திரௌபதி 2 திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சையான களங்களை தேர்ந்தெடுத்து, அதை படமாக எடுத்து சில வெற்றிகளையும் பெற்ற மோகன் ஜி தனக்கு பெரிய வெற்றி கொடுத்த திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார், இந்த படம் அந்த வெற்றியை கொடுத்ததா, பார்ப்போம்.

கதைக்களம்
வாத்தியார் பிரபாகரன்(ரிச்சர்ட்) மனைவி இழந்து, மகளை அன்பாக வளர்த்து வர, அவருக்கு ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி ஒருவர் வருகிறார்.
அதன் பின்பு ஊர் கோவில் பராமரிப்பு சரியாக இல்லாததை அறிந்து அதை தான் செய்வதாக ஒரு பெண் வர, அந்த கோவிலுக்கு சென்றது அந்த பெண் பல நூற்றாண்டு முன் வாழ்ந்த திரௌபதியாக மாறி கதை சொல்ல ஆரம்பிக்கிறார். கதையில் வீர வள்ளலார் பார்வையில் காடவராயன்(ரிச்சர்ட்) வளர்கிறார்.

அப்போதும் மதுரையில் உள்ள கில்ஜி படை மக்களை மதம் மாற சொல்லி கொடுமைகளை செய்து வருகின்றர். அதே போல் டெல்லியில் இருக்கும் துக்ளக் பார்வையும் தமிழகத்தில் விழ, அவரும் இங்கு வருகிறார்.
வீர வள்ளலார் ஒரு கட்டத்தில் எதிரிகளின் துரோகத்தால் இறக்க, அவர்களை பழிவாங்கி மக்களை காக்கும் பொறுப்பு காடவராயனுக்கு வருகிறது. காடவாராயன் துக்ளக், கில்ஜி என பல எதிரிகளை கொன்று மக்களை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
நம் முன்னோர்கள் எல்லோரும் நம்மை படையயெடுத்த ராஜாக்களால் கண்டிப்பாக கொடுமைகளை அனுபித்தார்கள், அது வெள்ளைக்காரன் வரை தொடர்ந்தது. அதில் ஒரு பகுதியாக துக்ளக், கில்ஜி போன்றோர் கொடுமைகளை காட்டியுள்ளனர்.
ஆனால், இதை எந்த அளவிற்கு சுவாரஸ்யமாக சொன்னார்கள் என்பதே கேள்விக்குறி. ஏனெனில் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட மதத்தினரை தாக்கி மட்டுமே காட்சிகள் வருவது வெறுப்புணர்வை தான் தூண்டும்.
அதோடு படத்தில் நடித்தவர்கள் பலரும் படு செயற்கையாக வந்து செல்கின்றனர்,கொஞ்சம் கூட எமோஷ்னல் காட்சிகள் எதுவும் மனதிற்கு ஒட்டவில்லை.

சின்ன பட்ஜெட்டில் இப்படியொரு படத்தை உருவாக்க முயற்சித்து சிறப்பு, ஆனால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாதது, செயற்கையான நடிப்பு இவர்கள் பட்ட கஷ்டங்களையும் மறக்க அடிக்கிறது.
அதோடு ஜோசியத்தை நம்பி குழந்தை பிறப்பதை தள்ளி போடும் தாய், குலதொழில் செய்வதை பெருமையாக சொல்வது போன்ற பல பிற்போக்கு காட்சிகள் உள்ளது.
துக்ளக்-ற்கு பூனை என்றால் அலர்ஜி, அதை வைத்து மாஸ்டர் ப்ளான் போடுவார்கள், சரி எதோ செய்ய போகிறார்கள்ள் என்றால் அதுவும் புஸ் ஆகிறது, இப்படி பேப்பரில் நன்றாக இருந்த சில காட்சிகள் கூட திரையில் சிறப்பாக வரவில்லை. டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை நன்றாக உள்ளது.

க்ளாப்ஸ்
சின்ன பட்ஜெட்டில் இப்படியான முயற்சி.
ஜிப்ரான் இசை
பல்ப்ஸ்
சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதை.
மொத்தத்தில் இந்த திரௌபதி 2 சுவாரஸ்யம் இன்றி பொறுமையை தான் சோதிக்கிறது.
