டாடா திரைவிமர்சனம்
கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் டாடா. இப்படத்தின் தலைப்பே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
இதை தொடர்ந்து வெளிவந்த ட்ரைலர் டாடா படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் எனும் நம்பிக்கையை கொடுத்தது. அத்தகைய நம்பிக்கையுடைய எதிர்பார்ப்பை டாடா முழுமையாக பூர்த்தி செய்தாரா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
கல்லூரி படித்துவரும் கவின் [மணிகண்டன்], அபர்ணா தாஸ் [சிந்து] இருவரும் காதலித்து வருகிறார்கள். காதலிக்கும் சமயத்தில் கர்ப்பமாகும் அபர்ணாவிடம் இந்த கருவை கலைத்துவிடலாம் என்று கவின் கூறுகிறார். ஆனால், அதை செய்யமாட்டேன் என்று கூறுகிறார் அபர்ணா.
இதனால் இரு வீட்டாரிடமும் எதிர்ப்பை சந்திக்கும் கவின் மற்றும் அபர்ணா தனியாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முதலில் தன்னுடைய நண்பனின் வீட்டில் வசிக்கும் கவின், அபர்ணா பின், வாடகைக்கு வீடு பார்த்து அதில் குடியேறுகிறார்கள்.
மகிழ்ச்சியுடன் இருவரும் வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது சில சண்டைகளும் ஏற்படுகிறது. அப்படி ஒருமுறை நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அபர்ணாவிடம் சண்டை போட்டு வேலைக்கு செல்கிறார் கவின். இந்த சமயத்தில் அபர்ணாவிற்கு பிரசவ வலி வருகிறது. கவினுக்கு போன் கால் செய்தும் எடுக்கவில்லை.
பல முறை முயற்சி செய்யும் அபர்ணா ஒரு கட்டத்தில் மயக்கமடைந்துவிடுகிறார். எதிர்ச்சியாக வீட்டிற்குள் வரும் பெண் ஒருவர் அபர்ணாவை மருத்துவமனையில் அனுமதிக்க, தாமதமாக கவின் மருத்துவமனைக்கு வருகிறார். ஆனால், கவின் வருவதற்குள் அபர்ணா தனது பெற்றோர்களுடன் சென்று விடுகிறார். ஆனால், குழந்தை மருத்துவமனையிலேயே இருக்கிறது.
தங்களுடைய குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு பெற்றோர்களுடன் அபர்ணா சென்றுவிட்டார் என்று அபர்ணா மீது கோபமடைகிறார் கவின். இதன்பின் குழந்தையை தூக்கிக்கொண்டு அன்னை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று எண்ணி ஆசிரமத்திற்கு செல்லும் கவின், அது சரியான முடிவு அல்ல என்று குழந்தையை தன்னுடன் வீட்டிற்கு எடுத்துச்சென்று பல கஷ்டங்களை எல்லாம் சமாளித்து வளர்க்கிறார்.
சில வருடங்கள் அப்படியே செல்ல, கவினின் மகன் ஆத்தியாவும் வளர்ந்து பள்ளியில் சேர்ந்து படிக்க துவங்குகிறார். இந்த சமயத்தில் கவினுக்கு பெரிய கம்பெனியில் இருந்து விடிவி கணேஷ் மூலம் நல்ல வேலை கிடைக்கிறது. கவினுக்கு வேலை கிடைத்துள்ள அதே கம்பெனியில் தான் அபர்ணாவும் வேலை செய்து வருகிறார்.
பல வருடங்களுக்கு பின் அபர்ணாவை பார்க்கும் கவின் என்ன செய்தார்? தனது மகனை ஏன் மருத்துவமனையில் அபர்ணா விட்டு சென்றார்? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் கவின் கைதட்டல்களை சொந்தமாக்கியுள்ளார். ஆம், எதார்த்தமான சிறந்த நடிப்பு. குறிப்பாக எமோஷன் மற்றும் முன் கோபப்படும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். படத்தின் துவக்கத்தில் தனது வாழ்க்கையில் அழுகை வந்ததே இல்லை என்று கூறும் கவின், தனது மகனுக்காக முதல் முறையாக அழும் காட்சி சூப்பர்.
கதாநாயகி அபர்ணா தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. கவினுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். கவினின் நண்பனாக வரும் நடிகர் ஹரிஷ் எதார்த்தத்தில் நமக்கு உதவும் நண்பனை பரிதிபலிக்கிறார்.
பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் பெரிதாக படத்தில் வேலை இல்லை. கவின் மகனாக நடித்துள்ள இளன் அனைவரின் மனதை தொடுகிறார். மற்றபடி அனைவரும் கதையின் ஓட்டத்தில் அழகாக பொருந்திருக்கிறார்கள்.
கணேஷ் கே. பாபுவின் இயக்கம் அற்புதம். பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் காதலால் இணையும் ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எதார்த்ததுடன் காட்டியுள்ளார். வித்தியாசமான கதைக்களம், கதையை விட்டு வெளியே செல்லாத திரைக்கதை. முதல் பாதி வேகமாக சென்றாலும், இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது.
எழில் அரசின் ஒளிப்பதிவு அழகு. ஜென் மார்ட்டின் பின்னணி இசை படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது. எடிட்டிங் படத்திற்கு பலம்.
பிளஸ் பாயிண்ட்
கவின், அபர்ணா தாஸ்
வித்தியாசமான கதைக்களம், இயக்கம்
ஒளிப்பதிவு
பின்னணி இசை
மைனஸ் பாயிண்ட்
இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது