தே தே பியார் தே 2: திரை விமர்சனம்
அஜய் தேவ்கன், மாதவன், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள தே தே பியார் தே 2 படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
51 வயதான லண்டன் என்.ஆர்.ஐ ஆஷிஷ் மெஹ்ராவும் (அஜய் தேவ்கன்), 27 வயதாகும் ஆயிஷா குரானாவும் (ரகுல் பிரீத் சிங்) 6 மாதகால லிவ்விங் உறவுக்கு பின் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர்.
அதற்காக ஆயிஷா இந்தியாவிற்கு சென்று தனது குடும்பத்திடம் சம்மதம் வாங்குவதாகவும், அதன் பின்னர் நீங்கள் வாருங்கள் என்றும் கூறி கிளம்புகிறார். சண்டிகரில் உள்ள தனது அப்பா (மாதவன்), அம்மாவிடம் (கெளதமி கபூர்) ஆஷிஷின் வயதை மட்டும் மறைத்து மெதுவாக காதல் வாழ்க்கை குறித்து கூற முயற்சிக்கிறார்.

அதற்குள் அவரது அண்ணி லிவ்விங் வாழ்க்கையில் ஆயிஷா இருந்ததை உளறிவிடுகிறார். அதனைத் தொடர்ந்து ஆயிஷா எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். வயது குறித்து அம்மா கேட்கும்போது, வயது வெறும் எண்தான் என்று கூறி வாயடைகிறார் ஆயிஷாவின் ராஜி.
நாங்கள் மாடர்ன் பெற்றோர், மிகவும் முற்போக்கானவர்கள் என்று கூறி ஆஷிஷை வரச் சொல்கிறார்கள். ஆஷிஷின் தோற்றத்தைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். தாங்கள் நினைத்தை விட அதிக வயது ஆளை தங்கள் மகள் காதலிக்கிறாளே என்று கவலைப்படுகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆஷிஷின் உண்மையான வயதை அறிந்து கோபப்படும் ராஜி; எப்படியாவது அந்த நபரை மகளை விட்டு விலகிவிடுமாறு செய்ய வேண்டும் என்று மனைவியிடம் கூறுகிறார். அதன் பின்னர் ஆஷிஷை மருமகனாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? ஆயிஷாவுடன் அவர் சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2019ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற தே தே பியார் தே திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை அன்ஷுல் ஷர்மா இயக்கியுள்ளார்.
சர்ச்சையான கதையை ஏற்றுக்கொள்ளும்படியான திரைக்கதையை அமைத்து கொண்டு சென்றதில் வெற்றி பெற்றுள்ளார் அவர். என்னதான் முற்போக்குவாதி என்று கூறிக்கொண்டாலும், மிக அதிக வயது வித்தியாசத்தில் உள்ள நபரை ரகுல் காதலிப்பதை மாதவன் ஏற்கவில்லை.
ஆனால், ஒரு அப்பாவாக மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று நினைத்து அவர்களை பிரிக்க நினைக்கும் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஜய் தேவ்கனின் வயது தெரிந்த பின்னர் காரில் செல்லும்போது மாதவன் ரேடியோவை ஆன் செய்ய சொல்வார்; அப்போது ராஜ் கபூரின் "மெயின் கியா கரூன் ராம்" பாடல் பாடுவது செம காமெடி டச்.

இந்தப் படத்தில் அஜய் தேவ்கனுக்கு நடிப்பதற்கு பெரிதாக வேலையில்லை. என்றாலும் அவருக்கான ஒன்றிரண்டு காட்சிகளில் பிரமாதப்படுத்தி விடுகிறார். குறிப்பாக, சிங்கம் படத்தின் ரெபெரென்ஸ், ஷாரூக் கானின் தில்வாலே படத்தை குறிப்பிடுவது போன்றவை செம கலாட்டா.
அதிலும், மீஸான் ஜப்ரியின் என்ட்ரி காட்சியைப் பார்த்து 'இதெல்லாம் நான் 30 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டேன்' என்பார். அதற்கு நண்பரான ஜாவித் ஜாபெரி 'அப்போது ரகுல் பிறக்ககூடவில்லை, அதனால் அவள் இதனை பார்த்திருக்கமாட்டாள்' என்று கூறி நோஸ்கட் செய்வார்.
இதுபோன்ற பல காமெடி காட்சிகள் படம் முழுக்க ஆக்கிரமிக்கின்றன. ரகுல், மாதவன் இருவருக்குமான பாசப்போராட்டம்தான் படமே. ஆகையால் ரகுல் பிரீத் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். மாதவனின் மனைவியாக வரும் அஞ்சு குரரானா, ஜாவித், இஷிதா தத்தா, மீஸான் ஆகியோரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர்.

முதல் பாதியில் ஒரு பாடல் கூட இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் ஆதித்யா, ரகுல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பார்த்து பழகியவை என்பதால் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
அதனை தவிர்த்து பார்க்கும்போது நல்ல ஒரு பேமிலி டிராமாவாக படம் ஈர்க்கிறது. அஜய் தேவ்கன் ஏதவாது கூறும்போதெல்லாம் very mature என்று கூறி கிண்டல் செய்யும் ரகுல், நானும் matureதான் வயது வித்தியாசம் தெரிந்துதான் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறேன் என்று கூறும் இடம் ஏற்புடையதாகத்தான் உள்ளது.
ஒரு காட்சியில் பருப்பு சாப்பிடாத ஆள் இருக்க முடியுமா, அப்படி இருக்கும் ஒருவரை எப்படி நம்ப முடியும் என்று மாதவன் கேட்பதில் என்ன லாஜிக் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் கனெக்ட் ஆக வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்திலேயே முந்தைய பாகத்தில் நடந்தவற்றை ஒரு ரீகேப் போட்டது சிறப்பு.
க்ளாப்ஸ்
திரைக்கதை
வசனங்கள்
கிளைமேக்ஸ்
காமெடி
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகள்
மொத்தத்தில் இந்த தே தே பியார் தே 2 ஜாலியான நல்ல பேமிலி டிராமாதான். பெரியவர்கள் கண்டு ரசிக்கலாம்.
