தி டெவில் (கன்னடம்): திரை விமர்சனம்
தி டெவில்
தர்ஷன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள தி டெவில் கன்னட திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
கர்நாடக முதல்வர் ராஜசேகர் ஊழல் வழக்கில் சிறை செல்ல, அவரது மகனை பொறுப்பில் அமர வைக்கலாம் என்று ஆலோசகர் அச்யுத் குமார் கூறுகிறார். ராஜசேகர் முதலில் மறுத்து பின் சரி என்று கூற, அச்யுத் குமார் லண்டன் சென்று முதல்வரின் மகன் தனுஷைப் (தர்ஷன்) பார்த்து ஷாக் ஆகிறார்.
முதல் சந்திப்பிலேயே தனுஷ் ஒருவரை சுட்டுக்கொல்கிறார். போலீஸை வைத்துக்கொண்டே கொலை செய்து அவர்களுக்கு பணம் கொடுக்கிறார். அவரிடம் முதல்வர் இருக்கையில் அமர வருமாறு கூற, என் சுதந்திரம் பறிபோய்விடும் என்று வர மறுக்கிறார் தனுஷ்.

அச்யுத் குமார் இந்தியா திரும்ப முதல்வரின் மகன் இவர்தான் என்று தனுஷின் புகைப்படம் செய்திகளில் வருகிறது. இதனால் நெருக்கடி அதிகரிக்க அவரைப்போலவே உள்ள கிருஷ்ணாவை (தர்ஷன்) சினிமாவில் ஹீரோவாக்குகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி தனுஷாக அவரை நடிக்க வைக்கிறார்.
சிறிய ஹோட்டல் நடத்தி வந்த கிருஷ்ணா தேர்தல் பரப்புரையில் இயல்பாக சாமானிய மனிதராக பேசுவது, நடந்துகொள்வது எல்லாம் மக்களை கவர்கிறது. இதனை செய்திகளில் கவனித்துக் கொண்டிருக்கும் தனுஷ், என்னிடத்தில் இன்னொருவனா என்று கூறி இந்தியா கிளம்ப பின்னர் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
கன்னடத்தில் சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் தர்ஷன், ரசிகர் கொலை சர்ச்சையால் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டதால் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவரது நடிப்பில் படம் வெளியாகுமா என்ற ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்த நிலையில் தி டெவில் திரைப்படம் வெளியாகியுள்ளது.
வம்சி, சித்தார்த்தா, தராக் படங்களை இயக்கிய பிரகாஷ்தான் இப்படத்தை உருவாக்கியுள்ளார். அரசியலில் நடக்கும் பல சூழ்ச்சிகளை நேர்த்தியாக காட்டியுள்ளார். அரசியல் சார்ந்த காட்சிகளை பல படங்களில் பார்ந்திருந்தாலும் ரசிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் பாதியில் த்ரில்லர் மோடில் திரைக்கதை பயணிப்பதால் டல் அடிக்கவில்லை.

தர்ஷன் இரட்டை வேடங்களில் அபாரமாக நடித்துள்ளார். அப்பாவியான இளைஞனாக கிருஷ்ணா கதாபாத்திரத்திலும், கொடூர வில்லனாக தனுஷ் கதாபாத்திரத்திலும் வேரியேஷன் காட்டியுள்ளார். தனது ரசிகர்களுக்காகவே பல வசனங்களை தர்ஷன் பேசியுள்ளார். அதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமெண்ட்டாக இருக்கும்.
கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்து மெட்ராஸ் ஐ'யா? என்று ஒருவர் கேட்க, அதற்கு தர்ஷன் 'சென்னை (ஐ)' என்று பதிலளிப்பது போன்ற காமெடிகளையும் செய்துள்ளார். அச்யுத் குமார் சகுனி போன்ற கதாபாத்திரத்தை செய்திருந்தாலும், அவர் நினைப்பதற்கு எதிர்மறையாக தர்ஷன் நடந்துகொள்ளும் காட்சிகள் அலப்பறை.
ஹீரோயின் ரச்சனா ராய் நடிப்பில் இயல்பாகவும், பாடல்களில் கிளாமராகவும் தனது பணியை நன்றாக செய்துள்ளார். முதல்வர் ராஜசேகராக மகேஷ் மன்ஞ்ரேக்கர் அதிக பேசாமலேயே வில்லத்தனம் செய்கிறார். அஜனீஷ் லோக்நாத்தின் இசை பிரமாதம். சுதாகர் எஸ்.ராஜ்ஜின் கேமரா ஒர்க் கண்களுக்கு விருந்து. படம் பிரம்மாண்டமாக தெரிய அதுவே முக்கிய காரணமாக உள்ளது.
க்ளாப்ஸ்
தர்ஷனின் நடிப்பு திரைக்கதை பின்னணி இசை ட்விஸ்ட்கள்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம் ஒரு சில லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் இந்த தி டெவில் ஒரு பொலிட்டிக்கல் மிரட்டல். தர்ஷன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.