டிடெக்டிவ் உஜ்வலன்: திரை விமர்சனம்
தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் கிரைம் த்ரில்லராக வெளியாகியுள்ள 'டிடெக்ட்டிவ் உஜ்வலன்' மலையாளப் படத்தின் விமர்சனத்தை இங்கே பாப்போம்.
கதைக்களம்
பிளாச்சிக்காவு என்ற கிராமத்தில் எந்தவித பெரிய குற்றமும் நிகழவில்லை என்று மார்த்தட்டி கூறுகிறார் எஸ்.ஐ.சச்சின். அவர் கூறுவது போல் அந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக கொலை போன்ற எந்த சம்பவமும் நிகழ்ந்ததில்லை.
அதே சமயம், தன்னை டிடெக்ட்டிவ் என்று சொல்லிக் கொள்ளும் தியான் ஸ்ரீனிவாசன், ஆடு காணாமல்போவது போன்ற சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடித்து தருகிறார். ஒருநாள் பெரிய கேஸ் ஒன்றை கண்டுபிடிப்பேன், அப்போது நான் யார் என்று தெரியும் என தியான் பெற்றோரிடம் கூற, கிராமத்தில் ஒரு கொலை அரங்கேறுகிறது.
அதுவும் தியானுக்கு திருமணத்திற்கு பார்த்த பெண்ணின் தந்தை, முகமூடி அணிந்த நபரால் கொடூரமாக கொல்லப்படுகிறார். அதனை விசாரிக்கும் எஸ்.ஐ.சச்சின் ஹீரோ தியானிடம் உதவி கேட்கிறார். அவரும் துப்பறிந்து ஊரில் ஒருவரை கண்டுபிடித்து இவர்தான் கொலையாளி எனக் கூறி பிடித்துக் கொடுக்கிறார்.
அதன் பின்னரும் கொலைகள் அரங்கேற, உயரதிகாரியாக கிராமத்திற்கு வரும் ஷம்பு மஹாதேவின் நடவடிக்கைகள், தியானுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவர்தான் சைக்கோ கொலையாளி என எல்லோர் முன்னிலையிலும் சொல்கிறார்.
ஆனால் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதன் பின்னர் யார் கொலையாளி? ஏன் இந்த கொலைகளை செய்கிறார்? என்பதை ஹீரோ எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மலையாளத்தில் அதிகளவில் வெளியாகும் கிரைம் த்ரில்லர் ஜானர் படங்களில் இதுவும் ஒன்று என்றாலும், திரைக்கதை அமைப்பில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள் இயக்குநர்கள் ராகுல்.ஜி மற்றும் இந்திரநீல் கோபீகிருஷ்ணன்.
சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பால் இரவில் தனிமை என்றால் பயப்படும் ஹீரோ, எப்படி சைக்கோ கொலையாளி வில்லனை கண்டுபிடிக்கிறார் என்ற சுவாரஸ்ய கதையை அருமையாக கையாண்டிருக்கிறார்கள். உஜ்வலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தியான் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஆரம்பத்தில் டார்க் காமெடி செய்யும் அவர், பிற்பாதியில் சீரியஸாக கேஸை கையாள்வதில் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு ஈடாக ஸ்கோர் செய்வது எஸ்.ஐ.சச்சினாக வரும் ரோனி டேவிட் ராஜ் மற்றும் சிஜு வில்சன் ஆகிய இருவரும்தான்.
யார் அந்த சைக்கோ என்ற சஸ்பென்ஸை கடைசிவரை மெய்ன்டெய்ன் செய்தவிதம் சிறப்பு. அதேபோல் சைக்கோவுக்கான பிளாஷ்பேக் பல படங்களை நியாபகப்படுத்தினாலும், கதை ஏற்ப அமைந்துள்ளது.
டெக்னலாஜி பெரிதாக இல்லாத காலகட்டத்தில் கதை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், கொலையாளியை கண்டுபிடிப்பது கடினம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக 232 பேர் மட்டுமே வாழும் ஊரில் ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லையா? அது ரொம்ப டூமச் பாஸ் என கேட்க தோன்றுகிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தனது மேனரிஸத்திலேயே மிரட்டுகிறார். கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டை அதிகம் கிரைம் த்ரில்லர் பார்ப்பவர்கள் யூகித்துவிடலாம். ஒரு சில கேள்விகளுக்கு விடை கூறவில்லை. எனினும் இரண்டாம் பாகம் வருகிறது என்று அறிவித்திருப்பதால் அதில் இருக்கும் என நம்பலாம்.
இரண்டு போஸ்ட் கிரெடிட் சீன்ஸ் வருகிறது; அவற்றை தவறவிட்டுவிடாதீர்கள். டெக்னிக்கலாக படம் வலுவாக உள்ளது. சவுண்டிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் கச்சிதம்.
க்ளாப்ஸ்
திரைக்கதை
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
காமெடி காட்சிகள்
பல்ப்ஸ்
ஒரு சில குறைகளை தவிர்த்திருக்கலாம்