Do Deewane Seher Mein: திரை விமர்சனம்

By Sivaraj Feb 21, 2026 08:12 AM GMT
Report

Do Deewane Seher Mein

பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தயாரிப்பில் சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியாகியுள்ள Do Deewane Seher Mein இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

Do Deewane Seher Mein: திரை விமர்சனம் | Do Deewane Seher Mein Movie Review

கதைக்களம்

வாஷிங் மெஷின் விற்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷஷாங்க் (சித்தாந்த் சதுர்வேதி), எப்போதெல்லாம் மீட்டிங் என்று வருகிறோதோ அப்போதெல்லாம் தனக்கு இருக்கும் ஒரு பிரச்சனையால் எதையாவது செய்து தவிர்க்கிறார். விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ரோஷிணி(மிருணாள் தாக்கூர்) தனது மூக்கு அழகாக இல்லை என்று நினைத்து எப்போதும் கண்ணாடி அணிந்துகொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் ரோஷிணியை பெண் பார்க்க ஷஷாங்க் தனது குடும்பத்துடன் அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு இருவரும் தனியாக பேசிக்கொள்ள, ஏற்கனவே ஒருவரை நிராகரித்ததைக் கூறி சில விஷயங்களை கேட்கிறார் ரோஷிணி.

Do Deewane Seher Mein: திரை விமர்சனம் | Do Deewane Seher Mein Movie Review

அதெற்கெல்லாம் ஷஷாங்க் ஓகே சொன்னாலும், மழுப்பலாக பேசி தனக்கு திருமணமே வேண்டாம் என்று ரோஷிணி கூறிவிட, எதற்காக தனக்கு நோ சொன்னாய் என்று கேட்டு பின்னால் அலைகிறார் ஷஷாங்க். ஒரு கட்டத்தில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு பழக ஆரம்பிக்கின்றனர்.

எல்லாம் நன்றாக சென்ற சூழலில் ஷஷாங்கிற்கு வேறொரு பெண்ணைப் பார்க்கிறார் அவரது அப்பா. அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் ரோஷிணி கோபத்துடன் செல்ல, பின் இருவரும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்களா? இருவருக்கும் உள்ள தனிப்பட்ட தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வந்தார்களா என்பதே மீதிக்கதை.

Do Deewane Seher Mein: திரை விமர்சனம் | Do Deewane Seher Mein Movie Review

படம் பற்றிய அலசல்

2024யில் வெளியான யுத்ரா படத்தை இயக்கிய ரவி உத்யவார் இப்படத்தை இயக்கியுள்ளார். காதல் கதையில் தனிப்பட்ட நபர்களுக்கு உள்ள பிரச்சனையை பேச முயற்சித்துள்ளார் இயக்குநர்.

ஆனால், பிரச்சனையை பெரிதாக பேசாமல் காதலை நோக்கி திரைக்கதையை கொண்டு சென்றதால் அதன் வீரியம் குறைந்துவிட்டது. ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர மற்ற காதல் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் தேவையான இடங்களில் பின்னணி இசையை தவித்ததுதான். பெரும்பாலும் பார்த்து பழகிய காட்சிகள்தான் என்றாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் முதல் பாதியை தாண்டவே அதிக நேரம் எடுப்பதுபோல் தோன்றுகிறது.

சித்தாந்த், மிருணாள் தாக்கூர் இருவரும் நடிப்பில் தங்களது பங்களிப்பை நேர்த்தியாக செய்துள்ளனர். மிருணாளை புகைப்படம் எடுத்து சித்தாந்த் செய்யும் ஒரு விஷயம் 'அட நல்லாருக்கே!' என்று சொல்ல வைக்கிறது.

Do Deewane Seher Mein: திரை விமர்சனம் | Do Deewane Seher Mein Movie Review

கிளைமேக்ஸ் காட்சியில் உரையாற்றுவதில் சித்தாந்த்தும், எது அழகு என்று சண்டை போடும் காட்சியில் மிருணாளும் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர். தனக்கு கணவருக்கு பிடித்த உடலமைப்பில் இருக்க வேண்டும் என்று எப்போதும் டயட்டில் இருந்து, பின் அவர் கூறிய ஒரு வார்த்தைக்காக உடைந்து அழும் காட்சியில் சந்தீபா தர் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தில் காமெடிக்கு மிகப்பெரிய பஞ்சம் இருந்தாலும், மிர்ணாளின் பாட்டி கதாபாத்திரம், சித்தாந்த்தின் நண்பராக வரும் நவீன் கௌஷிக் ஆகியோர் ஓரிரு இடங்களில் சற்று சிரிக்க வைக்கின்றனர்.

மலை பிரதேசங்களில் வரும் காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கௌஷல் ஷா. 5 இசையமைப்பாளர்கள் பாடல்களை கொடுத்திருந்தாலும், பெரிதாக எதுவும் கவரவில்லை. என்றாலும் சவுண்ட் மிக்சிங் சிறப்பு. நல்ல கதைக்கருவை அழகான காதல் படமாக கொடுக்க தவறிவிட்டார் இயக்குநர்.

Do Deewane Seher Mein: திரை விமர்சனம் | Do Deewane Seher Mein Movie Review

க்ளாப்ஸ்

சித்தாந்த், மிருணாளின் நடிப்பு ஒளிப்பதிவு சவுண்ட் மிக்சிங்

பல்ப்ஸ்

தொய்வான திரைக்கதை பார்த்து பழகிய காதல் காட்சிகள்

மொத்தத்தில் இந்த Do Deewane Seher Mein பார்வையாளர்களின் பொறுமைக்கு சோதனை.

ரேட்டிங்: 2.25/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US