Fall 2: Deadpoint திரை விமர்சனம்
Fall 2: Deadpoint
ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Fall 2: Deadpoin சர்வைவல் த்ரில்லர் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
சாகசங்களை மேற்கொள்ளும் தனது சகோதரி ஷைலோ ஹன்டரின் மரணத்திற்கு பிறகு ஜாக்ஸ் ஹன்டர் துயரத்தில் மூழ்கியிருக்கிறார். அந்த சமயத்தில் ஷைலாவின் மீட்கப்பட்ட ட்ரக் ஒன்றை விற்பதற்காக, அவளது தோழி லூஸ் என்ற பெண் ஜாக்ஸை சந்திக்கிறார்.
ட்ரக்கின் உள்ளே ஷைலோ எழுதிய எதிர்கால திட்டங்களை இருவரும் படிக்கின்றனர். அதில் தாய்லாந்தில் உள்ள மலையில் சாகச பயணம் மேற்கொண்டு டிராகன் சிலையை பார்க்க வேண்டும் என்ற குறிப்பு உள்ளது.
அதனைக் குறிப்பிட்டு மலை சாகச பயணம் மேற்கொள்ளலாம் என ஜாக்சிடம் கூறி லூஸ் அவளை தாய்லாந்திற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஜான் என்ற நபரை சந்திக்கும் இருவரும் டிராகனை அடைய பயணம் மேற்கொள்ள தங்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கோருகின்றனர்.
அதற்கு ஜான் 5000 டாலர்கள் ஆகும் என்று கூற, தயக்கத்துடன் இருவரும் சம்மதித்து மூவரும் பயணம் மேற்கொள்கின்றனர். தடை செய்யப்பட்ட வழியில், மோசமான பாதையில் மூவரும் பயணம் மேற்கொள்ள அவர்கள் என்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொண்டார்கள்? மூவரும் உயிரிபிழைத்தார்களா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
2022யில் வெளியான Fall திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி ஸ்பியரிக் சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர். இதற்கு முன் இவர்களது இயக்கத்தில் வெளியான ஜிக்ஸா, வின்செஸ்டர் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாலும், Fall இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்பதும் Fall 2-விற்கு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பின.
ஜாக்ஸின் மூவர் குழு மலையேறி, ஒரு கட்டத்தில் ஜானை பிரிந்து இருவர் மட்டுமே தப்பிக்க வேண்டும் என்ற கட்டம் வர படம் விறுவிறுப்பாக செல்கிறது. துருப்பிடித்த இரும்பு படிகள், நடைபாதை பலகைகள் ஆகியவற்றை பனி படர்ந்ததுபோல் காட்டும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
ஜானை (டாம் பிரிட்னி) பிரிந்ததும் ஜாக்ஸ், லூஸ் இருவரும் தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், 4000 அடி உயரத்தில் அவர்கள் சகஜமாக இருப்பதையும் பார்க்கும்போது நமக்கு எந்த பதட்டமும் வரவில்லை.

அதுவே படத்தை சுவாரஸ்யமற்றதாக மாற்றிவிடுகிறது. அதன் பிறகு வரும் ஒன்றிரண்டு ட்விஸ்ட் பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. அத்துடன் கிளைமேக்சில் வரும் சண்டைக்காட்சியும், அதற்கான காரணமும் தேவையில்லாத ஆணி. பிண்ணனி இசையும் பெரிதளவில் பதட்டத்தை கூட்டவில்லை.
ஜாக்ஸ் ஆக நடித்திருக்கும் ஹாரியேட்டும், லூஸ் ஆக நடித்திருக்கும் அர்சேமாவும், ஜேக்ஸாக வரும் டாம் பிரிட்டினியும் சுமாரான நடிப்பையே தந்துள்ளனர்.
க்ளாப்ஸ்
முதல் அரைமணிநேரம் ட்விஸ்ட்
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை சுமாரான நடிப்பு
மொத்தத்தில் இந்த Fall 2: Deadpoint படமாகவே Fall (சறுக்கி) ஆகிவிட்டது.