டாக்டர் திரைவிமர்சனம்
கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொடர்ந்து திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சிவகார்த்திகேயனின் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கே.ஜே. ஆர் மற்றும் எஸ்.கே நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த டாக்டர், ஆபரேஷனை சரியாக செய்தாரா..? இல்லையா..? பார்க்கலாம்..
கதைக்களம்
ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் வருண் { சிவகார்த்திகேயன் } 6 மாதத்திற்கு முன்பு, கதாநாயகி பத்மினியை { பிரியங்கா } பெண் பார்த்து சென்றுள்ளார். ஆனால், எப்போதும் கலகலப்பாக இல்லாமல், வெரப்பாக இருக்கும் சிவகார்த்திகேயனை, பிரியங்காவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது. இருந்தாலும், சிவகார்த்திகேயன் பிரியங்காவிடம் காதலில் விழுந்துவிட்டதால், அவரை பிரிய முடியாமல் தவிக்கிறார்.
கதாநாயகியாக வரும் பிரியங்காவிற்கு அண்ணியாக அர்ச்சனாவும், அண்ணியின் மகளாக சாராவும் நடித்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில், பள்ளிக்கு சென்றிருந்த அர்ச்சனாவின் மகள் தீடீரென கடத்தப்படுகிறாள். இதனை அறியும் குடும்பத்தினர் பதற்றமடைய, சிவகார்த்திகேயன் அந்த குடும்பத்திற்கு உதவ வருகிறார். பள்ளியில் விசாரித்த கையுடன் காவல் துறையை நாடும் சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் போலீசால் அந்த சிறு பெண்ணை காப்பாற்ற முடியாது என்று நினைத்து, அந்த குடும்பத்துடன் அப்பெண்ணை தேடும் பணியில் அவரே ஈடுபடுகிறார்.
பெண்களை கடத்தி உடல் உறுப்புகளை விற்கும் நபர்களை தேடி பிடிக்க, அந்த குடும்பத்துடன் பல விஷங்களை சேர்ந்து செய்து வரும் சிவகார்த்திகேயன், இறுதியில் அந்த பெண்ணை கண்டு பிடித்தாராகளா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். தமிழில் முதல் படமாக இருந்தாலும், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
அர்ச்சனா, தீபா, இளவரசு, அருண் அலெக்சாண்டர், யோகி பாபு, சுனில் என அனைவரின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். முக்கியமாக Redin Kingsley-யின் நகைசுவையான நடிப்பு ஹீரோவின் நடிப்பையே மிஞ்சுகிறது. வில்லனாக வரும் நடிகர் வினைக்கு இன்னும் கொஞ்சம் வில்லத்தனத்தை கூட்டியிருந்திருக்கலாம்.
பாடல் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். முக்கியமாக அந்த கிளைமாஸில் வரும் { காச காசா } சூப்பர். ஆர். நிர்மலின் படத்தொகுப்பு மற்றும் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, படத்திற்கு பலம் சேர்க்கிறது.
நெல்சன் திலீப்குமாரின் இயக்கம் மற்றும் திரைக்கதை சூப்பர். அவர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் வேற மாரி, வேற மாரி. ஆனால், சில இடங்களில் கொஞ்சம் லாஜிக்கை கவனித்து இருக்கலாம். மற்றபடி தனது ஸ்டைலில் திரில்லர் கலந்த நகைச்சுவை விருந்து வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.
க்ளாப்ஸ்
இயக்குனர் நெல்சனின் கதைக்களம், திரைக்கதை, இயக்கம்
சிவகார்த்திகேயன் முதல் Redin Kingsley வரை அனைவரின் நடிப்பு
அனிருத்தின் பின்னணி இசை, பாடல்கள்
பல்ப்ஸ்
சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங்
மொத்தத்தில் டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்..
3/5