மாறன் திரைவிமர்சனம்
கார்த்திக் நரேன் இயக்கம், தனுஷ் நடிப்பு, Investigative journalist பற்றிய கதை என மாறன் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று மார்ச் 11ம் தேதி மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
படம் எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம்
கதை:
படத்தின் தொடக்கத்தில் மாறன் தனுஷின் அப்பா ராம்கி ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். நீதி, நேர்மை என இருக்கும் அவர் ஒரு பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்தது பற்றி ஆதாரத்துடன் பத்திரிகையில் எழுதுகிறார்.
ராம்கியின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரை பிரசவத்திற்காக ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்லும்போது ரௌடிகள் வழிமறிக்கின்றனர். அவர்களுடன் சண்டை போட்டு ராம்கி உயிரை விடுகிறார். மாறன் கண் எதிரிலேயே அப்பாவை கொலை செய்கின்றனர்.
அதற்கு பிறகு பிரசவத்தில் பெண் குழந்தை பிறக்க, அம்மாவும் இறந்துவிடுகிறார். மாறன் தனது தங்கையை தானே வளர்ப்பதாக கூறி வளர்த்து பெரிய ஆள் ஆக்குகிறார். மீடியாவில் அவர் அப்பாவை போலவே நேர்மையாக இருப்பதால் தொடர்ந்து வேளையில் இருந்து நீக்கப்படுகிறார். அதன் பின் மாளவிகா மோகனன் வேலை செய்யும் வெப்சைட்டில் வேலைக்கு சேருகிறார் அவர். அங்கு அவர் வேலைக்கு சேரும் முறை, இப்படி எல்லாம் எந்த மீடியாவில் நடக்கும் என கேட்கும் அளவுக்கு இருக்கும்.
வேலையில் திறமையை காட்டும் மாறன் பல பெரிய விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். அப்போது தான் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி இடைத்தேர்தலில் வாக்கு எந்திரத்தில் சில முறைகேடுகளை செய்து ஜெயிக்க முயற்சிக்கும் விஷயம் தனுஷுக்கு தெரிய வருகிறது. அது பற்றிய செய்தி வெளியானதால் கடும் கோபத்தில் தனுஷை கொல்ல முயற்சிக்கிறார் அவர். ஆனால் முடிவதில்லை.
அதன் பின் ஒருகட்டத்தில் தனுஷின் தங்கை எரித்து கொலை செய்யப்படுகிறார். அதை செய்தது யார் என்பதை தனுஷ் கண்டுபிடித்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் தொடக்கத்தில் ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக காட்டப்படும்போதே நிச்சயம் அவரை கொலை செய்ய போகிறார்கள் என நம்மால் கணிக்க முடியும். படத்தின் தொடக்கத்திலேயே இப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து சலித்த க்ளிஷே காட்சிகள் தான்.
எப்போதும் குடித்துவிட்டு விழுந்துகிடக்கும் ரோல் என்பதால் என்னவோ தனுஷுக்கும் நடிப்பில் ஸ்கோப் இல்லை. தனுஷ் எப்படி நடிக்கக்கூடியவர் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
மாஸ்டர் படம் போல இல்லாமல் மாளவிகா மோகனனுக்கு மாறனில் நடிப்பை வெளிக்காட்ட நேரம் கிடைத்து இருக்கிறது. ஆனால் அவரது ரோல் மீடியாவில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் குடி கும்மாளம் என இருப்பார்கள் என பொதுவாக காட்டுவது போல இருக்கும். வில்லன் சமுத்திரக்கனி தனது ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார்.
க்ளாப்ஸ்
மாறன் படத்தின் எடிட்டருக்கு தான் பெரிய கிரெடிட் கொடுக்க வேண்டும். மையமே இல்லாத கதையில் காட்சிகளை வெட்டி ஒட்டி நகர்த்தி இருக்கிறார்.
பல்ப்ஸ்
படத்தின் பெரிய வில்லனே கதை தான். எதை நோக்கி நகர்கிறது என புரியாமல் க்ளைமாக்ஸ் வரை நீள்கிறது கதை. அண்ணன் - தங்கை செண்டிமெண்ட், லவ் என எதிலுமே அழுத்தம் இல்லாமல் தான் இருக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில ட்விஸ்டுகள் கூட ஆச்சர்யம் தரவில்லை.
அரத பழசான கதை. "மீடியா-ன்னா என்ன வேணும்னாலும் எழுதுவீங்களாடா" என படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் பேசும் ஒரு வசனம் வரும். மீடியாவை குறை சொல்ல காட்டிய முனைப்பை சற்று கதையிலும் காட்டி இருக்கலாம் இயக்குனர் கார்த்திக் நரேன். இப்படி அழுத்தமான வசனங்கள் ஹீரோ தனுஷுக்கும் எழுதி இருக்கலாம் அவர்.
மொத்தத்தில் 'மாறன்' படத்தை பார்த்து முடிக்கும்போது 'இது உண்மையிலேயே துருவங்கள் 16 எடுத்த கார்த்திக் நரேன் படம் தானா?' என கேட்க தோன்றும்.
ரேட்டிங்: 1.75 / 5