)
கே.எஸ். ரவிக்குமார் இயக்க கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா மற்றும் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ள ஒரு படம். தெனாலி படத்தில் இலங்கை தமிழ் பாஷை பேசினாலும் அதிலும் கலக்கலான வசனங்கள் வைத்து ரசிக்க வைத்திருப்பார் கிரேஸி மோகன்.
அந்த பயம் என்பதை விளக்க கமல்ஹாசன் சொல்லும் அந்த நீளமான வசனத்தை பேசி பார்க்காத நபரே இல்லை என்று கூறலாம்.
மீண்டும் மீண்டும பார்த்தாலும் சலிக்காத ஒரு கதை.

பாட்டி சொல்லை தட்டாதே (1988)
ராஜசேகர் இயக்கத்தில் பாண்டியராஜன், மனோரமா, ஊர்வசி, எஸ்.எஸ். சந்திரன் நடிப்பில் உருவான ஒரு கலகலப்பான பாட்டி-தாத்தா பேரன் பட கதை. பாட்டி சொல்லை மீறி தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய அதனால் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
பின் அவர்களுடன் சேரலாம் என்று பார்த்தால் அப்போதும் ஒரு தவறு செய்துவிடுகிறார். ஒரு கலகலப்பான கதை தான், ஆனால் அப்போது இப்படம் சரியாக கவனிக்கப்படவில்லை.

இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006)
புலிகேசி பிறக்கும் போதே மற்றவர்கள் கஷ்டப்பட சிரிப்பவர். சிம்புதேவன் இயக்கிய இப்படத்தில் வடிவேலு தான் ஸ்கோர் செய்திருப்பார். புறாவுக்கு இவ்வளவு பெரிய போறா, கழிவறையில் இருக்கும் போது கன நேரத்தில் தோன்றிய சிந்தனை என சின்ன சின்ன வசனங்களாக இருந்தாலும் கதைக்கு ஏற்ப உட்கார்ந்திருக்கும்.
கதை சாதாரணம் என்றாலும் படத்தில் வடிவேலுவின் காமெடி அக்கப்போராக இருக்கும். காமெடிக்காகவே பார்க்கலாம்.

கலகலப்பு (2012)
விமல், சிவா, அஞ்சலி, ஓவியா என சின்ன சின்ன கலைஞர்களை வைத்து சந்தானத்தின் காமெடி நாயகனை படத்தில் வைத்து அசத்தலான ஒரு படத்தை இயக்கியிருப்பார் சுந்தர்.சி.
படம் முழுவதும் ஏதோ ரசிக்கும் வண்ணம் காமெடி இருந்தாலும் கிளைமேக்ஸ் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடும். அந்த அளவிற்கு ஒரு டைமன்ட் பைக்காக அனைவரும் மாற்றி மாற்றி காமெடி போராடி அதை கைப்பற்றி நினைப்பார்கள்.
நல்ல ஜாலியாக செல்ல கூடிய ஒரு கதைக்களம்.

தில்லு முல்லு (1981)
பாலசந்தர் இயக்கிய செம காமெடியான ஒரு படம். ஒரே ஒரு மீசை அதை வைத்து மொத்த கதையை வடிவமைத்திருப்பார்கள். 1979ம் ஆண்டு வெளியான கோல்மால் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இப்படம்.
